பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள்

பாலிவுட்டில் நடித்து திரை நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்திய சினிமாவின் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை நோக்கி செல்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நடிகை உஷா ஜாதவ்

ஆனால், கனவை எட்ட அவர்கள் படும்பாடு ஒரு கெட்ட கனவாக மாறுகிறது.

இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறும் பல நடிகைகளிடம் பேசியது பிபிசி.

ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் பெற்றோரை சம்மதிக்க வைத்து சிறு கிராமத்தில் இருந்து பாலிவுட் கனவுடன் மும்பைக்கு சென்றார் சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அப்போது அவருக்கு 19 வயது. யாரையும் தெரியாமல், நடிப்பில் இருந்த கொஞ்சம் முன் அனுபவத்தை வைத்துக் கொண்டு மும்பையில் வாய்ப்புத் தேடினார் சுஜாதா.

படத்தின் காப்புரிமை Getty Images

நடிக்க வாய்ப்பு வாங்கித் தரும் முகவர் ஒருவர் சுஜாதாவை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார். சுஜாதா எதுவும் யோசிக்கவில்லை. ஏனெனில் இவ்வாறு வீட்டிற்கு அழைத்து சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்று சுஜாதாவுக்கு கூறப்பட்டிருந்தது.

அடுத்து என்ன நடந்தது என்பது குறித்து சுஜாதா கூறியது கவலையளிக்கும் ஒன்றாக இருந்தது.

"அவருக்கு என்னை எங்கெல்லாம் தொட வேண்டுமோ அங்கெல்லாம் தொட்டார். என் ஆடைக்குள் அவர் கையை நுழைத்து, ஆடையை கழற்ற தொடங்கினார். நான் உறைந்து விட்டேன்" என்று பிபிசியடம் பேசிய சுஜாதா தெரிவித்தார்.

தன்னிடம் இருந்து விலகுமாறு சுஜாதா கூறிய போது, அதற்கு அந்த முகவர், சினிமா துறைக்கு வருவதற்கு "சரியான அணுகுமுறை" உனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

சுஜாதா கூறியது உண்மைதானா என்று சரிபார்க்க வழியில்லை என்றாலும், நடிக்க வாய்ப்புகள் தேடும் போது இவ்வாறு பல பாலியல் துன்புறுத்தலுக்கு தாம் ஆளாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.

ஒரு முறை காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்க சென்றதாகக் கூறும் சுஜாதா, சினிமாக்காரர்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அப்படித்தான் செய்வார்கள் என்று குறிப்பிட்டு அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

அவரது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சுஜாதா, இதனை பேசினால், விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் பேசுகிறோம் என்று இழிவுபடுத்துவார்கள் என்கிறார்.

நடிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால் பாலியல் உதவிகள் செய்ய வேண்டும் என்ற ஒன்று இந்திய திரைத்துறையில் வழக்கமாகி அதிகரித்து வருவதாகப் பலரும் கூறுகின்றனர்.

இந்த பிரச்சனை குறித்து பல இளம் நடிகைகளிடம் பேசியது பிபிசி.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

பாலிவுட் நடிகையான உஷா ஜாதவ், தாம் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகப் பேச முன்வந்தவர்களில் ஒருவராவார். பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து தேசிய விருது பெற்ற பின்பும் இதுபோன்ற தேவையில்லாத தொல்லைகள் வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

தனது கதையை கேட்டாவது பல நடிகைகள் இது போன்றவற்றை வெளிப்படுத்த முன்வருவார்கள் என்று நம்புவதாக உஷா கூறுகிறார்.

முதலில் பாலிவுட்டில் நுழைந்த போது, படத்தில் நடிக்க வேண்டும் என்றால் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உறங்க வேண்டும் என்று தமக்கு கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"நாங்கள் உனக்கு வேண்டியதை கொடுக்கிறோம். நீயும் எங்களுக்கு ஏதேனும் திருப்பி கொடுக்க வேண்டும்" என்று அவருக்கு சொல்லப்பட்டதை நினைவு கூர்கிறார் உஷா.

சிலர் வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக் கொள்வதாக கூறும் உஷா, தாம் எப்போதும் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிடுகிறார். இதனால் தனக்கு நடிக்க வாய்ப்பு வழங்காமல் சில தயாரிப்பாளர்கள் தம்மை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் எந்த நல்ல கதாபாத்திரங்களையும் பெற முடியாது என்று என்னை ஒரு தயாரிப்பாளர் சபித்தார்… உனக்கு எந்த நல்லதும் நடக்காது என்றார்."

ராதிகா ஆப்தே

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியதில் பிரபல நடிகை ராதிகா ஆப்தேவும் ஒருவர்.

சமீபத்தில் பேட்மேன் படத்தில் நடித்த அவர், திரையிலும் சரி திரைக்கு வெளியிலும் சரி பெண்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

"நான் இதுகுறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் இத்துறையில் உள்ள பல பெண்கள் பேசத் தயங்குவது எனக்கு புரிகிறது" என்றார் அவர்.

பாலிவுட்டில் நுழைய முறையான வழிவகை இல்லாததே இந்தப் பிரச்சனைகளுக்கு காரணம் என்கிறார் ராதிகா.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நடிகை ராதிகா ஆப்தே

தனிப்பட்ட தொடர்புகள், சமூக நடத்தை மற்றும் தோற்றம் ஆகியவற்றை வைத்தே இந்தியாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுவே ஹாலிவுட்டை எடுத்து கொண்டால் அங்கு நாடகப் பள்ளிகளில் பயிற்சி பெறுதல், மேடைகளில் நடித்தல் என முறையான செயல்முறை உண்டு.

ஹாலிவுட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடந்த #MeToo எழுச்சியை போல, பாலிவுட்டிலும் நடைபெற வேண்டும் என்கிறார் ராதிகா. ஆனால், பெரிய பெரிய நடிகைகள் இதுகுறித்து பேசவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கவோ முன்வராத வரை இது நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுமியாக இருந்த போது தாம் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகப் பேசிய நடிகை கல்கி கொச்லின் பிபிசியிடம் கூறுகையில், "தங்களுக்கு நடந்ந மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கும் இளம் நடிகைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது" என்கிறார்.

பாலிவுட்டில் மட்டும் அல்லாது, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் திரைத்துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களை காணமுடிகிறது. அதில் உள்ள நடிகைகளும் இதுகுறித்துப் பேச தொடங்கியுள்ளனர்.

ஆண்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்கள் மட்டும் அனுபவிக்கும் ஒன்றல்ல.

தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் பிரபல நடிகர் ரன்வீர் சிங் குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நடிகர் ரன்வீர் சிங்

இதே போல நடிகர், இயக்குநர் மற்றும் பாடகரான ஃபர்ஹன் அக்தரும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியவர்களில் ஒருவர்.

பாலியல் கொடுமைகள் குறித்து பேசும் பாலிவுட் நடிகைகளுக்குத் தாம் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார் பிபிசியிடம் பேசிய ஃபர்ஹன்.

பாலிவுட்டில் #MeToo எழுச்சி விரைவில் நடைபெறும் என்று நம்பும் அவர், பெண்கள் இதுகுறித்துப் பேச ஆரம்பித்தால்தான் இது சாத்தியம் என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நடிகர் ஃபர்ஹன் அக்தர்

ஆனால் பிபிசியிடம் பேசிய பெண்கள் கூறுகையில், இந்தப் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கப் பாதுகாப்பான வழி வேண்டும் என்கின்றனர். சினிமா துறையில் உள்ள பெரும் புள்ளிகள் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

அதுவரை, பாலியல் கொடுமைகளும் துன்புறுத்தல்களும் பாலிவுட் சொல்ல விரும்பும் கதைகளில் ஒன்றாகவே இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :