மாநில சுயாட்சியை உறுதி செய்ய நடவடிக்கை: ஸ்டாலின் மற்றும் சந்திரசேகர ராவ்

  • 29 ஏப்ரல் 2018
ஸ்டாலின் மற்றும் சந்திராசேகரராவ்

தெலங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில சுயாட்சியை மீட்பது குறித்து பேசுவதற்காக திமுக தலைவர் மு.கருணாநிதி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இன்று(ஏப்ரல் 29) சென்னை கோபாலபுரத்தில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் .

இருமாநில அரசியல் தலைவர்களின் சந்திப்பை அடுத்து, ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மாநில அரசின் அதிகாரத்தை பற்றி விரிவாக பேசியதாக தெரிவித்தனர்.

இந்தியாவின் எதிர்கால நன்மைக்காகவே பிற மாநில அரசியல் தலைவர்களை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய தெலங்கானா ரஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், ''இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் பேசியுள்ளோம். மூன்றாவது அணி அமைக்கிறோம் என்று ஊடகங்கள் பேசுகின்றன. நாங்கள் மாநில சுயாட்சி குறித்து விவாதித்தோம்,'' என்று கூறினார்.

மேலும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் கூறினார். ''தென்மாநிலங்களின் உரிமைகளை கேட்டுப்பெறுவோம். எங்களது சந்திப்பை அரசியலாக்க வேண்டாம்,'' என்று சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

விரைவில் தெலங்கானாவில் நடைபெறவுள்ள நலத்திட்ட தொடக்கவிழாவில் ஸ்டாலின் பங்கேற்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்பதாக கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ''சந்திரசேகர ராவ் கலைஞரை நேரில் சந்தித்து, உடல்நலன் பற்றி விசாரித்தார். இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் உரிமையை பெறுவது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி ஆலோசித்தோம். மத்திய அரசின் சர்வாதிகார போக்கை குறித்து நீண்ட நேரம் விவாதித்தோம். தொடர்ந்து பேச முடிவெடுத்துள்ளோம். இது ஆரோக்கியமான சந்திப்பு. மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது குறித்தும் பேசினோம்,'' என்றார்.

இரு மாநில அரசியல் தலைவர்களும் மூன்றாவது அணி அமைக்க முயற்சி எடுத்துவருகின்றனரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது சந்திரசேகர ராவ் தனது சகோதரர் ஸ்டாலினை சந்திக்க வந்ததாகவும், மாநில சுயாட்சி குறித்து பல்வேறு மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துவருவதாகவும் கூறினார். அதே நேரம் ''எல்லா விவகாரங்களைப் பற்றியும் பேசியதாகவும், எல்லாவற்றையும் செய்தியாளர்களிடம் சொல்ல விரும்பவில்லை,'' என்றும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்