நாளிதழ்களில் இன்று: 2000 மெகாவாட் பற்றாக்குறை: பராமரிப்பு என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு?

  • 30 ஏப்ரல் 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள், கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (தமிழ்)

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடையத் தொடங்கி இருப்பதால் மின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாததால் சுமார் 2,000 மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பராமரிப்புப் பணி என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இல்லை என்றும், தேவையான அளவுக்கு மின் உற்பத்தி நடப்பதாகவும் மின் துறை அமைச்சர் கூறி வருகிறார். அதில் உண்மை இல்லை என்று நேற்று சென்னையில் நடந்த தமிழ்நாடு மின் ஊழியர் அமைப்பின் கூட்டத்தில் கூறப்பட்டதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு நிதி விவரங்களை இதுவரை தாக்கல் செய்யாத சென்னை கிறிஸ்தவ கல்லூரி, சென்னை ஐஐடி, டெல்லி ஐஐடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உட்பட 3,292 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதுமுள்ள 1,300 கடைகள் மூடப்பட்டன என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமர் மோதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாகவும் தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

தினமலர்

பாஜக-காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணியை உருவாக்க முயற்சிக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து செய்தி கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர்.

படத்தின் காப்புரிமை DINAMALAR

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு பகுதிக்கு வந்த அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனை சூழ்ந்த பெண்கள், நீங்கள் வெற்றி பெற்றால் தங்களுக்கு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்ட பணம் எங்கே என்று கேட்டு அதற்கு டோக்கனாக வழங்கப்பட்டதாக கூறப்படும் இருபது ரூபாய் நோட்டுகளை காண்பித்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அருகிலுள்ள மருத்துமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்த அம்மாநில காவல்துறைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களின் நெஞ்சுப்பகுதியில், அவர்களின் சாதி எழுதப்பட்டு வகைப்படுத்தப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: