மத்திய பிரதேசம்: போலீஸ் தேர்வுக்கு வந்தவர்கள் மார்பில் 'சாதி' முத்திரை

மத்திய பிரதேச மாநிலத்தில் காவல்துறைத் தேர்வுக்கு வந்தவர்களின் மார்பில் எஸ்.எஸ்., எஸ்.டி. ஓ.பி.சி. போன்று அவர்களின் சாதித் தொகுதியைக் குறிக்கும் எழுத்துக்கள் எழுதப்பட்டது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை Sureih Niyazi/BBC

இட ஒதுக்கீடு பெறும் தகுதி பெற்றவர்களின் மார்பில் எஸ்.சி/எஸ்.டி என்று தேர்வாளர்கள் எழுதினார்கள், இது அவர்களை அடையாளம் காண சுலபமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

தார் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த விஷயம் கசிந்து விவகாரமானதும், இதற்கு பொறுப்பானவர்கள், தங்களுக்கு மேலிடத்தில் இருந்து இது தொடர்பாக உத்தரவு ஏதும் வரவில்லை என்று பின்வாங்கினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த நிகழ்வோடு தொடர்பற்ற ஒரு கோப்புப் படம்

இதற்கு காரணம் என்ன?

கான்ஸ்டபிள் பதவிக்கான உடல் பரிசோதனையில் பொதுப் பிரிவினருக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையில் குறைந்தபட்ச உயரத்துக்கான அளவு வெவ்வேறானது.

மதேஜ்னர் மாவட்ட மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் மார்பில் அவர்களுடைய சாதிப் பிரிவு எழுதப்பட்டது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. என்று மார்பில் எழுதப்பட்ட விண்ணப்பதார்ர்களின் புகைப்படம் வெளியாகி சர்ச்சைகள் வெடித்தபோது, நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.

மருத்துவமனை தலைமை அதிகாரி டாக்டர் ஆர்.சி பனிகா இந்த விவகாரம் பற்றி தன்னிலை விளக்கம் அளித்தார். இது மாபெரும் தவறு என்பதை ஒப்புக்கொண்ட அவர், இப்படி நடைபெற்றது தனக்கு தெரியாது என்று கூறினார். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

விண்ணப்பதாரர்களின் அச்சம்

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விரேந்திர சிங் இந்த விவகாரம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்போவதாக கூறினார். "எங்கள் தரப்பில் இருந்து இதுபோன்ற எந்தவித உத்தரவும் வழங்கப்படவில்லை, இப்போது விஷயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த தவறை எந்தவொரு வழியிலும் நியாயப்படுத்த முடியாது" என்று அவர் கூறுகிறார்.

காவல்துறையில் பல்வேறு பதவிகளுக்கு ஆள் எடுப்பதற்காக முறைப்படி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு முதல் கட்டமாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள், இரண்டாம் கட்டத் தேர்வில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தற்போது இந்த பிரச்சனை வெளிவந்த பின், மருத்துவப் பரிசோதனையில் வெற்றி பெற்றவர்களும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுபற்றி பேச மருத்துவ பரிசோதனைக்கு சென்ற யாரும் தயாராக இல்லை.

உண்மையை பேசினாலும் அது தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைக்கு பாதகமாகிவிடுமோ என்ற அச்சம் அவர்களை மெளனமாக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்