பி.பீ.ஓ துறையில் இந்தியாவை முந்துமா வியட்நாம்?

  • 1 மே 2018

பி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டியிடுகிறதா வியட்நாம்?

வணிக செயல்முறை அவுட்சோர்சிங் (Business Process Outsourcing - BPO) அதாவது பி.பீ.ஓ துறை வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்று வியட்நாம். தற்போது இந்தியா இந்தத் துறையில் மிகப்பெரிய நாடு என்றால், சீனா இரண்டாவது இடத்திலும், பிலிப்பைன்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆனால், பி.பீ.ஓ தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் 10 பெரிய நாடுகளின் பட்டியலில் வியட்நாமும் தற்போது இடம்பெற்றுள்ளது.

பி.பீ.ஓ என்றால் என்ன?

பெரிய மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டியிருக்கும் நாடுகளின் நிறுவனங்கள், பணத்தை சேமிப்பதற்காக, செலவு குறைவாக இருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் அலுவலக வேலைகளை அனுப்பி வைக்கின்றன.

ஆவணங்கள், தரவுகள், தொலைபேசி அழைப்பு மையங்கள் தொடர்பான பணிகள் இதில் பிரதானமாக இடம் பெற்றுள்ளன. செலவு குறைவான நாடுகளில் ஊதியங்கள் மற்றும் கூலி குறைவாக இருப்பதால் பெரிய நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்புகள் அனுப்பப்படும். இது, 'வணிக செயல்முறை அவுட்சோர்ஸிங்' என்று அழைக்கப்படுகிறது

ஆண்டொன்றுக்கு 280 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலக வர்த்தகத்தை கொண்டுள்ளது பி.பீ.ஓ துறை. குறைந்த செலவு கொண்ட நாடுகளுக்கு இத்தகைய வேலைகளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பி.பீ.ஓ துறை வேலைகளில் 65 சதவிகிதம் இந்தியாவிற்கு கிடைக்கிறது. 2015ஆம் ஆண்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியாவிற்கு ஆண்டுதோறும் சுமார் 30 பில்லியன் டாலர் பி.பீ.ஓ துறை வேலைகள் கிடைக்கின்றன. சீனாவுக்கு 24 பில்லியன் டாலர்கள் என்றால், வியட்னாமில் இந்த தொழிலானது இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது

பட்டியலில் இந்தியாவில் இருந்து மிகவும் தொலைவில் தற்போது வியட்நாம் இருந்த போதிலும், இரண்டு காரணங்களுக்காக வியட்நாமை நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

வியட்நாமின் தொழில் வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் 20 சதவிகிதம் என்பது முதல் காரணம் என்றால், பிரத்யேகமாக ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து தனித்துவமான விதத்தில் இந்தத் துறையை சந்தைப்படுத்துகிறது வியட்நாம் என்பது இரண்டாவது காரணம்.

வியட்நாமில் பி.பீ.ஓ தொழில் வளர்ச்சியைப் பார்க்க அங்குள்ள மிகப் பெரிய பி.பீ.ஓ நிறுவனமான டி.ஜி. டெக்ஸ் அலுவலகத்திற்கு சென்றோம். பெங்களூரில் இருப்பது போன்றே இந்த அலுவலகமும் இருக்கிறது. அங்கும் இதுபோன்ற பல அலுவலகங்களை பார்த்திருக்கிறோம். அங்கிருக்கும் அதே சூழல், அதே ஆர்வமும், உற்சாகமும் கொண்ட இளைஞர் சக்தி.

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிராங்க் ஸ்கிலென்பெர்க் என்பவர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர். 2002ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு ஆய்வு செய்தார் அவர்.

இந்தியாவில் கால் செண்டர்களை பார்த்த நாங்கள் அவை மிகவும் முன்னேறியிருந்ததை கண்டோம். ஆங்கிலத்தில் சிறப்பான திறமை கொண்டிருந்த இந்திய இளைஞர்களுடன் போட்டியிட முடியாது என்று நினைத்தோம். எனவே ஆங்கில மொழி அல்லாத ஆவணங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தோம். ஜெர்மனியை சேர்ந்த எனக்கு ஜெர்மனிய மொழி நிறுவனங்களின் வேலைகள் கிடைத்தன.

ஃபிராங்க் வியட்நாமுக்கு ஏன் சென்றார்?

"வியட்நாமில் குறைந்த ஊதியத்திலே திறமையான தொழிலாளர்கள் கிடைப்பார்கள். அதிலும் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவைவிட குறைவான ஊதியம் கொடுத்தால் போதும். இரண்டாவதாக, வியட்நாம் அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்திருந்தது. வியட்நாமுக்கு இந்த துறை புதியது. எனவே வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததால் நான் இங்கு வந்து தொழில் தொடங்கினேன்" என்கிறார் ஃபிராங்க் ஸ்கிலென்பெர்க்.

வியட்நாமின் பி.பீ.ஓ துறை, இந்தியாவில் இருந்து வேறுபட்டது. இந்தியாவில் தொலைபேசி அழைப்பு தொடர்பான வேலைவாய்ப்புகள் அதிகம். வியட்நாமிலுள்ள ஆவணங்கள் தொடர்பான வேலைகள் அதிகம்.

வியட்நாம் பி.பீ.ஓ நிறுவனங்கள் ஆவணங்கள் தொடர்பான பணியின் மிகப்பெரிய மையமாக உருவெடுத்திருப்பதாக பிராங்க் கூறுகிறார். "இப்போது இந்த துறையில் 20 முதல் 30 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்"

பி.பீ.ஓ தொழிற்துறையில் உலகின் விருப்பமான நாடு இந்தியா என்று சொல்வதற்கான காரணங்கள் அனைத்தும் வியட்நாமுக்கும் பொருந்துகிறது. இங்கு அரசியல் நிலைத்தன்மை உள்ளது, தனியார் நிறுவனங்கள் தொழில்துறையில் முன்னேற எல்லா வகையிலும் அரசு உதவுகிறது. இந்தியாவை விட குறைவாக பணம் வழங்கினால் போதும்.

சரி கட்டமைப்பு வசதிகள்? இந்தியாவை விட சிறந்த கட்டமைப்பு வசதிகள் வியட்நாமில் உள்ளது.

இந்தத் துறையில் வியட்நாம் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. ஆனால், இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா வியட்நாமிற்கு உதவ முடியும்

ஹோ சீ மின்ஹ் நகரில் பணியாற்றும் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுபாஷ் குமார் இதுபற்றி கூறுகிறார், "பி.பீ.ஓ துறையில் வியட்நாமைவிட இந்தியா பல அடி முன்னேறிய நிலையில் உள்ளது. இந்தத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் போட்டி இல்லை. இரு நாடுகளும் இணைந்தும் பணியாற்றலாம்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: