இந்தியர்களின் ஒற்றுமையை பார்த்து நெகிழ்ந்த பாகிஸ்தான் மாணவி

பஞ்சாப் மாநிலம், மூம் என்னும் கிராமத்தில் மசூதி ஒன்றை கட்டிக் கொள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த மக்களுக்கு கோயிலின் ஒரு பகுதி நிலத்தை இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வழங்கினர் என்ற செய்தி பிபிசியில் வெளியானது. அந்த செய்தியை படித்த பாகிஸ்தான் சிறுமி ஒருவர் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Image caption எதிர்காலத்தில் பெண் கல்வி குறித்தும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் - அகீதத் நவீத்

அதில் "உங்கள் செய்தியை நான் பிபிசியில் படித்தவுடன் உங்கள் அன்பு மற்றும் சகோதரத்துவம் குறித்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்."

"எனது அண்டை நாட்டில் வாழும் நீங்கள், பிற மதங்களை சேர்ந்தவர்கள் என்ற போதும் அவர்களிடம் அன்பு மற்றும் உதவியை பகிர்ந்து கொண்டு பிறருக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக விளங்குவது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்."

"இந்து, சீக்கியர்கள், முஸ்லிம் மதத்தினர் என அனைவரும் சகோதரர்களை போன்று அமைதியுடன் வாழ முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்."

"எதிர்காலத்தில் பெண் கல்வி குறித்தும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள்" என்று பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த அகீதத் நவீத் என்ற அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

"நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான கதாநாயகர்கள் என்று நான் கூற விரும்புகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார் அச்சிறுமி.

படத்தின் காப்புரிமை AQEEDAT NAVEED/BBC
படத்தின் காப்புரிமை AQEEDAT NAVEED/BBC

இந்து, சீக்கியர்களால் கட்டப்படும் மசூதி

கொத்தனாராகப் பணியாற்றும் ராஜா கான், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் சிவன் கோயிலை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அவர், ஒரு இந்து கோயிலை கட்டினார். ஆனால், அவர் தொழுகை செய்ய அருகில் எந்த மசூதியும் இல்லை.

மசூதி இல்லாத பிரச்சனையை, தனது மூம் கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு சென்றார் ராஜா கான். ஆனால், இதற்காக இரு நிலத்தை வாங்கும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை.

இப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், கட்டுமான பணிகள் போன்ற தினக்கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். இங்கு 400 முஸ்லிம்களும், 400 இந்துக்களும் வசிக்கின்றனர். இவர்களுடன் 4,000 சீக்கியர்களும் வசிக்கின்றனர்.

இந்துக்கள், சீக்கியர்கள் உதவியால் கட்டப்படும் மசூதி

18 மாதங்களில் கோயில் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலைக்கு வந்தபோது, சிவன் கோயில் நிர்வாகிகளை அணுகிய ராஜா,'' உங்களுக்கு ஏற்கனவே ஒரு பழைய கோயில் இருக்கும் நிலையில், விரைவில் ஒரு புதிய கோயிலும் கட்டி முடிக்கப்பட்டுவிடும். ஆனால், முஸ்லிம்களான நாங்கள் தொழுகை செய்வதற்கு இடமில்லை. நிலம் வாங்குவதற்கு பணமும் இல்லை. உங்கள் நிலத்தில் ஒரு சிறிய பகுதியை எங்களுக்குத் தருவீர்களா?" என கேட்டார்.

ஒரு வாரம் கழித்து ராஜாவுக்குப் பதில் கிடைத்தது. கோயிலுக்கு அருகில் காலியாக உள்ள தங்களது 900 சதுர அடி நிலத்தை வழங்கக் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இரண்டு மாதங்களில், ராஜா மற்றும் சில வேறு கொத்தனார்களும், தொழிலாளர்களும் தாங்கள் தொழுகைச் செய்ய தேவையான கட்டடத்தை மகிழ்ச்சியுடன் கட்டினர்.

தங்கள் குருத்துவாராவை ஒட்டியுள்ள இந்த மசூதியின் கட்டுமானத்திற்கு சீக்கிய சமுகத்தினரும் நிதியளிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்