நாளிதழ்களில் இன்று: என் அரசை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன் - திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சை

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்

Image caption என் அரசை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன் - பிப்லப் குமார் தேவ்

"என் தலைமையிலான அரசை தேவையில்லாமல் விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன்" என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல்வராக பதவியேற்ற பிப்லப் தேவ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதால் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார்.

தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகும் அரசியல்வாதிகளில் பிப்லப் தேவ் முதலிடத்தில் உள்ளார்.

மகாபாரத காலத்திலேயே இணையதளம் இருந்தது, இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்க்காமல் பீடா கடை நடத்தலாம் என்பது போன்ற கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார் என்கிறது இச்செய்தி.

இதையடுத்து பிப்லப் குமாருக்கு பிரதமர் மோதி அவசர அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோதி பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை டெல்லியில் இன்று சந்திக்கிறார் பிப்லப் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுவதை அனைத்து உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ISTOCK

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை (போக்சோ சட்டம்) விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைப்பது குறித்தும், அந்த வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுவது பற்றியும் ஐகோர்ட்டுகள் உறுதி செய்யவேண்டும்.

இது தொடர்பான வழக்குகளில் தேவையின்றி விசாரணையை ஒத்தி வைக்க கூடாது என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்; மேலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணைகளை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை ஐகோர்ட்டுகள் அமைத்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.

தி இந்து (தமிழ்)

முக்கிய பிரச்சனைகளில் பிரதமர் மோதி மவுனம் காக்கிறார் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிரதிபலிக்கும் தி இந்து தமிழின் கார்ட்டூன்

படத்தின் காப்புரிமை தி இந்து தமிழ்

இந்தியன் எக்ஸ்பிரஸ் (டெல்லி)

ஹிமாசல பிரதேசத்தில் சட்ட விரோத கட்டடம் ஒன்றை இடிப்பதற்கான உச்சநீதிமன்ற ஆணையுடன் சென்ற அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.

நகர துணை திட்ட அதிகாரியான, 52 வயதாகும் ஷைல் பாலா ஷர்மா அந்த மலைப்பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி கொண்டிருந்த விடுதியை இடிப்பதற்கு சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு பின் விடுதி உரிமையாளரால் செவ்வாயன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என அந்த செய்தி கூறுகிறது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல் துறையை சேர்ந்த பலரும், அரசு அதிகாரிகளும் இருந்தனர் என்று அச்செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: