டாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம்

டாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம் படத்தின் காப்புரிமை Getty Images

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலைச் சேர்ந்த தினேஷ் (17) என்ற பள்ளி மாணவன் தனது மரணத்திற்கு பிறகாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை பிரதமர் மோதி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூடவேண்டும் என்று கோரி கடிதம் எழுதிவைத்துவிட்டு, புதன் அன்று (மே2) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ரெயில் மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட மாணவனின் பையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் தனது தந்தை குடிப்பழக்கத்தில் இருப்பதால் தன்னுடைய இறுதிச் சடங்குகளை செய்யக்கூடாது என்றும், தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால், தான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என்று எழுதியுள்ளார்.

மதுக்கடைகளை எதிர்த்து போராடியதற்காக தேசத் துரோக வழக்கை சந்தித்த ஆனந்தி அம்மாள், தினேஷின் மரணத்திற்காக இந்த சமூகம் வெட்கித் தலைகுனியவேண்டும் என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''மதுவிற்பனையை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தை நடத்தும் நடைமுறையை அரசு உடனடியாக மாற்றவேண்டும் என்பதயே இந்த சிறுவனின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. அல்லது மதுக்கடை வருமானம் மட்டுமே முக்கியம் என்றால், அனைவரும் மது குடிக்கவேண்டும் என்ற புதிய கட்டுபாட்டை அரசு கொண்டுவரவேண்டும். மக்களின் நலனில் அக்கறை இருந்தால், மதுவின் பிடியில் இருந்து தமிழத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார் அவர்.

சமீபத்தில் ஆனந்தி அம்மாள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு குடும்பத்தலைவி ஒருவர் தனது குழந்தைகளுடன் சேர்ந்து குடிக்கு அடிமையான தனது கணவர் சீக்கிரம் இறந்துபோய்விடவேண்டும் என்று கோயில்களில் வேண்டிக்கொள்வதாக கூறியது மதுவின் கோரமுகத்தை காட்டுவதாக இருந்தது என்றார்.

சிறுவன் தினேஷின் தற்கொலை மிகுந்த மனவருத்தம் அளிப்பதாகக் கூறும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட பொதுச்செயலர் எம்.ஏ.சரவணன், அரசு மாணவனின் கோரிக்கை ஏற்று உடனடியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

''பல பெண்கள் எங்களின் கடைகள் முன்வந்து அழுது தங்கள் கணவர்களை மது குடிக்கவேண்டாம் என்று கெஞ்சுவதை பார்த்துள்ளேன். தந்தைகள் மதுவுக்கு அடிமை ஆவதால் பல குழந்தைகள் பாதிக்கப்படுவதை பார்த்துள்ளேன். மதுக்கடைகளில் வேலைபார்க்கும் எங்களைப் போன்றோரிடம் மதுவுக்கு அடிமையானவர்களின் விவரங்களை சேகரித்து அரசு உடனடியாக அவர்களை மீட்க முன் வரவேண்டும். மதுக்கடைகளை மூடவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டால், அரசு உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்கிறது என்பது வருத்தம் அளிக்கிறது,'' என்றார் சரவணன்.

படத்தின் காப்புரிமை Getty Images

மதுப்பழக்கத்தால் தமிழகத்தில் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மாணவன் தினேஷின் மரணம், வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது என்றார் சரவணன்.

தந்தை மீதான நம்பிக்கையின்மை, தனிமை மற்றும் விரக்தி போன்றவற்றால் சிறுவன் தினேஷ் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்கிறார்அரசு குழந்தைகள் நலக் குழுவின் முன்னாள் தலைவராகவும், குழந்தைகள் நல மருத்துவராகவும் உள்ள மனோரமா.

''தந்தை குடிப்பழக்கத்தில் இருப்பதால், தனக்கான ஈமச்சடங்குகளை செய்யக்கூடாது என சிறுவன் கடிதத்தில் கூறியுள்ளதால், தனது தந்தை மதுவுக்கு அடிமையாக இருப்பது அவனுக்கு கடும் மனஉளச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்த்துகிறது. குடிப்பழக்கத்தை விடச்சொல்லி தந்தையிடம் அவன் பலமுறை அறிவுறுத்தியிருக்கலாம். பல குழந்தைகள், தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை சொல்லி, தீர்வுகளை தேட நம்பிக்கையான ஒருவர் கூட இல்லாமல் இருந்தால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளேன். தினேஷுக்கும் நம்பிக்கையான உறவுகளோ, நண்பர்கள் வட்டமோ இல்லாமல் போயிருக்கலாம்,'' என்றார் மனோரமா.

தினேஷ் போன்ற பல குழந்தைகள் தங்களது தந்தை குடிப்ழக்கத்தில் இருப்பதால், விரக்தி அடைந்து, படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பள்ளியில் நல்ல நட்பு வட்டம் அல்லது நம்பிக்கையான உறவினர்கள் என ஒருஇடத்திலாவது பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆறுதல் தேவை என்பதையே நமக்கு இந்த சம்பவம் உணர்த்துகிறது என்றார்.

மேலும் குழந்தைகளின் மனச்சிக்கல்களை கருத்தில் கொண்டாவது தமிழக அரசு மதுவியாபாரத்திற்கு மாற்று வழியை யோசிக்கவேண்டும் என்றார் அவர்.

தினேஷின் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள நெல்லை காவல்துறையினர், மாணவன் எவ்வாறு ரெயில்வே மேம்பாலத்திற்கு வந்து தூக்கிட்டுக் கொண்டான் என்பதை விசாரணை செய்துவருவதாக கூறினர். மாணவனின் தாய் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தனது உறவினரின் உதவியால் அவர் பள்ளிப்படிப்பை முடித்ததாகவும், தந்தை மாடசாமியிடம் விசாரணை செய்துவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்