டிரம்பின் புதிய ஹெச்-1பி விசா விதிகள்: நெருக்கடியில் இந்தியர்கள்

  • 3 மே 2018

"என்னை வீட்டில் இருக்கச் சொல்லி விடுவார்கள் போலிருக்கு. என் கணவர் மட்டும் தினமும் வேலைக்கு சென்று திரும்பும் சோர்வுற்ற நாட்களை மீண்டும் அனுபவிக்கப் போகிறேன். நாள் முழுவதும் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால், என்னுடைய உணர்வை வெளிப்படுத்தும் வழிக்காக காத்திருக்கிறேன்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் பிரியா சந்திரசேகரன்.

படத்தின் காப்புரிமை SAFIN HAMED/AFP/GETTY IMAGES

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்று வேலை செய்வோரை சார்ந்திருப்போருக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை செய்வதற்கான அனுமதி திட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளதால் பிரியா சந்திரசேகரனின் தொழில் வாழ்க்கையே பெரும் ஆபத்திற்குள்ளாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த பிரியா சந்திரசேகரன், தன்னுடைய தந்தை இறந்த பின்னர், 19ம் வயதில் இருந்து வேலை செய்யத் தொடங்கினார்.

வாஷிங்டனிலுள்ள சியாட்டில் பட்டயப் பொது கணக்காளராக கடந்த 2 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்து வருகிறார்.

தந்தை மறைந்த பின்னர், பிரியா டெல்லியில் வேலை செய்ய தொடங்கினார்.

2010ம் ஆண்டு டெல்லியிலுள்ள தன்னுடைய வளரும் தொழில்முறை வாழ்க்கையை துறந்துவிட்டு, அமெரிக்காவிலுள்ள கணவரோடு சேர்ந்தபோது, அவரது தொழில்முறை வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

5 ஆண்டுகள் வேலை செய்யாமல் வீட்டில் இருந்த பின்னர், 2015ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அறிமுகப்படுத்திய புதிய திட்டத்தின்படி வேலை செய்ய அவருக்கு அனுமதி கிடைத்தது.

பட்டயப் பொது கணக்காளர் படிப்புக்கு பின்னர் 2016ம் ஆண்டு அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது.

அதே ஆண்டு அவர்கள் வீடு ஒன்றையும் வாங்கினார்கள். நல்ல வருமானம் இருந்ததால், இன்னொரு குழந்தை பெற்றுகொள்ளவும் அவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால், இப்போது அவர்களின் திட்டமும், வருமானமும் முடங்கும் நிலையில் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின்கீழ், 2015ம் ஆண்டு நடைமுறையான ஹெச்4 இஎடி சட்டம், திறமை வாய்ந்த வெளிநாட்டினரை அமெரிக்காவிலேயே தங்க வைத்துகொள்ளும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதாகும்.

வேலைவாய்ப்பு அடிப்படையிலான "கிரீன் கார்டு" வழிமுறைகளில் ஏற்பட்ட முடிவில்லாத தாமதங்களால் பல தசாப்தங்கள் காத்திருந்த நிலையில் இந்த அனுமதி கிடைத்தது.

வேலைவாய்ப்பு அதிகார ஆவணம் அல்லது இஎடி அட்டை எனப்படுவதுதான் இந்த வேலை அனுமதியாக அறியப்படுகிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு நிறுவனத்தால் இந்த அட்டை வழங்கப்படுவதன் மூலம், அமெரிக்காவில் வாழுகின்ற குடிமக்கள் அல்லாதோருக்கு தற்காலிகமாக அமெரிக்காவில் வேலை செய்வதற்கு அனுமதி கிடைக்கிறது.

"கிரீன் கார்டு" என்று அதிகாரபூர்வமான அறியப்படும் நிரந்தர குடியமர்வு அட்டை அமெரிக்காவில் நீங்கள் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய உதவுகிறது.

"வேலைவாய்ப்புக்கான ஆவணத்திற்கு தகுதியுடைய வெளிநாட்டு வகுப்பினரை சார்ந்துள்ளோரின் ஹெச்-4 விசாவை அகற்றிவிடும் மாற்றங்களுக்கு முன்மொழிவுகளை உள்ளடக்கி எமது திட்டங்கள் உள்ளன. இவ்வாறு வேலை தகுதி அளித்த 2015 சட்டம் மீளாய்வு செய்யப்படும்" என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு நிறுவனத்தின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா செனட் அவை உறுப்பினர் சக் கிராஸெரிக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

70 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவர்

ஒபாமா கால சட்டத்தை ரத்து செய்யும் இத்தகைய நடவடிக்கையால் ஹெச்-4 விசா பெற்று, வேலைக்கான அனுமதி ஆவணம் வைத்திருக்கும் 70 ஆயிரத்திற்கு மேலானோர் பாதிக்கப்படுவர்.

ஹெச்-1பி விசா வைத்திருப்போரின் மனைவியரில் குறைந்தது 93 சதவீதத்தினர் இந்தியாவில் கல்வியறிவும், திறமையும் பெற்றவர்கள் ஆவர்.

ஹெச்-1பி விசா மூலம் திறமைசாலிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், அவர்களது மனைவியரை வேலை செய்ய அனுமதிக்கும் ஒபாமா கால திட்டத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக சிறிது காலம் முன்பு அறிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜூன் மாதம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாற்றத்தால், கணவர் வேலை செய்வதால், அவரை சார்ந்து அமெரிக்காவில் குடியேறிய பெண்கள் அனைவரும் உயரிய கல்வி பெற்று வேலைசெய்வோராக தாங்கள் இருந்தாலும், வேலைகளை இழக்க நேரிடும்.

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் வகையில், குடிவரவுகள் மட்டுப்படுத்தப்படும் என்று தன்னுடைய அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்படும் இன்னொரு இந்திய பெண் மும்பையை சேர்ந்த ரேணுகா சிவராஜன்.

2003ம் ஆண்டு வேலைவாய்ப்பு விசாவோடு (எல்-1) தொழில்நுட்ப தொழில்துறையில் பணிபுரிய அமெரிக்க சென்ற அவர், இதுவரை அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

2006ம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டார். 2007ம் ஆண்டு தங்களுக்கு முதல் குழந்தை பிறக்க இருந்த்ததால் அவர், தனியாக மகப்பேறு காலத்தை கழிக்க விரும்பாமல், அமெரிக்காவில் இன்னொரு இடத்தில் வேலை பார்த்து வந்த தன்னுடைய கணவரோடு வந்து சேர முடிவெடுத்தார்.

அதனால், அவர் மிகவும் நேசித்த வேலையை விட்டுவிட வேண்டியதாயிற்று. எல்-1 விசாவில் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து மாற்றிகொள்ள முடியாது என்பதால், அவருடைய அமெரிக்க வேலைவாய்ப்பு விசாவையும் அவர் இழக்க வேண்டியதாயிற்று. ஹெச்-4 விசா பெற்று அவர் கணவரோடு வந்து சேர்ந்தார்.

2015ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் ஃபிரிமன்டில் தொழில்முனைவோராக அவரால் மீண்டும் வேலை செய்ய முடிந்தது. அங்கு அவர் கணவரோடும், 6 மற்றும் 10 வயது மகன்களோடு வாழ்ந்து வருகிறார்.

கால்பந்து விளையாட்டில் தீவிர ஈடுபாடுடைய மகன்கள் இருவரும் உள்ளூர் விளையாட்டு கிளப் ஒன்றில் கால்பந்து விளையாட்டு வீர்ர்களாக உருவாகி வருகின்றனர்.

தற்போது அவர் தன்னுடைய சொந்த குடும்ப வேலையாக குழந்தை பராமரிப்பு பணியை பே ஏரியா பகுதியில் நடத்தி வருகிறார்.

அவருடைய தொழில் விரிவடையவே, அவர்களுக்கு பெரிய இடம் தேவைப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

எனவே, 2016ம் ஆண்டு தொடக்கத்தில் பெரிய வீடு ஒன்று வாங்கினர். தற்போது 16 குழந்தைகளை பராமரிப்பதோடு 3 ஆசிரியர்களையும் வேலைக்கு அவர் அமர்த்தியுள்ளார்.

"என்னுடைய தொழில் எனது குடும்பத்திற்கு உதவுவதோடு, கடனையும் திருப்பிச் செலுத்த உதவுகிறது. அமெரிக்க குடிமக்களான எனது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க இந்த தொழில் உதவுகிறது. இதுவே இந்தியாவிலுள்ள ஓய்வுபெற்ற என்னுடைய பெற்றோர் மற்றும் மாமா, மாமிக்கு ஆதரவளிக்கிறது. என்னுடைய வருமானம் பாதிக்கப்பட்டால், கடனை அடைப்பது மிகவும் கடினமாகிவிடும். இல்லாவிட்டால் கடனை அடைப்பதா? குழந்தைகளின் கால்பந்து வீர்ர்கள் கனவா? என்பதில் முடிவெடுக்க வேண்டியிருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

மேலும், இது என்னை மட்டும் பாதிக்க போவதில்லை. இந்த 16 குழந்தைகளையும், என்னுடைய திட்டத்தை நம்பியிருக்கும் அவர்களின் குடும்பங்களையும் பதிக்கும்.

இந்த குழந்தைகளை பராமரிக்க அவர்களின் குடும்பங்கள் எல்லாம் மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும். என்னிடம் வேலை செய்கின்ற இந்த 3 ஆசிரியர்களும் தங்களுடைய வேலையை இழப்பர்" என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நடவடிக்கை ஹெச்-1பி விசா வைத்து வேலை செய்வோருக்கு பெரிய ஆச்சரியமளிக்கும் விடயமாக இல்லை. "அமெரிக்க பொருட்களை வாங்கவும், வேலைக்கு அமர்த்தவும்" 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட நிர்வாக ஆணைக்குப் பின்னர் ஹெச்-1பி விசாவில் பல விடயங்கள் மாற்றம் பெற்றுள்ளன. இது ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்கு கிடைத்திருக்கும் இன்னொரு அடி. அவ்வளவுதான்.

போராட்டங்கள்

இந்த நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய கொள்கைகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் மீளாய்வு செய்யவைக்கும் முயற்சியாக கூட்டாளிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சம்மதிக்க வைக்க அவர்கள் முயன்று வருகின்றனர்.

"ஹெச்-4 விசாவுடன் வீட்டு வேலைகளோடு பணியாற்றி பங்களிப்பு செய்து வருகின்ற ஒரு லட்சம் குடும்பத்தினரை பாதிக்கும் நடவடிக்கையாக இது இருக்கும். பாதிக்கப்படுவோரில் அதிகமானோர் பெண்களாக இருப்பர். ஹெச்-1பி விசா பெற்றிருக்கும் இந்திய சமூகத்தினர் அதிகமாக இருப்பதால், இந்திய குடும்பங்களில் இது பெரிய சீரழிவுகளை ஏற்படுத்தும்" என்று வாஷிங்டன் இந்து அமெரிக்க பவுண்டேசனின் அரசு தொடர்பு இயக்குநர் ஜெய் கான்சாரா தெரிவித்தார்.

அமெரிக்காவைப் பாதிக்கும்

மேலும், அமெரிக்காவில் காணப்படும் குறைவான திறமைசாலிகளால் தொழில்நுட்ப தொழில் துறையிலும் பாதிப்பு உணரப்படுகிறது. திறமையான குடியேறிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் அவை கவர்வது கடினமாக விடயமாகியுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் அமெரிக்காவின் போட்டியாற்றல் குறையும். இதனால், முதலீட்டிற்கும், திறமையான குயேறிகளுக்கும் மிகவும் சிறந்த தெரிவாக பிற நாடுகள் மாறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஹெச்-4 இஎடி-யில் செய்யப்படும் மாற்றம், ஹெச்-4 விசா பெற்றிருக்கும் மனைவியரின் சட்டப்பூர்வ குடியேற்ற நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்கின்ற உரிமை இல்லாமல் போகும். அவ்வளவுதான்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனால், அவர்களின் சமூகப் பொருளாதார நிலைமை, வீட்டு வருமானம், பெண்கள் மீதான உளவியல் மற்றும் உணர்வு பாதிப்புகள், அவர்களின் குடும்பத்தில் பாதிப்பு போன்ற பிற விடயங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

எதிர்காலம் பற்றிய உறுதியின்மை ரேணுகாவை தூக்கம் வராமல் செய்கிறது. தன்னுடைய மனநிலையை அவர் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார்.

"என்னுடைய ஹெச்-4 இஎடி விசா மாற்றப்பட்டுவிட்டால், தொழில்முனைவர் என்பதற்கு பதிலாக பிறரை சார்ந்திருக்கும் என்னுடைய பழைய நாட்களுக்கு மீண்டும் திருப்பி செல்ல வேண்டியிருக்கும் என்று கவலைப்படுகிறேன்.

மன அழுத்தத்தோடு நான் வாழ வேண்டியிருக்கும் என்று கவலையடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் முதலீடாகச் செய்த கடின உழைப்பு, நேரம் மற்றும் பணம் அனைத்தும் வீணாகிப்போய்விடும்.

"கிரீன் கார்டு வாங்கும் நடைமுறை பெரிதாக இருப்பதால், நான் மீண்டும் வேலை செய்யப்போவது எப்போது என்று தெரியவில்லை".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்