நீதிபதி ஜோசப் விவகாரத்தில் மோதி அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் நடக்கும் 'நீயா நானா' போர்

உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது மத்திய அரசு. தனது பரிந்துரையை மீண்டும் கொலீஜியம் வலியுறுத்தினால் அது மத்திய அரசை உறுதியாகக் கட்டுப்படுத்தும் என்ற நிலையில், புதன்கிழமை கூடிய கொலீஜியம் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதைத் தள்ளிப் போட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption நீதியரசர் கேஎம் ஜோசப்

உச்ச நீதிமன்ற கொலீஜியம் இந்து மல்ஹோத்ரா மற்றும் கேஎம் ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி ஜனவரியில் பரிந்துரை செய்திருந்தது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்து மல்ஹோத்ரா குறித்த பரிந்துரையை மட்டும் ஏற்றுக்கொண்டு கே.எம்.ஜோசப் தொடர்பான பரிந்துரையை மட்டும் மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பி இருந்தார்.

இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஓர் கடிதம் எழுதியிருந்தார். அதில் கேஎம் ஜோசப் ஏன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப்பட கூடாது என்பதற்கான மூன்று காரணங்களை தெரிவித்திருந்தார்.

முதலாவதாக, கேரள உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த ஒரு நீதிபதி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ளார். எனவே கே.எம்.ஜோசப்பின் நியமனம் சீரான பிரதிநிதித்துவத்துக்கு எதிராக இருக்கும். நீதிபதி ஜோசப் நாட்டின் நீதிபதிகள் மூப்புப் பட்டியலில் 42-வது இடத்தில் உள்ளார். இது பதவி மூப்புப் பட்டியலில் மிகவும் கீழே உள்ள இடம். மூன்றாவதாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரில் இருந்து உச்சநீதிமன்றத்தில் இதுவரை நீதிபதிகள் இல்லை.

Image caption இந்து மல்ஹோத்ரா

ரவிசங்கர் பிரசாத்திடமிருந்து கடிதம் பெற்ற பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஐந்து தலைமை நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் ''உரிய உண்மைகள் குறித்த மேற்கோள்களோடு இந்தப் பரிந்துரை மீண்டும் அரசுக்கு அனுப்பப்படும். அவரது நியமனம் குறித்து கேள்வி எழுப்பும் அரசு, ஏன் இதற்கு முன்னர் உள்ள உதாரணங்களை கணக்கில் கொள்ளவில்லை'' எனத் தெரிவித்தார்.

மறுநாள், இதே நாளிதழ் பெயர் வெளியிடாத அரசு உயர் அதிகாரியின் ஆட்சேபனையைப் பதிவு செய்திருந்தது. '' கொலீஜியம் சந்திக்கும் முன்னதாக இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் தெரிவிப்பது மரபு மற்றும் விதிகளுக்கு எதிரானதாகும்'' என அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

கொலீஜியம் என்பது என்ன?

உச்சநீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் கொலீஜியத்தில் இடம்பெற்றிருப்பர். நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை குறித்த விவகாரங்களின் மீது கொலீஜியம் முடிவெடுத்து அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பும். இதையடுத்து அரசு அதன் பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும். குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து அறிவிக்கை வந்தபிறகு நீதிபதி பணியமர்த்தப்படுவார்.

பொதுவாக கொலிஜியம் அனுப்பும் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால், இம்முறை மோதி அரசு பரிந்துரையை திருப்பியளித்துள்ளது மேலும் கே எம் ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கும் பரிந்துரை குறித்து மீண்டும் யோசிக்கச் சொல்லியிருக்கிறது.

தேசிய சட்டப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் ஃபைஜன் முஸ்தஃபா '' கொலிஜியம் அதன் முடிவை அரசிடம் மீண்டும் அனுப்பினால், அரசு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நீதிபதி ஜோசப் விவகாரத்தில் என்ன பிரச்னை?

கடந்த ஜனவரியன்று அனுப்பப்பட்ட பரிந்துரையில் இருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவந்த இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி கடந்த வெள்ளியன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக பணியமர்த்தப்பட்ட வெகுசில பெண் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களில் இந்து மல்ஹோத்ராவும் ஒருவர்.

ஆனால் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேஎம் ஜோசப் மீதான பரிந்துரையை திருப்பி அனுப்பினார்.

மூத்த ஊடகவியலாளரான ராகேஷ் பட்னாகர் சட்ட விவகாரங்கள் குறித்து பல தசாப்தங்களாக செய்தி அளித்து வருகிறார். ரவிசங்கர் பிரசாத்தின் வாதத்தின் மீது அவர் கேள்விகள் வைக்கிறார்.

'' உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கான இதுபோன்ற நிபந்தனைகளை யார் தீர்மானித்தார்கள்? உச்ச நீதிமன்றத்தில் பல மாநிலங்களில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் இருக்கின்றனர். டெல்லியில் இருந்து எம்பி லோகுர், நீதியரசர் எஸ்கே காவுல், நீதியரசர் ஏகே சிக்ரி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர் என்றார்.

மோதலுக்கு கடைசி தீர்ப்பு காரணமா?

காங்கிரஸ் அரசில் சட்ட அமைச்சராக இருந்த கபில் சிபல் '' அரசின் நோக்கம் மிகவும் தெளிவானது, அவர்களுக்கு பிடிக்காவிட்டால் உங்களது நியமனம் அனுமதிக்கப்படமாட்டாது'' என்றார்.

கடந்த வியாழன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்னர் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பியது உச்சநீதிமன்றத்தில் நூறு வழக்கறிஞர்களை கொண்ட ஒரு குழு.

வழக்கறிஞர்கள் குழுவின் தலைவர் இந்திரா ஜெய்சிங் பேசுகையில், உத்தரகாண்டில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வருவது சட்டத்துக்கு புறம்பானது என முன்னதாக நீதிபதி ஜோசப் அளித்த தீர்ப்பே அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணி என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 2016-ல் மோதி அரசு உத்தரகாண்டில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்தது பதவி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரிஷ் ராவத் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியை நடத்தியது.

சட்ட விவகாரங்களில் நிபுணரான ஃபைசன் முஸ்தஃபா கூறுகையில், '' விவேகமுள்ள எந்த நபரும் நீதிபதி ஜோசப் பணி நியமனத்தை நிராகரித்ததற்கு காரணம் அவர் உத்தரகாண்ட் விவகாரத்தில் எடுத்த முடிவே என்பதை அறிவர்'' என்றார்.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் மீதான மற்றொரு கோப்பும் மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக உள்ளது.

நீதிபதிகள் நியமன தேர்வுக்குழு உறுப்பினர் நீதிபதி குரியன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும்போது, '' நீதிபதி ஜோசப்புக்கு எதிராக அரசு இத்தகையை அணுகுமுறையை காண்பிப்பது இது முதல்முறையல்ல. மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநில குளிர்ந்த தட்பவெட்ப நிலை உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். உச்ச நீதிமன்றம் அவரின் விண்ணப்பத்தை ஏற்று ஆந்திரப் பிரதேச - தெலங்கானா உயர்நீதிமன்றத்துக்கு அவரை மாறுதல் செய்ய பரிந்துரைத்தது. ஆனால் அரசு இந்த விஷயத்தில் இதுவரை முடிவெடுக்கவில்லை'' என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை என்கிறார் நீதிபதி குரியன்.

படத்தின் காப்புரிமை Getty Images

கேரளாவைச் சேர்ந்த நீதிபதி குரியன், சமீபத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ''அரசு கொலிஜியத்தின் பரிந்துரையை தவிர்க்கிறது. இது இந்திய உச்சநீதிமன்றத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகின்றது'' என குறிப்பிட்டிருந்தார்.

மூன்று மூத்த நீதிபதிகளுடன் குரியன் முன்னதாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நீதிபதி தீபக் மிஸ்ராவின் வேலை பாணி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்