தாவூத் தொடர்பு முதல் நிழல் உலகம் வரை: சோட்டா ராஜனின் கதை

  • 3 மே 2018
சோட்டா ராஜன் படத்தின் காப்புரிமை AFP
Image caption சோட்டா ராஜன்

மும்பையின் திலக் நகர் முதல் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியல் வரை என ராஜேந்திர சதாசிவ் நிகேல்ஜின் கதை விறுவிறுப்பானது. திலக் நகரில் பிறந்த இவர், பதின்ம வயதிலே குற்ற உலகுக்குள் நுழைந்தார்.

தியேட்டரின் வெளியே டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திர சதாசிவ் நிகேல்ஜ், ராஜன் நாயர் கும்பலில் இணைந்தார். ராஜன் நாயர் எனும் படா ராஜன் திருட்டுக்கும், கொள்ளைக்கும் பெயர் போனவர்.

1983-ம் ஆண்டு இரண்டு கும்பல், ராஜன் நாயரை கொன்றது. இதற்கு பழிவாங்கும் விதமாக, எதிர்கும்பலை சேர்ந்தவர்களை கொன்ற ராஜேந்திர சதாசிவ், சோட்டா ராஜன் எனும் பட்டத்தை பெற்றார்.

தாவூத் இப்ராகிமுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சோட்டா ராஜன், தாவூத்தின் நம்பிக்கையினையும் பெற்றார். பிறகு 1987-ம் ஆண்டு ராஜன் துபாய்க்கு இடம் பெயர்ந்தார்.

1992-ம் ஆண்டு அருண் கவ்லி கும்பலால் தாவூத்தின் மைத்துனர் கொல்லப்பட்ட போது, ராஜனால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இவர்கள் இருவரின் நட்பில் கசப்பு ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption தாவூத் இப்ராகிம்

1993 மும்பை குண்டு வெடிப்புக்குப் பிறகு, தாவூத்திடம் இருந்து ராஜன் பிரிந்து சென்றார். தாவூத்தை எதிர்த்த டான் என தன்னை காட்டிக்கொள்ள நினைத்தார் ராஜன்.

மும்பையின் குற்ற உலகம் குறித்து நீண்ட காலமாக செய்தி சேகரித்த பிபிசியின் ஜுலால் புரோகித்,'' இந்தியாவின் புலனாய்வு அமைப்புகளுடன் நெருக்கமாக இருக்க ராஜன் முயற்சி செய்தார். இதற்காக தாவூத் குறித்த தகவல்களை அவர் பயன்படுத்தினர். மும்பை போலிஸார் நீண்ட காலமாக அவரை கண்காணித்தனர்'' என்றார்.

1998-ம் ஆண்டு மிர்சா தில்ஷாத் பேக் என்ற நேபாள அமைச்சரை ராஜன் கொலை செய்தார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த பேக், நேபாளத்திற்கு இடம் பெயர்ந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானார்.

''தாவூத் மற்றும் ஐஎஸ்ஐ உடன் மிர்சா தில்ஷாத் பேக்கிற்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல சட்டவிரோத நடவடிக்கைளிலும் அவருக்குத் தொடர்பு இருந்தது'' என்கிறார் பிபிசி நேபாள சேவை ஆசிரியர் ஜிதேந்திர ராவுட்.

''தாவூதுக்கு உதவுபவர் என் எதிரி'' என மிர்சா தில்ஷாத் பேக்கின் கொலைக்குப் பிறகு இந்தியா டுடே பத்திரிக்கைக்கு ராஜன் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ராஜன் இந்தியாவிற்கு வெளியில் இருந்து அனைத்தையும் செய்தார். 1987-ம் ஆண்டு துபாய்க்கு சென்ற பிறகு, ராஜன் பல நாடுகளில் வாழ்ந்தார். 2000 ஆம் ஆண்டில், பாங்காக்கில் ஒரு நண்பரின் வீட்டிலிருந்தபோது சோட்டா ஷக்கில் ஆட்களால் ராஜன் தாக்கப்பட்டார். ராஜனின் நண்பரான ரவி வர்மா மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். ஆனால், ராஜன் தப்பினார்.

தான் குறித்து ஷக்கிலுக்கு துப்பு கொடுத்ததாக சந்தேகப்பட்டு, தாவூத்தின் இரண்டு ஆட்களை 2001-ம் ஆண்டு ராஜன் கொலை செய்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

ரியல் எஸ்டேட் தொழில்

ராஜன் அயல்நாட்டில் இருந்தபோதும் அவரது ரியல் எஸ்டேட் தொழிலை மும்பையில் நடத்தினார். குஷி டெவெலப்பர்ஸ் எனும் அவரது நிறுவனத்தை ராஜனின் மனைவி சுஜாதா நடத்தினார். மந்தமான திலக் நகர் மறுவளர்ச்சிக்கான வாய்ப்பை கண்டுகொண்டதும் ராஜன் நிறுவனம் நன்றாக பணம் சம்பாதித்தது.

ராஜன் கட்டிய கட்டடங்கள் மூலம் செல்வவளம் பெருகியது. இதையடுத்து அவருக்கு தனது ரியல் எஸ்டேட் தொழில் வாயிலாக வினோத் செம்பருடன் தொடர்பு ஏற்பட்டது. ஜோதிர்மயி டே கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொருவர் இந்த வினோத் செம்பர் (அவரது நிஜப் பெயர் வினோத் அஸ்ரானி).

2005-ல் ராஜன் மனைவி சுஜாரா மிரட்டி பணம்பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ராஜனின் சகோதரன் தீபக் இந்திய குடியரசு கட்சியின் தலைவராவார். மார்ச் 2018 முதல் ஒரு பலாத்கார வழக்கை தீபக் எதிர்கொண்டு வருகிறார்.

படத்தின் காப்புரிமை AFP

பிபிசி மராத்தி ஆசிரியர் ஆஷிஷ் தீக்க்ஷித் ராஜனுடனான சுவாரஸ்யமான ஒரு அனுபவத்தை விவரித்தார். ''2003-ல் ஒரு பத்திரிகையின் விளம்பரத்திற்கு நான் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது அப்பத்திரிகையை விளம்பரப்படுத்தி ஆதரவுத் திரட்டுவதற்காக செம்பர் பகுதிக்குச் சென்றிருந்தேன். திலக்நகரில் ஆறாம் எண் கொண்ட கட்டடத்துக்குச் செல்லக்கூடாது என எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் நான் சென்றேன்.''

''நான் சோட்டா ராஜனின் வீட்டைப் பார்க்கச் சென்றேன். எனக்கு என்ன வேண்டும் என நான் விவரித்தபிறகே என்னை ராஜனின் சகோதரர் அனுமதித்தார். உள்ளே நுழைந்த பிறகு ராஜனின் அண்ணனிடம் எந்த செய்தித்தாளை வீட்டில் அவர்கள் படிக்கிறார்கள் என கேட்டேன். அவருக்கு தெரியவில்லை. ஒரு குழந்தையிடம் செய்தித்தாளை எடுத்து வருமாறு கேட்டார். மேலும் அந்த செய்தித் தாளை காண்பித்து 'நாங்கள் இதைத்தான் பயன்படுத்துகிறோம்' என்றார். மேற்கொண்டு அவரிடம் கேள்வி கேட்க ஒன்றுமில்லை என எனக்குத் தெரியும். இந்த சந்திப்பு முழுவதிலும் என்னை அவர் சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டிருந்தார்'' எனத் தெரிவிக்கிறார்.

தாவூத் மற்றும் ராஜன் குறித்து பல கற்பனை கதைகள் உள்ளன. மக்கள் அதைப்பற்றி பேசுவார்கள். ஆனால், அதனை அவர்களால் எந்த வழியிலும் உறுதிப்படுத்த முடியாது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு என ராஜன் இருபது வருடங்கள் இந்தியாவுக்கு வெளியே வசித்தார். 2015-ல் அவர் ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்டார். அதன்பிறகு பாலி தீவுக்கு அவர் ஓடினார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

படத்தின் காப்புரிமை PTI

அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும், ராஜன் தொடர்பான அனைத்து வழக்குகளையும் எடுத்துக்கொண்டது சிபிஐ. ஆனால், ராஜனை கொண்டு வந்த பிறகு புலனாய்வு நிறுவனங்கள் பெற்ற ஆதாயம் என்ன? 2016-ல் பாலி முதல் டெல்லி வரை ராஜனை தொடர்ந்த அருனோடே முகர்ஜி என்ற பத்திரிகையாளர் '' ராஜன் மிக விரைவில் காவலுக்கு வைக்கப்பட்டார். ஆகவே அவரிடம் இருந்து புலனாய்வு நிறுவனங்கள் போதுமான தகவல்களை பெற்றிருக்கும் என நான் எண்ணவில்லை'' என்றார்.

மும்பை நீதிமன்றத்தால் ஜே - டே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார். அவர் இன்னமும் மேலும் பல வழக்குகளை சந்தித்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்