நாடாளுமன்றத் தேர்தலைத் தீர்மானிப்பதில் கர்நாடகத் தேர்தலின் பங்கு என்ன?

தென்னிந்திய மாநிலமான கர்நாடகா வரும் 12ஆம் தேதி நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகளை ஒன்றுக்கொன்று மோத விட்டு அதன் பலத்தை பரிசோதிக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் 2019ல் நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போக்கை மாற்றக் கூடும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) இந்த கர்நாடகத் தேர்தல் தன் தேர்தல் இயந்திரத்தை தயார் செய்ய உதவக்கூடியதாக இருக்கும்.

ஆனால், கர்நாடகத்தை ஆளும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, தனது கடைசி எல்லைகளில் ஒன்றைக் காப்பாற்றும் போராட்டம் ஆகும் இது.

மொத்தத்தில் கர்நாடக தேர்தல் முடிவுகள் மே 15ஆம் தேதி வெளிவரும் போது இரு பெரும் தேசிய கட்சிகளும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமது பலம் என்னவாக இருக்கிறது என்பதைப் பறை சாற்றும்.

தெற்கில் நுழைய வழி

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் வட மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி வெல்லமுடியாத அரசியல் சக்தியாக விளங்குகிறது. ஆனால் பல தசாப்தங்களாக முயற்சித்தும் தெற்கில் வாக்காளர்களின் அன்பைப் பெற முயற்சித்தும் அதனால் இயலவில்லை.

பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை ஆதரவு எண்ணிக்கை ரீதியாக பலமான இந்துக்களிடம் இருந்து கிடைக்கிறது. மதத்தையும் தேசிய வாதத்தையும் இணைக்கும் அதன் உத்தி வட மாநிலங்களில் நன்றாக வேலை செய்த காரணத்தால் வட இந்தியா முழுவதையும் அது ஆள்கிறது.

இந்த உத்தி, மொழிரீதியாகவும் மதரீதியாகவும் பன்முக கலாசாரரீதியாகவும் மாறுபட்ட தெற்கில் வேலை செய்யவில்லை. பா.ஜ.க. வட இந்திய கட்சியாக இங்கே பார்க்கப்படுவது வியப்பிற்கு உரியதல்ல. ஆனால், கர்நாடக மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நிலைமை மாறும். இந்தியா பொதுத் தேர்தலை சந்திக்க தொடங்கும் முன் இந்த மனப்போக்கை மாற்ற உதவும்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமீபத்தில் இந்தியாவின் வட கிழக்கில் இன ரீதியாக மாறுபட்ட மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றிகள், பா.ஜ.க. வெறும் இந்துக்களின் கட்சி அல்ல என்ற எண்ணத்தை உருவாக்க உதவியது. கர்நாடகத்தில் ஒருவேளை அது வெற்றி பெற்றால் பா.ஜ.க.வின் பிம்பத்தை பெரிதும் உயர்த்த உதவும் என்பது உறுதி.

படத்தின் காப்புரிமை Getty Images

தி பிரிண்ட் என்ற செய்தி இணைய தளத்தில் எழுதும் அரசியல் விமர்சகர் கல்யாணி ஷங்கர் சொல்கிறார்: " தெற்கில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டிய அவசியம் என்ன? சாதாரண காரணம் தான். ஏற்கனவே வட இந்தியா முழுவதையும் கைப்பற்றியாயிற்று. வட கிழக்கிலும் வியப்பூட்டும் அளவிற்கு வெற்றி வாகை சூட்டியாயிற்று. எனவே 2019 மக்களவைத் தேர்தலுக்கு தெற்கு மிகவும் முக்கியமானதாகும்."

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இதுபற்றி நிறைய சொல்லிவிட்டார். போன மாதம் தான் அவர் மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் "இங்கே [கர்நாடகா ] வெற்றி பெறுவது பா.ஜ.க.விற்கு நாட்டின் தென் மாநிலங்களில் கால் பதிக்க கதவைத் திறந்து விட்டது போல் அமையும்."

மோடியின் அலையை தொடர்ந்து வீசச் செய்தல்

கர்நாடகாவில் பா.ஜ.க.விற்கு கிடைக்கும் வெற்றி, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்று தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருவதற்கு ஏற்றார்போல் இருக்கும். இதைத் தவிர மோடியின் எதிர்ப்பாளர்களுக்கு வலுவான செய்தியை தருவதாகவும் அமையும். மோடியை வெல்ல முடியாது- என்பது தான் அது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் செய்தித்தாளில் வந்த செய்தியில் "பா.ஜ.க.வை பொறுத்தவரையில் இந்த வெற்றி காங்கிரசிடம் இருந்து இன்னொரு மாநிலத்தையும் பறிக்க வேண்டும் என்பதால் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. 2019 தேர்தலில் மோடியை வீழ்த்தி விடலாம் என்ற எண்ணம் வளர்ந்து வருவதை தகர்க்க இது முக்கியமானது."

கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.க.வின் வேகத்தில் ஏற்பட்ட சிறு தொய்வினை சரிக்கட்ட மிகவும் முக்கியமானதாகும். இதற்கு இந்த வெற்றி மிகவும் அவசியமாகும்.

பா.ஜ.க. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை இழந்தது. இந்தியாவின் வட மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய இந்த இரு தொகுதிகளை இழந்ததை ஊடகங்கள் பா.ஜ.க.விற்கு பெரிய இழப்பு என்று வர்ணித்தது.

கோரக்பூர் பா.ஜ.க.வின் கோட்டையாக 30 வருடங்களாக இருந்தது. உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யாநாத் இந்த தொகுதியில் இருந்து 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே நேரத்தில் புல்பூர் தொகுதியை 2014ஆம் ஆண்டுதான் பா.ஜ.க. முதல் முறையாக கைப்பற்றி இருந்தது.

இந்த இரு தொகுதிகளும் யோகி ஆதித்யாநாத் மற்றும் அவரது அமைச்சரவை சகா ஆகியோர் உ.பி.யில் பெற்ற பிரதான வெற்றியைத் தொடர்ந்து மாநில அரசியலுக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான இடங்கள்.

இந்த தோல்வி வெறும் உ.பி.யில் மட்டும் அல்ல. பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் சமீபத்தில் பா.ஜ.க. தேர்தல்களில் தோல்வியை தழுவியது.

அதைத்தவிர 2017 டிசம்பர் மாதம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 182 இடங்களில் 77 இடங்களை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த 20 வருடங்களாக இந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. "புது தில்லியில் இருந்து வெளிவரும் மின்ட் நாளிதழ் கூறுகையில் " தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது, காங்கிரஸ் குஜராத்தில் பா.ஜ.க. கோட்டையை உடைத்து வலுவாக உள்ளே நுழைந்துள்ளது." என்று குறிப்பிட்டது.

கட்டுரையாளர் பிரசாந்த் ஜா இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: " தில்லியின் அரசியல் வட்டத்தில் 2019 தேர்தல் 2014 தேர்தல் போலிருக்காது [ அப்போது பா.ஜ.க. தில்லியில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது ]. மோடி அலை என்ற மாயை கலைந்துவிட்டது. கர்நாடகத்தில் வெற்றி பெற்றால் பா.ஜ.க.வின் மேலாதிக்கத்தை மேலும் பலப்படுத்தும். அதற்கு எதிரான கருத்துகளை கட்டுப்படுத்த உதவும்."

காங்கிரசுக்கு வாழ்க்கைப் பிரச்சினை

படத்தின் காப்புரிமை AFP

காங்கிரசைப் பொறுத்தவரையில், இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் பா.ஜ.க.வின் தொடர் தாக்குதல் மூலம் தனது கடைசி கோட்டையை தக்கவைக்க முடியும். இந்தியாவின் தொன்மையான கட்சியான காங்கிரஸ் நாட்டின் சுதந்திர வரலாற்றில் பெரும்பாலான காலகட்டத்தை ஆண்ட கட்சி. இன்று வெறும் மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆளுகிறது. வடக்கே பஞ்சாப், வட-

கிழக்கில் மிசோரம் மற்றும் தெற்கே கர்நாடகம்.

பிரபல ஆங்கில நாளிதழான இந்து பிசினஸ் லைனில் வெளியான தலையங்கம் "காங்கிரசுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டிய அவசியம் இருப்பதன் காரணம், பா.ஜ.க.விற்கு எதிரான எந்த ஒரு கூட்டணி அமைந்தாலும் அந்த கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தான் இருக்கவேண்டும் என்று நிரூபிக்கத்தான்."

காங்கிரஸ் கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ராகுல் காந்தி பொதுத் தேர்தலை சந்திக்கும் முன் இந்த வெற்றி அவருக்கு முக்கியமான தேர்வு ஆகும்.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஜா எழுதுகிறார். கர்நாடக மாநில தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நம்பகத்தன்மையை கரைத்துவிடும். 2019 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் என்று எண்ணி அதன் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகக்கூடிய சூழல் ஏற்படும்.

படத்தின் காப்புரிமை STRDEL

இது வரை காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.விற்கு எதிராக வலுவான எதிர்ப்பினை எழுப்பியுள்ளது. ஆனால் பா.ஜ.க.வுக்கு இணையாக இன்னொரு வெல்லமுடியாத சக்தியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான மக்கள் மனநிலை.

கடந்த 30 வருடங்களாக கர்நாடக மாநிலம் ஆட்சியில் இருக்கும் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்தது இல்லை என்கிறது சி.என்.என். நியூஸ் 18 என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சி.

இந்தியாவின் தொன்மையான கட்சிக்கு கர்நாடகாவை தக்க வைப்பது என்பது மிகவும் கடினமான பணியாக அமையக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: