நீட் பிரச்சினை ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள் எவை? டாக்டர் ஷாலினி

  • 5 மே 2018

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்தியர்கள் கட்டாயம் நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வின் அடிப்படையிலே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தநிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா இல்லையா என்ற குழப்பத்துக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வின் முடிவு அனிதா என்ற பெண்ணை தற்கொலையில் தள்ளியதாக பரவலான புகார் எழுந்தது. நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த அனிதா சமூகப் பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கியிருந்ததும் பிளஸ்-2 தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் .

அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நீட் தேர்வால் சர்ச்சை எழுந்துள்ளது.

Image caption அனிதாவின் தந்தை மற்றும் பாட்டி

தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் தேர்வு மையங்களை மாற்றத் தேவை இல்லை என தீர்ப்பளித்தது.

தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், அஸ்ஸாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் ஏற்படுத்திய கடும் கொந்தளிப்பை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

தமிழகத்தில் இருந்து 2500 - 3300 கிமி வரை பயணம் செய்து நீட் தேர்வை எழுத வேண்டிய சூழ்நிலையில் சில மாணவர்கள் உள்ளனர்.

நீட் தேர்வு நெருக்கடி நிலை மாணவர்களுக்கு என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பிபிசியிடம் பேசிய உளவியல் நிபுணர் ஷாலினி, '' வழக்கமாக இது போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்திருப்பார்கள். தேர்வு மையத்தின் மீது பெரிய அளவில் அக்கறை செலுத்தத் தேவை இல்லாததால் தேர்வுக்கு எப்படிப் படிக்க வேண்டும், எந்த மாதிரியான கேள்விகள் வரக்கூடும் அதனை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவார்கள்''.

''ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எப்படி மையத்துக்குப் போகப்போகிறோம்? எப்படிப் பயணச் சீட்டை பெறுவது? பயணச் சீட்டு உரிய நேரத்தில் கிடைக்குமா? வெளி மாநிலத்தில் அங்குள்ள உள்ளூர் வாகனங்களில் எப்படி பயணிப்பது, அங்கு கிடைக்கும் உணவை உடல் உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா? சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைந்து விடமுடியுமா? வெளி மாநிலத்தில் தங்குமிட வசதிகள் குறித்த ஏற்பாடுகளை எப்படிச் செய்வது? என துணைக் கேள்விகளாக ஒவ்வொன்றும் எழுகிறது. இதற்கு எப்படி விடை காண்பது என்பது குறித்து எண்ணுவதே மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை தரும்.

படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/getty images

முறைப்படி திட்டமிடப்படாதவொன்றை திடீரென எதிர்கொள்ளும் சூழ்நிலையில் மூளை சரியாக வேலை செய்வதில் பாதிப்பு ஏற்படும். இதன் விளைவாக ஏற்படும் பதற்றம் அவர்களின் செயல்திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை இத்தகைய சூழ்நிலையால் திறமையான மாணவர்களுக்கும் மனப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் செயலாக்கமும் பாதிப்புக்குள்ளானால் மதிப்பெண் குறைந்து, மருத்துவச் சீட்டு கனவில் சிக்கல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியும் எழுகிறது. அரசு உடனடியாக இவ்விவகாரங்களை பரிசீலிப்பது நல்லது '' என்கிறார்.

''ராஜஸ்தானில் தற்போது புழுதிப்புயல் காரணமாக பலர் இறந்திருக்கிறார்கள். முதலில் அங்குள்ள பெற்றோர்களே தங்களுடைய மாணவர்களை தேர்வு மையத்துக்கு அனுப்புவார்களா என்பது முழுமையாக தெரியாது. இயற்கைப் பேரிடர் காலங்களில் தேர்வை ஒத்திவைப்பது வழக்கமானது. நீட் தேர்வு விவகாரத்தில் அரசு இது போன்ற சூழ்நிலைகளுக்குத் தயாராகவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. முன்னதாகவே எந்தெந்த மையங்கள் ஒதுக்கப்படும் என மாணவர்களுக்கு கூறியிருக்க வேண்டும். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென தேர்வு மையங்களை இப்படி அறிவித்திருப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார் ஷாலினி.

மாணவர்கள் இத்தகையை நெருக்கடி சூழ்நிலைகளை எப்படி அணுகவேண்டும்?

தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும் மாணவர்கள் பலருக்கும் கேரளாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வட மற்றும் கிழக்கு இந்தியாவிலும் தேர்வு மையங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுளன.

''ஆங்கிலத்தில் இது போன்ற சூழ்நிலைகளை 'acute' என சொல்வோம். அவசர நெருக்கடி காலகட்டத்தில் மனம், மூளை, உடல் சூழ்நிலைக்கேற்ப சில விஷயங்களை மாற்றிஅமைத்துக் கொள்ள வேண்டும். நெருக்கடி நேரங்களில் முதலில் நாம் அமைதியாக இருக்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தி எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்கிறார் உளவியல் நிபுணர்

Image caption அனிதாவின் எளிய வீடு

'' இந்த தேர்வு எழுதுவதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது என்ன என பட்டியலிட வேண்டும். உதாரணமாக, முதலில் உரிய இடத்துக்குச் உரிய நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே முன்னுரிமை. எனில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முதல் முன்னுரிமையை வெற்றிகரமாக கடக்க, சில சிறிய படிகளை கடந்துதான் இலக்கை அடைய முடியும்.

தேர்வு மையத்துக்குச் செல்ல பயணச் சீட்டு வாங்குவது, எத்தனை மணிக்கு எந்த இடத்தில் இருக்க வேண்டும், என்னென்ன விஷயங்களை பரிசோதிக்க வேண்டும் என பல சிறிய படிகளையும் ஒவ்வொன்றாக கடந்து முறைப்படி சென்றால் இலக்கை அடையவும் முடியும் மேலும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

முழு பிரச்சினை குறித்தும் யோசிக்காமல்....

மாறாக இவ்வளவு விஷயங்களை செய்ய வேண்டுமா எதை முதலில் செய்வது, ஏன் இப்படி நடக்கிறது, எப்படி எழுதப்போகிறோமோ என்றெல்லாம் பதற்றம் கொண்டால் அவை மனஅழுத்தத்தையே அதிகரிக்கும். மேலும் அவை செயல்திறனை குறைக்கும்.

ஆகவே முழு பிரச்சனை குறித்து யோசிக்காமல், எந்த சிக்கலுக்கு எது தீர்வு என யோசித்து இதைச் செய்தால் நான் ஒரு படியை கடந்து விடுவேன் என தீர்வு அடிப்படையில் யோசித்தால் வெற்றிகரமாக இந்நிலையை எதிர்கொண்டுவிடலாம்.

ஆனாலும்...

ஆனால் இவ்வளவு விஷங்களை கடந்து தேர்வு அறைக்குச் சென்றவுடன் மாணவர்களுக்கு மூளை திடீரென வெற்று நிலைக்குச் சென்று படித்ததும், தேர்வுக்கு தயாரான செயல்முறைகளும் கை கொடுக்காமல் போகலாம். இது மற்றொரு சிக்கல்'' என்றார் உளவியல் நிபுணர் ஷாலினி.

இருத்தலுக்காக போராடும்போது இந்நிலை ஏற்படுவது சகஜம் எனச் சொல்லும் ஷாலினி, ஒரு போரை எதிர்கொண்டு வெற்றிகரமாக எல்லையைத் தொட்டாலும், சற்று ஆசுவாசப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி, படித்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து தேர்வில் விடையளிக்க வேண்டியதிருக்கும் என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''அந்நிய மண் என்பது மட்டுமின்றி மொழி தெரியாத இடத்திற்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படவேண்டியதிருக்கும். ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் தகுதியானது தப்பிப்பிழைக்கும் என்ற விதியை நினைவில் கொள்வதே உதவும்.

சூழ்நிலையோடு பொருந்திப் போவதே பிழைக்கும். இதுதான் இப்போதைய சூழ்நிலை, இதனை எதிர்கொண்டு வென்றால்தான் இலக்கை அடைய முடியும் என்ற நெருக்கடியை சந்திக்கும்போது எதைச் செய்தாவது பிழைக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் அணுக வேண்டும்.

விலங்கின் மூர்க்கத்தோடு...

சிங்கமோ, புலியோ, மானோ ஏதாவதொரு இடர்பாட்டில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பிழைத்தலுக்கு என்ன செய்யவேண்டும் என்பது அதன் மூளையின் தகவமைப்பில் இருக்கிறது. ஆகவே இயற்கையை நம்பி அவர்கள் உள்மனது சொல்லும் விஷயங்களை பின்பற்றி நடப்பவர்கள் வெற்றியடைவார்கள். ஆனால் எனக்கு இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதே என பச்சாதாபத்தில் உழன்றால் பிழைப்பது கடினம்.

என்ன நடந்தாலும் வெற்றி கொள்வேன்; எனக்கா இப்படியொரு நிலையை ஏற்படுத்துகிறாய் எனது சக்தியை பார் என ஒரு வெறியோடு, ஓர் விலங்கின் மூர்க்க மனநிலையோடு அணுகினால் வெற்றி நிச்சயம்'' என உளவியல் ரீதியிலான இப்பிரச்னைக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார் உளவியல் நிபுணர் ஷாலினி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்