நீட் தேர்வு மைய சர்ச்சை: தமிழக அரசு நீதிமன்றத்தில் எப்படிச் செயல்பட்டது?

  • 6 மே 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில், உயர் நீதிமன்றத்திலும், பிறகு உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வழக்குரைஞர்கள் எப்படி செயல்பட்டனர்? அரசின் சார்பில் மாணவர்களின் பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டனவா? இதைப் பற்றிய ஒரு பார்வை.

'நீட்' எனப்படும் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வே தேவையில்லை என்ற முன்பு தமிழகம் போராடி வந்தது. இந்த ஆண்டோ இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் பலருக்கு சிக்கிம், ராஜஸ்தான், கேரளா என்று வெவ்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி்மன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் நடந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் யாரும் வாதிடவே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கியதை எதிர்த்து காளிமுத்து மயிலவன் என்ற வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்துக்குள்ளேயே மையங்களை ஒதுக்கும்படி நீட் தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குரைஞர் வாதம் எதையும் வைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குரைஞரே ஆஜராகவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார் மயிலவன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, "ஏப்ரல் 16ம் தேதி இணையதளத்தில் நீட் தேர்வு சிபிஎஸ்இ செய்தி வெளியிட்டது.

18-ம் தேதி காலை, ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என்றும், அதில் குறிப்பிடப்பிட்ட தேர்வு மையங்களுக்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என்றும், தேர்வு மையத்தை மாற்ற முடியாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி, மதுரை, திருச்சியை சேர்ந்த மாணவர்கள் பலரது ஹால் டிக்கெட்டுகளில், அவர்கள் கேட்ட மையங்கள் எதுவும் ஒதுக்கப்படாமல், கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த மாணவர்கள் கூலி வேலை செய்கிற குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்," என்று தெரிவித்தார் மயிலவன்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த செய்தி பத்திரிகைகளில் வந்தபோது பலருடைய கஷ்டங்கள் தனக்கு தெரிய வந்ததாக கூறுகிறார் மயிலவன்.

மாணவர்கள் சார்பாக வழக்குத் தொடரலாம் என்று அவர்களிடமே கேட்டபோது, சிபிஎஸ்இ-க்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், தங்களை தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள் என்று அஞ்சி அவர்கள் பின்வாங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

எனவே, பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக இதனை தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார்.

"சிபிஎஸ்இ-யையும், தமிழக மருத்துவ கவுன்சிலையும் எதிர் மனுதாரராக சேர்த்து, அவசர வழக்காக நடத்தக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இரண்டாவது பெஞ்ச் விசாரித்தபோது, தற்போது கால அவகாசம் இல்லை என்றும், இந்த தேர்வு மையங்கள் கணினியால் ஒதுக்கப்பட்டவை என்பதால், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சிபிஎஸ்இ தரப்பில் வாதிடப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வழக்கில் தமிழ் நாடு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக எந்த கருத்தையும் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை," என்று குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் மயிலவன்.

தங்கள் தரப்பு வழக்கறிஞர் தியாகராஜன், போதிய மையங்கள் தமிழகத்தில் உள்ளன என்றும், இந்த மாணவர்கள் அனைவரும் 17 வயதேயான மைனர்கள் என்றும், வெளியூரில் தேர்வு எழுதுவதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் வாதிட்டதாக கூறும் மயிலவன், பெரும்பாலும் கிராம பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர்களுக்குப் போதிய பொருளாதார வசதி இருக்காது என்பதால் இவர்கள் நீட் தேர்வு எழுதும் மையங்கள் தமிழ்நாட்டுக்குள் இருப்பது அவசியம் என்று வாதிடப்பட்டது என்கிறார் இவர்.

இந்த வாதங்களை விசாரித்த இரண்டு நீதிபதிகள், தமிழக மாணவர்களுக்கு தமிழ் நாட்டிற்குள் தேர்வு மையங்கள் அமைத்து தேர்வு எழுத ஆவண செய்ய வேண்டும்; தேர்வு மையங்களை மாற்றக் கூடாது என்ற சிபிஎஸ்இ-யின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது; தமிழ் நாட்டில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பித்து அதனை மாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும் எனத் தீர்ப்பளித்தனர்.

இந்த ஆணையை இணையதளத்தில் வெளியிடுவதோடு, தினசரி பத்திரிக்கையிலும் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்," என்றார் மயிலவன்.

ஏப்ரல் 27ம் தேதி இந்த இந்த உத்தரவு வெளியானது. அடுத்த நாள் 28ம் தேதி அந்த ஆணையின் நகல் கிடைத்தவுடன், இந்த விவரங்களைத் தெரிவித்து உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வலியுறுத்தி சிபிஎஸ்இ-க்கு மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறுகிறார் மயிலவன்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், எந்த ஏற்பாடும் நடைபெறவில்லை என்பதால், உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை வாங்கிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அவரே கேவியெட் மனுவும் தாக்கல் செய்தார்.

அதே நாள் இந்த வழக்கில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்திருக்கிறது. கேவியெட் போடப்பட்டதால் அன்று உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உடனடியாகத் தடை பெற முடியவில்லை. மே 3ம் தேதி அவரச வழக்காக இது விசாரணைக்கு வந்தது.

சிபிஎஸ்இ போட்ட இந்த மேல்முறையீட்டில் முதல் எதிர் மனுதாரராக வழக்கறிஞர் மயிலவனும், இரண்டாவது எதிர் மனுதாரராக தமிழ்நாடு அரசும் சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால், "இந்த விசாரணை நடைபெற்றபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை," என்கிறார் மயிலவன்.

வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைவதால் மாணவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பே எடுத்துரைத்தது என்கிறார் மயிலவன்.

ஆனால், சிபிஎஸ்இ- வழங்கிய மேல்முறையீட்டில், எல்லா மாநில மாணவர்களுக்கும் அவரவர் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நேரமின்மையின் காரணமாக தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மட்டும்தான் வேறு இடங்களில் தேர்வு மையங்கள் வழங்கியுள்தாகவும் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ வழங்கிய பதிலிலேயே தமிழ்நாடு மட்டும் பழிவாங்கப்பட்டுள்ளது தெரிவதாகக் கூறுகிறார் மயிலவன்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் இந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக எதிர்க்கப்படும் நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்தவை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன், 2013ம் ஆண்டு தொடங்கி தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (NEET - நீட்) நடத்திதான் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.

இதற்கு எதிராக, மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர்களை தேர்வு செய்வது தமிழகத்தில் வழக்கமாக இருப்பதாகக் கூறி தமிழக அரசு முறையிட்டது.

இதன் விளைவாக, 2013ம் ஆண்டு நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் முடிவில் அந்த தேர்வை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை நடத்திய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 2 பேர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஒருவர் ஆதரவாகவும் இருந்தனர்.

இந்த தீர்ப்பின் மீதான மறு ஆய்வு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணை முடிந்து, 2016 ஆம் ஆண்டு நீட் தேர்வு மூலமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், தமிழ்நாடு, தெலங்கானாவுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2017ம் ஆண்டு தொடங்கி எல்லா மாநிலங்களிலும் நீட் தேர்வு மூலம்தான் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்தியில் இது தொடர்பாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழகத்தில் அதற்கென தனியாக சட்டமிருப்பது, செல்லாது என்றும் கூறப்பட்டது.

இது பற்றி சிபிஎஸ்இ இயக்குநர் (மத்திய பள்ளி கல்வி மற்றும் நீட்) சான்யாம் பரத்வாஜிடம் பிபிசி தமிழ் கருத்து கேட்டது. இது தொடர்பாக கூற வேண்டியவற்றை வழக்கில் தெரிவித்துவிட்டதாகவும், மேலதிக தகவல்கள் எதையும் வழங்க முடியாது என்றும் அவர் கூறிவிட்டார்.

இது பற்றி தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்று தெரிவித்தார்,

"நீட்" தேர்வால் நிகழ்ந்த மரணம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
neet

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :