இயற்கை பேரிடர்களை தாங்கும் பலம் இந்தியாவுக்கு உள்ளதா?

படத்தின் காப்புரிமை AFP

திடீரென்று ஏற்படும் மின்னல் மற்றும் இடிகளை தாங்கும் அளவுக்கு இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதே வானிலை வல்லுனர்களின் ஏகமனதான பதிலாக உள்ளது. வட இந்தியா முழுவதும் சமீபத்தில் ஏற்பட்ட அதிவேக காற்று மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தபட்சம் 125 பேர் இறந்த பின்னர் இந்த கேள்வி எழுந்துள்ளது.

மேலும், வரும் நாட்களில் மோசமான வானிலை தொடர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி சதிதேவி கூறியுள்ளார்.

குறுகிய கால கண்ணோட்டத்தில் இதை பார்த்தால் மேற்கத்திய இடையூறுகள் மற்றும் வெப்பமண்டலத்திற்கும் இடையிலான மோதல்களால் தூண்டப்பட்ட ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மின்னல் மற்றும் மோசமான வானிலை ஏற்படுவதற்கு காரணமாக புவி வெப்பமடைதலை கருதுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளிகளில் இது மிகவும் மோசமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாட்டின் பல மின்னல் பாதிப்புள்ள பகுதிகளில் பணியாற்றிய அனுபவமுள்ள ஜார்கண்ட் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரியான சஞ்சய் ஸ்ரீவஸ்தவா, பருவமழை துவங்குவதற்கு முன்பு செய்யவேண்டிய முன்னேற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தொய்வே புழுதிப்புயல் மற்றும் மின்னலால் ஏற்பட்டுள்ள அழிவிற்கு முக்கியமான காரணமென்று கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை AFP

மோசமான வானிலை நிலவும் சூழ்நிலையின்போது தங்களை தற்காத்துக்கொள்வதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமலிருப்பதும் பேரழிவிற்கான காரணங்களுள் ஒன்றென அவர் கூறுகிறார். மின்னற் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளிலுள்ள கட்டடங்கள் மற்றும் உயர்ந்த பகுதிகளில் பொதுவாக வைக்கப்படும் இடிதாங்கிகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் கூட இந்தியாவில் பரவலாக அமைக்கப்படுவதில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட மின்னல் தாக்குதல் சம்பவங்களில் மட்டும் 3,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். ஆனால், அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் நடந்த மின்னல் பாதிப்பு சம்பவங்களோடு ஒப்பிடும்போது வெறும் 16 பேர் மட்டுந்தான் உயிரிழந்துள்ளனர்.

தற்காப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவில்லை என்றால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்துவதற்கு அடிப்படை தேவையாக கருதப்படும் ஆபத்து வரைபடத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் இதுவரை தயார் செய்யவில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மின்னல் பாதிப்புள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டறிவதற்கு மின் உணர்திறன் சோதனைகள் நடத்தப்படவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

உதாரணத்திற்கு, மோசமான மின்னல் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்தான சூறாவளி வீசும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் 'டோப்லர் ரேடார்கள்' உடனடியாக அமைக்கப்படவேண்டும். டோப்லர் ரேடார்கள் காற்றின் திசை, வேகம் மற்றும் திசைவேகத்தை அறிவதற்கு பயன்படுகிறது. இந்தியாவில் இத்தகைய ரேடார்கள் வெறும் 27 தான் உள்ளது.

ஆந்திரப்பிரதேசம், கேரளா, ஜார்கண்ட் மற்றும் ஒரிசா போன்ற இந்திய மாநிலங்கள் ஆபத்து வரைபடங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களை கண்காணிக்கும் அமைப்புகளையும் நிறுவியுள்ளது.

மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மேலாண்மை குறித்த விடயங்கள் ஜார்கண்ட் மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் வானொலி மற்றும் செய்தித்தாள்களின் மூலம் விவசாயிகளிடையே பல்வேறு வகையான காலநிலை அமைப்புகள் மற்றும் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், ஜார்கண்டில் கட்டப்படும் கட்டடங்களில் இடிதாங்கி அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

குறைந்த மின்னழுத்த மின்னல்களை கண்காணிக்கும் அமைப்புகள் ஆந்திராவில் நிறுவப்பட்டுள்ளது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் கட்டடத்தில் ஒரு ஃபாரடே கூண்டு (கம்பி அல்லது உலோக தகடுகளின் ஒரு கொள்கலன்) பொருத்தப்பட்டுள்ளது. இது வெளிப்புற மின் தாக்குதல்களிலிருந்து கட்டிடங்களை பாதுகாக்கிறது. விமான நிலையங்களில் நிறுத்தப்படும் விமானங்களை பாதுகாப்பதற்கு இதேபோன்ற கூண்டு போன்ற அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

தேசிய அளவில் பார்க்கும்போது, மின்னல் மற்றும் இடித் தாக்குதல்களை கண்காணிக்கும் அமைப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான முன்னோட்டமானது நாக்பூர், ராஞ்சி, கொல்கத்தா, புவனேஷ்வர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த அமைப்பு இன்னும் 18 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.

"மக்களின் உயிர் மற்றும் சொத்துகளை" பாதுகாப்பதற்கு இந்த பணிகள் வேகமாக முடிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "இந்தியாவில் அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஒற்றை இயற்கை பேரிடராக இருக்கும் மின்னல் தாக்குதலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார். இந்தியாவில் தேசிய பேரிடராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள 12 பேரிடர்களில் மின்னல் தாக்குதல்கள் இடம்பெறவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: