நாளிதழ்களில் இன்று : "கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்" - குடியரசுத் தலைவர்

  • 6 மே 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - "கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்"

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்திருப்பதை, மாநிலத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை பலகலைக்கழகத்தின் 160வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையிலான படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. அறிவு மற்றும் திடமான கல்வி அடித்தளத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் சென்னை பல்கலைக்கழகம் நிகழ்ந்தது" என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்திருக்கின்றன. மேலும், தமிழக மக்களும், கல்வி நிறுவனங்களும் நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார் என அச்செய்தி விவரிக்கிறது.

தினமலர் - "கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்?"

தமிழகத்தை போல, கர்நாடக அரசியல் கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வினியோகிக்க துவங்கியுள்ளதாக தினமலர் நாளிதழ் தனது முதல் பக்கத்தில் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனை தடுக்க, தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 152 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது.

கர்நாடக மாநிலத்தில் மே 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரசும், மீட்கும் முயற்சியில் பா.ஜ.கவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தி இந்து (ஆங்கிலம்) - "மின்சாரம் சென்றடையாத தமிழக கிராமம்"

படத்தின் காப்புரிமை Getty Images

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை அருகே உள்ள மல்லியம்மன் துர்கம் என்ற கிராமத்தில் மின்சாரம் என்பது எட்டாக்கனியாக உள்ளதாக தி இந்து நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினுள் இருக்கும் இந்த கிராமத்தில் சுமார் 480 மக்கள் வசிக்கின்றனர். சாலை வசதி இல்லாததால் தினமும் அவர்கள் 9 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய சூழல் உள்ளது.

"கிராமத்தில் பேட்டரி ரேடியோவை தவிர, எந்த மின்னணு சாதனங்களும் கிடையாது" என்று அக்கிராமத்தின் முதல் பட்டதாரியான சுப்பிரமணி தெரிவித்தார் என இந்நாளிதழ் செய்தி கூறுகிறது.

மலைப்பகுதி மற்றும் அடர்ந்த காட்டுக்குள் இந்த கிராமம் இருப்பதினால் மின்சார வசதி தர கடினமான உள்ளதாக கோபிச்செட்டிபாளையத்தின் டான்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், ரூ.21.31 லட்சம் செலவில் 203 வீடுகளுக்கு சோலார் மின் வசதி செய்து தரப்படும் என்று கூறப்பட்டதாக இச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்