ஜார்க்கண்ட்: மீண்டும் ஓர் இளம்பெண் வன்புணர்வு செய்யப்பட்டு எரிப்பு

  • 7 மே 2018

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட்டில் மீண்டும் ஒரு இளம் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொளுத்தப்பட்டார். மருத்துவ மனையில் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களில் இதுபோன்ற சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடப்பது இது இரண்டாவது முறை.

ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக போலீசார் குறிப்பிடும் முந்திய சம்பவத்திலும் இளம் பெண் ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்த சம்பவத்தில் அவர் இறந்துவிட்டார்.

இந்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் கூறவில்லை. அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள் இந்தியாவை உலுக்கி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருவர் கட்டிவைக்கப்பட்டு, போதை அளிக்கப்பட்டு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதும், உன்னாவில் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி ஒருவரின் தந்தை புகார் அளித்ததற்காக வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, காவலில் இறந்ததும் சமீப காலத்தில் இந்தியாவை உலுக்கிய பாலியல் குற்றச் சம்பவங்களில் சில.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார் குற்றம்சாட்டப்பட்ட நபர்.

காஷ்மீர் சிறுமி கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் இந்துக்கள் என்பதால் அந்த மாநிலத்தில் ஆழமான வகுப்புப் பிரிவினை ஏற்பட்டு, அங்கு அந்த வழக்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கை பஞ்சாபில் உள்ள நீதிமன்றம் விசாரிக்கும் என்று திங்கள் கிழமை உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

தற்போது ஜார்க்கண்டில் நடந்துள்ள இரண்டாவது சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் 95 சதவீதக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பிபிசி ஹிந்தி செய்தியாளர் ரவி பிரகாஷிடம் போலீசார் கூறியுள்ளனர்.

"தாம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட நபர் கூறினார்," என்று காவல்துறை அதிகாரி ஷைலேந்திர பார்ன்வால் தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணை வெள்ளிக்கிழமை பாகூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அப்பெண்ணின் உறவினர் வீட்டில் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றம்சாட்டப்பட்ட நபரும் ஒரு பகுதியில் வசிப்பவர்கள். அந்தப் பெண் தனியாக இருக்கும் நேரம்பார்த்து வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்து பிறகு அவரை எரித்துள்ளார் அந்த நபர். அந்தப் பெண்ணின் அலறல் கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்து வீட்டார் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை சத்ரா மாவட்டத்தில் நடந்த முந்திய சம்பவத்தில் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: