மைசூர்: குடிசைகள்வாசிகளின் கனவுகளை காட்சிப்படுத்திய ஓவிய முயற்சி

  • 9 மே 2018

பெரிய அரண்மனைகள், அழகிய கட்டடங்கள் மற்றும் பசுமை நிறைந்த தோட்டங்களுக்காக அறியப்பட்டது மைசூர். ஆனால் கோபுரங்கள் இல்லாத பெரிய கட்டடங்களும், பசும்பொழில்சூழ் மரம் செடிகள் இல்லாத இடமும் இதே நகரத்தில்தான் இருக்கிறது.

இது வேல்மா குடிசைப்பகுதி. மண் சுவர்கள், தார்பாய் வேயப்பட்ட கூரைகளை கொண்ட வீடுகளே இங்கு காணப்படுகின்றன. இரண்டு-மூன்று மரங்கள் மட்டுமே இருக்கின்றன. வரிசையே இல்லாமல் தாறுமாறாக கட்டப்பட்ட வீடுகள், மண் படிந்த புதர்கள்.

இந்த குடிசைப்பகுதிகளில் இருக்கும் சாலையானது பிளாஸ்டிக் பைகளால் நிறைந்திருக்கிறது. குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் ஈக்கள் மொய்க்கின்றன. சந்தனத்திற்கு பெயர் பெற்ற மைசூர் நகரில் சாக்கடை நாற்றம் வீசும் இடமும் இருப்பது நிதர்சனமான உண்மை.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்த குடிசைப்பகுதிகளை நல்ல தரமான வசிப்பிடமாக மாற்றவேண்டும் என நினைத்தேன். இங்கு வாழும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இடத்தை மாற்றவேண்டும். பிற இடங்களில் வசிக்கும் மக்களைப் போலவே இங்குள்ளவர்களும் வாழவேண்டும்.

முதலில் இதுபோன்ற யோசனை மனதில் உதித்தாலும் அதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி மனம் சிந்தித்தது. அதன் பின்னணி, சாதக பாதகங்கள் என நீண்ட நடைமுறை…

அட, உண்மையில் என்னால் அவர்களுக்கு ஒரு காலனியை உருவாக்க முடியவில்லை என்றால் என்ன? ஆனால் கலைஞரான நான் எனது கேன்வாஸ் ஓவியத்தின் மூலம் அதை செய்ய முடியுமே?

கற்பனை மனதில் கடைவிரித்த பிறகு, கலைஞனின் கைகளை கட்டிப்போட முடியுமா? மடிக்கணினி மற்றும் கிராபிக்ஸ் அட்டையை எடுத்தேன். "இந்த காலனியை மீண்டும் உருவாக்க விரும்பினால், என்ன செய்வீர்கள்? உங்கள் காலனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்? சொல்லுங்கள்" என்று அங்குள்ள மக்களைக் கேட்டேன்.

Interactive A slum in Mysore reimagined

How it should be

Mysore transformation slider

Current

Current

முதலில் சற்று வெட்கத்துடன் தயங்கிய பிறகு, சிலர் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள். சிலர், பலராக அவர்களின் ஆசை என் முன்னே படமாக விரிந்தது. பள்ளிக்கூடம் ஒன்று இருக்க வேண்டும் என்று சிலர் சொன்னால், மருத்துவமனை அவசியம் என்று பலர் சொன்னார்கள். தண்ணீர் லாரிகள் வேண்டும் என்று பெண்கள் கேட்க, ஆண்களோ உள் முற்றம் கொண்ட வீடு வேண்டும் என்று சொன்னார்கள். சிறுவர்களோ, விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

சாலைகள், கழிப்பறைகள், மின்சாரம், காங்கிரீட் வீடுகள் போன்ற பல அடிப்படை வசதிகள் என்பது இவர்களின் ஆசையாக இருக்கிறது. இந்த அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட வாழ்க்கைக்காகவே இவர்களின் வாழ்க்கை போர்க்களமாக தொடர்கிறது. ஏதோ, எப்படியோ வாழ்க்கையை வாழ்ந்து கழிக்கிறோம் என்னும் இவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் சுடும் நிதர்சனங்கள்.

தங்களின் முக்கியத் தேவை கழிப்பறை என்று வெட்கப்பட்டுக் கொண்டே தயக்கத்துடன் ஒரு இளம் பெண் கூறினார். திறந்தவெளியை காலை மாலை நேரங்களில் கழிப்பறையாகப் பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாக அந்த பெண் சொல்கிறாள்.

"மத்தவங்களை மாதிரி நல்லா வாழனுன்னுதான் ஆசைப்படறோம், ஆனால் அதுக்கு எங்களுக்கு விதி இல்லையே!" என்று சொல்லும்போதே அழுகிறார் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.

அவர்கள் பேச ஆரம்பித்த பிறகு, ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, நான் படத்தை வரைந்துக் கொண்டே இருந்தேன். என்னருகே அமர்ந்திருந்த குடிசைவாசி ஒருவர் தம்பூரா இசைத்துக் கொண்டிருந்தார்.

தேர்தல் சமயத்தில் இங்கு வரும் அரசியல்வாதிகள் இவர்களுக்கு எதாவது ஒரு நம்பிக்கையை கொடுப்பார்கள். தேர்தல்கள் வந்தால், அவர்களும் வருவார்கள், இவர்கள் முன்னால் கைகூப்பி, தலை வணங்கி நிற்பார்கள். வருபவர்களில் யாராவது ஒருவர் வெல்வார்கள், ஆனால் இவர்களின் வாழ்க்கைநிலை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கும்…

ஜனகராஜ் என்ற முதியவர் இவ்வாறு சொல்கிறார், "இங்க வந்து நாற்பது ஆண்டுகள் ஆயிடுச்சு, வெயில் காலத்தில் தார்பாலின் பிளாஸ்டிக்குள் பச்சைக் குழந்தைகள் உட்பட அனைவரும் வெந்து புழுங்குவோம். திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்த செல்லும் குழந்தைகளில் எத்தனை பேர் ரயில் மோதி இறந்திருக்கிறார்கள் தெரியுமா? அண்மையில் இருட்டு வேளையில் வெட்டவெளிக்கு மலம் கழிக்க சென்ற ஒரு சிறுவனை பாம்பு கடித்து இறந்துபோன சம்பவம் நிகழ்ந்தது..."

சாலை, நடைபாதை, உள்முற்றம், தொங்கும் விளக்கு, தண்ணீர் டாங்கிகள், தெரு விளக்குகள், விளையாட்டு மைதானம் என அவர்கள் கேட்ட அனைத்தையும் பார்த்த விழிகள் பார்த்தபடி பூத்துக்கிடந்தன.

ஆம்… குடிசைவாசிகளின் கற்பனையில் விரிந்த என்னுடைய படம் படமாக விரிந்ததை கண்ட கண்கள்தான் ஆச்சரியத்தில் விரிவடைந்தன.

அதை மீண்டும்-மீண்டும் பார்த்து அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை பார்க்க என் கண்கள் இரண்டும் போதவில்லை என்று சொல்லலாம் என்று நினைக்கும்போதே இரண்டு கண்களும் பனித்துவிட்டன.

அவர்கள் விரும்பும் குடியிருப்பையோ, வீட்டையோ என்னால் கட்டித்தர முடியுமா? அவர்களின் அடிப்படைத் தேவைகளை கட்டித்தரும் வல்லமை என்னிடம் இருக்கிறதா? என்ற கேள்விக்கணைகள் அங்கிருந்து வெளியே வந்த பிறகும் என் மனதை ஆக்கிரமித்து இருந்தன.

மனதின் மறுபுறமோ, அவர்களின் கற்பனை குடியிருப்பை கலைப்படைப்பாக பார்த்த அவர்களின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியை நினைத்து மகிழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :