இந்திய பிரிவினைக்கு ஜின்னா மட்டும்தான் காரணமா?

  • 8 மே 2018
இந்தியா இழந்த தேசியவாதி முகம்மது அலி ஜின்னா! படத்தின் காப்புரிமை BERT BRANDT

ஒரு அமைப்பிற்கு நிதியுதவி வழங்கிய ஒருவருக்கு மரியாதை செய்வது இயல்பானதுதானே? அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சுவரில் முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படம் வைத்தது தொடர்பாக சர்ச்சைகள் வலுக்கின்றன.

இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியதில் இருந்து, தனது சொத்துக்களின் பெரும் பங்கை வழங்கிய ஜின்னா அந்த காலத்தில் இவ்வாறு பொதுநலன் விரும்பிய ஒரே தலைவராக திகழ்ந்தார்.

பல்கலைக்கழத்திற்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய ஜின்னா

சுதந்திரத்திற்கு முன், இந்தியாவின் செல்வந்தர்களில் ஒருவராக திகழ்ந்த ஜின்னா, கஞ்சத்தனம் மிக்கவர் என்று அறியப்பட்டவர். ஆனால், தனது சொத்துக்களில் ஏறக்குறைய அனைத்தையும் ஏ.எம்.யு, பெஷாவரில் உள்ள இஸ்லாமியக் கல்லூரி மற்றும் கராச்சியின் சிந்து மதரேசாதுல் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம்.

அவர் நன்கொடை வழங்கிய கல்வி அமைப்புகளில், சிந்து மதரேசாதுல் தவிர வேறு எந்தவொரு கல்வி நிலையத்திலும் அவர் கல்வி பயின்றதில்லை என்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

இதில் மற்றொரு ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கல்வி நிறுவனங்களுக்கு சொந்த விருப்பப்படி தனது சொத்துக்களை வழங்கும் முடிவை பாகிஸ்தான் உருவாவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1939 மே 30ஆம் தேதியன்று உயிலாக எழுதி வைத்திருக்கிறார் ஜின்னா.

இதற்கு பிறதுதான் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை மிகவும் வலிமையாக முன்னெடுத்தார் ஜின்னா. தான் நன்கொடை அளிக்கும் ஏ.எம்.யூ பல்கலைக்கழகம் பாகிஸ்தானில் இடம்பெறாது என்பதை அறிந்த பின்னரும், அவர் உயிலை திருத்தவும் இல்லை, மாற்றியமைக்கவும் இல்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டிஷ் அரசின் கடுமையான எதிரி

ஆனால், இந்தியாவுக்கு அவர் அளித்த நன்கொடை சொத்து மட்டுமா? ஜின்னா கூச்ச சுபாவம் கொண்டவர், சிறந்தவர் என்று கூறி அவர் மீதான மரியாதையை வெளிப்படுத்தினார் சரோஜினி நாயுடு. ஆழமான கருத்தாக்கங்களை கொண்டவரும், பாம்பேயில் மிகப்பிரபலமான வழக்கறிஞருமான ஜின்னா, அனைவரையும் ஈர்க்கும் ஒரு ஆதர்ச தலைவர் என்றும் சரோஜினி நாயுடு கூறினார்.

சட்டசபை அல்லது வெளியில் அவர் "பிரிட்டிஷ் அரசின் தீவிர எதிரியாக" கருதப்பட்டார். தனது அறைக்கு வெளியில் நூற்றுக்கணக்கான இளம் மாணவர்களிடம் பேசும் ஜின்னா, அவர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்துவார். 'பாம்பேயின் முடிசூடா மன்னர்' என்று ஜின்னாவுக்கு புகழாரம் சூட்டினார் சட்ட நிபுணர் எம்.சி சக்லா.

படத்தின் காப்புரிமை Getty Images

'முஸ்லிம் கோகலே- ஜின்னாவின் வி்ருப்பம்

வசதியான சொந்த வாழ்க்கையையும் புகழ்பெற்ற உலகத்தை விட்டு வெளியேறி, வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என பலருக்கு ஊக்கமளிப்பவராக திகழ்ந்தார் சமூக சீர்திருத்தவாதி கோபால கிருஷ்ணா கோகலே. ஜின்னாவின் சத்தியமும், அசாத்திய திறமையும், ஆழ்ந்த ஈடுபாட்டையும் கோகலே கண்டுகொண்டார். இதைத்தவிர, ஹிந்து-முஸ்லீம் சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்வதற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு உகந்தவர் ஜின்னா என்றும் நம்பினார்.

முஸ்லீம் லீக்கில் இணையுமாறு அறிவுறுத்திய கோகலேயின் சொல்லுக்கு இணங்கினார் ஜின்னா. கோகலேவை மிகவும் மதித்த ஜின்னா, 'முஸ்லீம் கோகலே' ஆக விரும்பினார்.

1916ஆம் ஆண்டு,ல் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் சுதந்திரம் கோரி ஒன்றாக செயல்பட்டபோது, தனது கனவு கிட்டத்தட்ட நனவாகும் காலம் நெருங்குகிறது என்பதை உணர்ந்தார் ஜின்னா. ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது கனவு கானல்நீராகிவிட்டதை உணர்ந்து உடைந்துபோனார் ஜின்னா.

அவசர கதியில் செயல்பட்ட மகாத்மா காந்தி மற்றும் அவரது ஒத்துழையாமை அரசியல், குழப்பம் மற்றும் வன்முறையை பரப்பலாம் என்று ஜின்னா நம்பினார். எனவே எதிர்ப்பு தெரிவித்தபோது, காங்கிரசிலிருந்து ஜின்னா வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்பு பாலம் ஜின்னா

காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதிலும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை பற்றிய ஜின்னாவின் நம்பிக்கை அப்படியே தொடர்ந்தது, முஸ்லிம் வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்க்க ஜின்னா மறுத்துவிட்டார்.

காங்கிரசிலிருந்து பிரிந்த நீண்ட காலத்திற்கு பிறகும், தேசியத் தலைவராக மதிக்கப்பட்டார் ஜின்னா. நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்த அவர், தனது சமூகத்தை முன்நிறுத்த மறுத்துவிட்டார்.

மஹ்மூதாபாத் மன்னர் ஜின்னாவை பற்றிய நினைவுகளை நினைவுகூர்கிறார்: "1926 ல் அவர் 12 வயது சிறுவனாக இருந்தபோது, "நீங்கள் முதலில் முஸ்லீமா அல்லது இந்தியரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளி மாணவனாக இருந்த நான், முதலில் முஸ்லிம், பிறகு இந்தியன் என்று பதில் சொன்னேன். அதை இடைமறித்த ஜின்னா, "என் குழந்தைகளே, முதலில் நீங்கள் இந்தியர்கள், பிறகுதான் முஸ்லிம்கள்" என்று உரத்த குரலில் வலியுறுத்தினார்.

காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜின்னா, பிறகு முழு மூச்சுடன் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டார். அவர் சுயேட்சைகளை இணைத்து காங்கிரஸுக்கு ஒத்துழைப்பு நல்கினார். மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஜின்னா இவ்வாறு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமளித்தது.

ஸ்வராஜ் கட்சியின் உறுப்பினராக சட்டமன்றத்தில் காங்கிரஸுடன் ஒத்துழைத்தார். இவ்வாறாக காங்கிரஸ் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அவர் எப்போதுமே தவறவிட்டதில்லை.

ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜின்னா

சட்டசபையில் நீண்டகாலம் சேவைபுரிந்த ஜின்னா, அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்தார். எதிர்கால இந்தியாவை வடிவமைப்பது தொடர்பான கேள்விகளை தொடர்ந்து முன்வைத்த ஜின்னாவின் கோரிக்கைகளில் முதன்மையாக இடம் பிடித்தது கல்வித்துறை. இந்திய ராணுவம், பொதுத்துறை, பொருளாதார சுதந்திரம் போன்ற முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக அயராது பாடுபட்டார் ஜின்னா.

முடிவில், ரெளலட் சட்டத்தை எதிர்ப்பவர்களில் முதல் நபராக இருந்த அவர், அது நிறைவேற்றப்பட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அரசு நிர்வாகத்தை சீர்திருத்துவதற்காக பிரிட்டன் அரசு அனுப்பிய சைமன் கமிஷனில் இந்தியர்கள் இடம்பெறாததை எதிர்த்து முழக்கமிட்டார் ஜின்னா. இதற்காக, முஸ்லீம் லீக்கில் பிளவு ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட, சைமன் கமிஷனை எதிர்ப்பதற்காக பொதுமக்கள் ஆதரவை திரட்டும் முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

சைமன் கமிஷனுக்கு ஆதரவளித்த முகம்மது ஷபியின் தலைமையின் கீழ் முஸ்லீம் லீக் பிளவுபட்டு, ஒரு தனி கட்சியை அமைத்து, ஹிந்து மகாசபையுடன் கைகோர்த்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் எதிர்பார்ப்புகள் தகர்ந்தபோது...

அனைத்து கட்சி மாநாட்டில், ஜின்னாவின் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸை நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியை ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் முறியடித்தபோது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுவதற்கான ஜின்னாவின் நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கிப்போனது.

அதன் பிறகும்கூட மனதளவில் அவர் ஒரு தேசியவாதியாகவே இருந்தார். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இருந்து தனிநாடு வேண்டும் என்று கவிஞர் முகமது இக்பால் முன்வைத்த 'பாகிஸ்தான்' கோரிக்கையை கனவு என்றே கூறினார்.

உண்மையில், 1936 வரை, ஜின்னா ஒரு தேசபக்தர் என்பதோடு, தாராளவாத தேசியவாத முஸ்லீம் குழுவை கட்டி எழுப்பமுடியும் என்று நம்பினார். சமுதாயத்தில் இருக்கும் பிற முற்போக்கான சமூகங்களின் மக்களுடன் முஸ்லிம்களும் இணைந்து நடக்க முடியும் என்று ஜின்னா நம்பினார்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய பிரிவினைக்கு காரணகர்த்தா ஜின்னா மட்டுமா?

இந்திய பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு என்று நினைக்கும் சமகால மக்கள் ஜின்னாவுக்கு அதில் சம்பந்தம் இல்லை என்று கருதுகிறார்கள். ஜின்னாவின் நெருங்கிய நண்பர் காஞ்சி துவார்காதாஸ் "சுதந்திரத்திற்கு பத்து வருடங்கள்" என்ற தனது புத்தகத்தில், 1942 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜின்னாவுடன் 90 நிமிடம் பேசிய முக்கியமான உரையாடலை குறிப்பிட்டிருக்கிறார். பாகிஸ்தான் என்ற நாடு ஒருபோதும் உருவாகாது என்று ஜின்னா கருதியாக தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான் பற்றி ஜின்னாவிடம் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "நண்பரே காஞ்சி, ஒரு சமிக்ஞை, நட்புக்கான ஒரேயொரு சமிக்ஞையை மட்டுமே நான் காங்கிரஸில் இருந்து எதிர்பார்க்கிறேன். இதுவரை எனக்கு அது கிடைக்கவில்லை. காங்கிரஸிடம் இருந்து அது கிடைத்தால், பிரச்சனைக்கான தீர்வை காண்பது சுலபமாகிவிடும்."

ஆனால், ஜின்னாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தங்கள் சொந்த வழியில் பெயரை தூக்கி பிடிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :