நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

  • 9 மே 2018
நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று காலை வெளியிட்ட நிலையில், ரஜினி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் ஆகியோரின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

மூன்று மொழிகளில் 'காலா'

திரைப்பட நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் 'காலா' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளார். இன்று காலை, தமிழுடன் சேர்த்து தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களையும் அவர் வெளியிட்டார். இதற்குமுன், அவர் யு டியூப் தளத்தில் வெளியிட்ட காலா படத்தின் 'செம்ம வெயிட்டு' என்ற பாடலை தமிழில் 30 லட்சம் பேரும், தெலுங்கு மற்றும் இந்தியில் 2 லட்சத்திற்கும் அதிகமானோரும் கண்டு களித்துள்ளனர்.

எட்டு பாடல்கள் வெளியீடு

இன்றைய தினம், காலா திரைப்படத்தில் இடம்பெறும் செம்ம வெயிட்டு பாடல் உள்பட 9 பாடல்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ். டோப்படிலீக்ஸ், அருண்ராஜா காமராஜ், லோகன், கபிலன், ரோஷன் ஜேம்ராக், உமா தேவி, அறிவு ஆகியோர் காலா படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர்.

நிக்கல் நிக்கல் பாடலுக்கு வரவேற்பு

புதிதாக வெளியிடப்பட்ட 8 பாடல்களில் நிக்கல் நிக்கல் பாடல் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. டோப்படிலீக்ஸ் மற்றும் லோகன் இதற்கு வரிகளை எழுதியுள்ளனர். யு டியூப் தளத்தில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலானோர் இதனை பார்த்துள்ளனர். உரிமை மீட்போம், கற்றவை பெற்றவை, போராடுவோம் போன்ற பிற பாடல்களிலும் வரிகள் அரசியல் சாயலோடு இருக்கின்றன. காலா திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் காலா படத்தின் பாடல்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், காலா போன்ற காளான்கள் எல்லாம் காணாமல்தான் போவர்கள் என்றும், இன்று ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதால் ஞானம் வந்துவிடாது என்றும் தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் இணையத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு பதிலளித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்