நாளிதழ்களில் இன்று: "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" - நடிகர் ரஜினி

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (ஆங்கிலம்) : "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை"

இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக காலா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன் மகள் வயதில் இருக்கும் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனக்கு அரசியல் படம் மீது விருப்பம் இல்லை என்றும், சமீபத்தில் அரசியல் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதனை மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.

நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

'காலா'வில் அரசியல் உள்ளது. ஆனால் இது அரசியல் படமல்ல என்று அவர் கூறினார்.

தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க தகுந்த நேரம் வரவில்லை என்று கூறிய ரஜினி, தமிழக மக்கள் விரைவில் நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கலாம் என்று உறுதியளித்ததாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர் : "காலா - அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை"

காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காலா பட பாடல்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

படத்தின் காப்புரிமை DINAMALAR

ஜாதி, மத மோதலை ஊக்குவிக்க, அப்பாவி மக்களை திரைப்படம் வழியாக அரசுக்கு எதிராக தூண்டி விட நினைத்தால் அரசு பார்த்துக் கொண்டிருக்காது. ஜாதி, மத துவேஷத்தை ஏற்படுத்தி மக்களை தூண்டி விடுவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியதாக அச்செய்தி விவரிக்கிறது.

தினமணி : "மல்லையாவின் கடனை வசூலிக்க அனுமதி"

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா வங்கிகளில் விஜய் மல்லையா பெற்ற 9,000 கோடி ரூபாய் அளவிலான கடனை வசூலிக்கும் வகையில், அவரது சொத்துக்களை முடக்குவதற்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், மல்லையாவின் சொத்துக்களை விற்று கடனை ஈடுகட்டுவதற்காக ஐடிபிஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு அனுமதி அளித்த இந்திய கடன் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை உடனடியாக செயல்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா தவிர்த்து உலகெங்கிலும் உள்ள மல்லையாவின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது மல்லையாவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கிங்பிஷர் நிறுவனத்துக்காக இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் வேண்டுமென்றே மோசடி செய்ததாக மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அவர் லன்டன் தப்பிச் சென்றார். பிரிட்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட மல்லையா உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

இந்திய நீதிமன்றங்களில் தமக்கு அநீதி இழைக்கப்படலாம் என்று கூறி மல்லையா நாடு திரும்ப மறுத்து வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: