கர்நாடகத் தேர்தலில் காவிரி விவகாரம் முக்கியப் பிரச்சனையா? #GroundReport

  • 10 மே 2018

கர்நாடக மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காவிரி விவகாரம் வாக்குகளைத் தீர்மானிக்கும் விவகாரமாக இல்லை. காவிரி பாயும் பிராந்தியங்களிலும்கூட உள்ளூர் பிரச்சனைகள், ஜாதி ஆகியவையே வாக்குகளைத் தீர்மானிக்கின்றன.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

மண்டியா மாவட்டம் பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. இந்தக் கோடை காலத்திலும் சாலையின் இரு புறங்களிலும் உள்ள வயல்வெளிகளில் கரும்பும் நெல்லும் அறுவடை நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ஆங்காங்கே கரும்பாலைகளில் வெல்லம் காய்ச்சும் வாசனை வாகனங்களில் செல்வோரையும் ஒரு நிமிடம் நின்று செல்ல வைக்கிறது. தமிழகத்தின் காவிரி டெல்டாவைப் போலவே மண்டியாவுக்கும் காவிரி வெறும் நதியல்ல; உயிர் நாடி.

மண்டியாவிலிருந்து பாண்டவபுரா செல்லும் வழியில் இருக்கிறது தொட்டபேடரல்லி என்ற சிறிய கிராமம். அங்கு வசிக்கும் விவசாயியான சிவலிங்கம கவுடாவிடம் பேசினால், காவரியின் உரிமையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார். அப்படியானால், இந்த விவகாரத்தில் எந்தக் கட்சி சிறப்பாகச் செயல்படுவதாக நினைக்கிறீர்கள்? யாருக்கு ஓட்டு என்று கேட்டால், நிதானமாக பதில் சொல்கிறார்: "அதை இப்ப சொல்ல முடியாது. அதுக்கெல்லாம் பல விஷயங்களை யோசிக்கனும்".

காவிரியில் சிறப்பாக செயல்படும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டால், எல்லாக் கட்சியும் இதில் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றன; இதற்காக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியாது என்கிறார் அவர்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது சிக்மரல்லி. அங்குள்ள சோமைய்ய கவுடா, அனில் குமார் போன்ற விவசாயிகள் தேர்தலுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம் என்கிறார்கள். "காவிரியை தேர்தலோடு இணைத்துவிடாதீர்கள். நிலைமை மோசமாகிவிடும்" என்கிறார்கள்.

கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், எந்தத் தலைவரும் காவிரி குறித்து இங்கே பேசுவதில்லை என்பது புரியும். பெரும்பாலும் அந்த மாவட்டத்துப் பிரச்சனைகள், தொகுதியின் பிரச்சனைகளை முன்வைத்தே வாக்குகளைக் கேட்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN

"கர்நாடகத்தில் தேர்தல் ஒருபோதும் ஆதாரமான பிரச்சனைகளை முன்வைத்து நடப்பதில்லை. பெரும்பாலும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்தே நடக்கின்றன. குறிப்பாக ஜாதி, வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படும் பணம் ஆகியவையே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன" என்கிறார் கர்நாடக மாநிலத்தின் மிகப் பெரிய விவசாய சங்கமான கர்நாடக ராஜ்ய ரயித்தா சங்கத்தின் பெண்கள் பிரிவின் தலைவியான டி.எஸ். நந்தினி ஜெயராம்.

கர்நாடக ராஜ்ய ரய்த்தா சங்கம் விவசாயிகளின் பிரச்சனைகள், விவசாயக் கூலிகளின் பிரச்சனை போன்றவற்றுக்காக ஆண்டாண்டு காலமாகப் போராடுகிறது. ஆனால், தேர்தல் என்று வரும்போது வெற்றி எட்டாக்கனியாகிவிடுகிறது. விவசாயிகளே விவசாயிகளுக்கு வாக்களிப்பதில்லை. அப்படியிருக்கும்போது காவிரியை முன்வைத்து யார் இங்கே வாக்குக் கேட்பார்கள் என்கிறார் நந்தினி.

காவிரி விவகாரம் மட்டுமல்ல மகதாயி ஆறு விவகாரமும்கூட இங்கு தேர்தல் பிரச்சனையாக இருப்பதில்லை. மகதாயி ஆறு கர்நாடகத்தில் உற்பத்தியாகி கோவாவில் பாய்கிறது. இந்த ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கர்நாடகத்திற்கும் கோவாவிற்கும் பிரச்சனை இருக்கிறது. இது தொடர்பாக வட கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். இருந்தபோதும் இந்த விவகாரத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் நடப்பதில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் நந்தினி.

இதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார் அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் தலைவரான மீனாட்சி சுந்தரம். கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தில் எல்லாக் கட்சியினருமே எப்போதுமே ஒருமித்த குரலில்தான் பேசுகிறார்கள். முரண்பாடுகள் இல்லை. ஆகவே, எந்தக் கட்சியையும் குறைகூறியோ, தாங்கள்தான் அதிகம் செய்ததாகக் கூறியோ வாக்குகளைக் கேட்க முடியாது என்கிறார் அவர்.

பெங்களூரில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கட்டா சுப்பிரமணியம் நாயுடு, காவிரி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப் பற்றி என்ன பேசுவது? இங்கே உள்ளூரில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன அதைப் பற்றிப் பேசலாம் என்கிறார்.

தவிர, காவிரி விவகாரம் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் பிரச்சனையாகவும் பார்க்கப்படுவதில்லை என்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். "மகதாயி நதி விவகாரம் எப்படி வடமாவட்டங்களின் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறதோ அப்படித்தான் காவிரி இந்த பிராந்தியத்தின் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது" என்கிறார் நந்தினி.

வாட்டாள் நாகராஜ் போன்றவர்களுக்கும் வாக்கு அரசியலில் பெரிய செல்வாக்கு இல்லாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.

"காவிரி தமிழகத்திற்குத் திறக்கப்பட்டால் விவசாயிகள் கிளர்ந்தெழுவார்கள். ஆனால், தேர்தல் என்று வரும்போது எந்த ஜாதிக்காரர் நிற்கிறார், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்ப்பாரா, பணம் கிடைக்குமா ஆகிய அம்சங்கள்தான் வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. எனவே, அரசியல்கட்சிகளும் இம்மாதிரியான விவகாரங்களில்தான் கவனம் செலுத்தும். உணர்வுவயமான, முக்கியமான பிரச்சனைகள் பெரும்பாலும் தேர்தல் பிரச்சனைகளாகவதில்லை என்பதற்கு காவிரி விவகாரம் ஒரு உதாரணம்" என்கிறார் நந்தினி.

சிக்மகளூர், தும்கூர், குடகு, மண்டியா, மைசூர், பெங்களூர், ஹசன், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 11 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரியால் பாசன வசதிகளைப் பெறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: