தமிழக அரசு ஆசிரியர்களின் போராட்டத்தை முடக்க முயல்வதாக குற்றச்சாட்டு

  • 10 மே 2018

இரவு ஒரு மணிக்கு வீட்டுக்கதவு தட்டுவது கேட்டு, திறந்ததும் திடீரென காவல்துறையினர் வீட்டுக்குள் புகுந்து என்னை கைதுசெய்தனர். என் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அண்டைவீட்டார் அனைவரும் விழித்துக்கொள்ளும் வகையில் நான்கு வண்டிகளில் பெரும் காவல் படையொன்று குவிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேன்.

ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைளுக்காக அரசின் அனுமதியுடன் போராட்டத்தில் ஈடுபடவிருந்த, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கமான ஜேக்டோ ஜியோவின் அமைப்பாளர் தாஸ் கடந்த திங்களன்று திருவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வைத்தான் இவ்வாறு விவரிக்கிறார்.

''இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுமதிபெற்று, அறிவிப்பை வெளியிட்ட பின்னர்தான் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமானோம். போராட்டத்தை குலைக்க அரசுக்கு அனுமதி கிடையாது. நாம் வாழும் இந்திய ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் தனது உரிமைக்காக போராடலாம் என்கிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். சட்டத்திற்கு புறம்பாக போராட்டம் நடைபெறுவதற்கு முன்னேரே என்னை போன்ற அமைப்பாளர்களை அரசு குறிவைத்து கைது செய்வது முற்றிலும் மோசடி செய்வதற்கு சமம்,'' என்கிறார் தாஸ்.

மேலும் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தனது உரிமைக்காக போராட வந்தால்,அவரை தீவிரவாதியைப் போல நடத்துவது என்ன விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பினார்.

அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பற்றி விளக்கிய அவர், ''அரசு ஊழியர்களுக்குஅளிக்கப்படவேண்டிய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும், ஓய்வூதியத்திற்கு பதிலாக தன்பங்களிப்பு ஓய்வூதியம் என்ற திட்டத்தில் எங்களிடம் ஒரு பங்கு பணத்தையும், அரசாங்கம் ஒரு பங்கையும் சேமித்து பணியில் இருந்து ஓய்வு பெறும்நாளில் ஊழியருக்குத் தரவேண்டும். 2003ம் ஆண்டில் இருந்து அந்த பணத்தை மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தரவில்லை. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி எங்களுக்கு சட்டப்படி தரவேண்டிய ஊதிய உயர்வை கடந்த 21 மாதங்களாக தரவில்லை.''

''நியாயமான கோரிக்கைகளுடன் அரசிடம் பதிலை பெறுவதற்காக போராட்டம் நடத்த வந்தால், எங்களை போராட்டம் நடத்தவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம்,'' என கேள்வி எழுப்பினார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போரட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரவிடாமல், அந்தந்த மாவட்டங்களில் முந்தையநாளே கைது செய்யப்பட்டதாக கூறுகிறார் தாஸ்.

''போராட்டத்தன்று சென்னைக்கு வரும்வழியில் உள்ள சுங்கச்சாவடிகளில் பேருந்துகளில் இருந்து நடுவழியில் இறக்கி, சென்னைக்கு வருபவர்களை தடுத்தார்கள். இதுவரை பலமுறை அரசிடம் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியுள்ளோம். இந்த முறை எங்களை நடத்தியவிதம் மிகவும் மோசமானது. போராட்டத்திற்கு வந்திருந்த ஆசிரயர் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை தள்ளிவைத்துள்ளோம்,'' என்றார்.

மேலும் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த பல பெண் ஆசிரியர்கள் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் வரும்வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மெரீனா கடற்கரை அருகில் வந்தவர்கள் கைதாவதற்கு முன்னர் சாலையில் அமர முற்பட்டபோது, அவர்கள் கீழே தள்ளப்பட்டுத் தாக்குதலுக்கு ஆளானார்கள் என்று புகார் கூறுகிறார் தாஸ்.

ஜேக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவதற்கு முன்பே அவர்களுக்கு விளக்கம் அளிப்பதாகக் கூறி பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த நிர்வாக சீர்திருத்தத் துறையை கவனித்துவரும் அமைச்சர் ஜெயக்குமார் போராடக்காரர்களின் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ளார்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இரவு ஒரு மணிக்கு கைது செய்யப்பட்டது ஏன் என்று கேட்டபோது, ''நடுஇரவில் யாரையும் கைது செய்யவில்லை. போராட்டம் பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்பதால் அவர்களை கட்டுப்படுத்தினோம். தலைமை செயலகத்திற்கு அருகில் பலர் போராட்டம் நடந்தபோது, யாரையும் போராட்டம் நடத்தக்கூடாது என்று தடுக்கவில்லை. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு எப்போதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை மட்டுமே பின்பற்றினோம்,'' எனக் கூறி ஊழியர்களின் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்தார்.

ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா என்று கேட்டபோது, '' தமிழக அரசு எப்போதும் அரசு ஊழியர்களின் நலனில் அக்கறையுடன்தான் செயல்படுகிறது. தற்போது இரண்டு குழு அமைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு அளிக்க முற்பட்டுள்ளோம். அவர்களின் நலனையும், அரசின் நலனையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும்'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்