நாளிதழ்களில் இன்று: "கம்பராமாயணத்தை தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும்"

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (சனிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி :கம்பராமாயணத்தை தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்த் தொலைக்காட்சிகளில் கம்பராமாயணத்தை ஒளிபரப்ப வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில், கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 53ஆம் ஆண்டு கம்பன் விழாவை தொடங்கி வைத்த ஆளுநர் கிரண் பேடி, தனக்கு தெரிந்தவரை கம்பராமாயணம் இந்தியாவின் சிறந்த காவியங்களில் ஒன்று என்று கூறியுள்ளார்.

அதில் உள்ள உயர்ந்த கருத்துகளை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று ஆளுநர் கிரண் பேடி கூறியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) : நடிகர் கமலின் 'விசில்' செயலியில் குவியும் புகார்கள்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக தொடங்கப்பட்ட விசில் செயலியில் நாள் ஒன்றுக்கு சுமார் 150 - 200 புகார்கள் வருவதாக அச்செயலி குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டமைப்பு, தண்ணீர் விநியோகம், பெருகி வரும் குப்பை, கழிவுநீர் பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனைகள் குறித்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சரி செய்யாமல் இருக்கப்படும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதே இந்த செயலியின் முக்கிய நோக்கம் என்று அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல், இதனை தனிப்பட்ட முறையில் அணுகி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதாக அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர்: 'நீட்' எழுத வயது வரம்பு

படத்தின் காப்புரிமை EPA

மருத்துவ படிப்பில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் எழுத நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பை தளர்த்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த்ததாக தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வை எழுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25 என்றும், ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தளர்த்தி எந்த வயதிலும், நீட் தேர்வை எழுத வழிவகை செய்யும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், நீட் தேர்வு எழுத சி.பி.எஸ்.இ நிர்ணயித்துள்ள வயது வரம்பு சட்டப்படி சரியானதுதான் என்றும் இதனை தளர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ததாக அச்செய்தி விவிரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :