கர்நாடக சட்டமன்ற தேர்தல் - இதுவரை 70% வாக்குப்பதிவு

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு இன்று நடந்த வாக்குபதிவில் 70% வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாலை 5 மணிக்கு முன்னரே வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளர்கள் சில இடங்களில் இன்னும் தொடர்ந்து வாக்களித்து வருவதால் வாக்குப்பதிவு விகிதம் இன்னும் சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கியது.

2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 71.4% வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தத் தேர்தலில் 94.66 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் உள்பட சுமார் 186 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதுபோல 5.45 லட்சம் லிட்டர் மதுபானமும் சோதனைகளின்போது கைப்பற்றப்பட்டது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றப்பட்ட அளவைப்போல சுமார் நான்கு மடங்கு என செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

4 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கர்நாடகாவில் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் இத்தேர்தல் முக்கியமாகிறது.

நாடாளுமன்றத் தேர்தலைத் தீர்மானிப்பதில் கர்நாடகத் தேர்தலின் பங்கு என்ன?

காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் கர்நாடகாவை தங்கள் வசப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையின் மையமாக விளங்கும் கர்நாடகாவின் மக்கள் தொகை 6 கோடி 40 லட்சமாகும். தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த தேர்தல் ஏன் முக்கியமானது?

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவை தவிர்த்து வெறும் 3 பிற மாநிலங்களை மட்டுமே தற்போது காங்கிரஸ் ஆள்கிறது.

மொத்தம் உள்ள 29 மாநிலங்களில், 22 மாநிலங்களை பா.ஜ.கவே ஆள்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

பா.ஜ.க வுக்கும் இது முக்கியத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. கர்நாடகவில் இதுவரை ஒருமுறை மட்டுமே வெற்றிப் பெற்றுள்ள பா.ஜ.கவுக்கு தென் இந்தியாவில் பெரிய இருப்பு இல்லை.

தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள் ?

காங்கிரஸ் சார்பில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் போட்டியிடுகிறார். 2013ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற சித்தராமையா முக்கிய பங்காற்றினார்.

முதலமைச்சர் வேட்பாளாராக பா.ஜ.க சார்பில் பி எஸ் எடியூரப்பா போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் தேவ கௌடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இத்தேர்லில் முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு இல்லை

இதனிடையே வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான நேற்று, மே 8ஆம் தேதியன்று அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஆயிரக்கணக்காக வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்ட, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தலை மே 28ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மே 6 அன்று அந்தத் தொகுதியில் 95 லட்சம் ரூபாய் பணத்தை, வாகன சோதனையின்போது தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.

வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஜெயநகர் தொகுதியிலும் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :