இந்தியாவில் புழுதிப்புயல்: 4 மாநிலத்தில் 61 பேர் பலி

  • 14 மே 2018
புழுதிப்புயல் படத்தின் காப்புரிமை Getty Images

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இந்தியாவின் நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலில் குறைந்தது 61 பேர் பலியாகியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் வானிலை இன்னும் மோசமாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதிவேக காற்று மற்றும் மின்னல் பல கிராமங்களில் உள்ள வீடுகளை தடைமட்டமாக்கியதுடன், டஜன்கணக்கானவர்களை காயப்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 38 பேர் பலியாகியுள்ளனர். மே மாத தொடக்கத்தில், ஏற்பட்ட புழுதிப்புயலில் இதே உத்தரபிரதேச மாநிலத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

தற்போது பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் பிபிசியிடம் கூறினர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 12 பேர் இறந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் 9 பேரும், டெல்லியில் இரண்டு பேரும் இறந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நான்கு மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு ஞாயிற்றுக்கிழமைன்று புயல்கள் தாக்கப்படுவதற்கு முன்னதாக இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இடி மற்றும் மின்னலுடன் மணிக்கு 109 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனால் டெல்லியின் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு கிட்டதட்ட 70 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

காயமடைந்தவர்களின் விரைவாக குணமடைய "வேண்டிக்கொள்வதாகவும்" மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவியை வழங்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

"ஆபத்து இன்னும் முடியவில்லை," என உத்தரப் பிரதேச நிவாரண ஆணையர் சஞ்சய் குமார் பிபிசியிடம் கூறினார். 30க்கும் மேற்பட்டவர்கள் உத்தரப் பிரதேசத்தில் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

பலத்த காற்று மற்றும் மின்னலின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததால் பலர் அதில் சிக்கி இறந்துள்ளனர் என்றும் நிவாரணத் துறை மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து வருகிறது என்றும் சஞ்சய் குமார் கூறினார்.

கடந்த மாதத்தில் இந்தியாவின் பெரும் பகுதிகள் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மே 4-ம் தேதி வட இந்தியாவில் 100 க்கும் மேற்பட்டவர்கள் புழுதிப்புயல் மற்றும் கடுமையான மழை காரணமாக உயிரிழந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்