மின் கட்டண ரசீது ரூ 8.64 லட்சம்: அதிர்ச்சியில் காய்கறி வியாபாரி தற்கொலை

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி வியாபாரி தனக்கு வந்த மின்சார கட்டண ரசீதில் ரூ8.64 லட்சம் கட்டவேண்டும் என குறிப்பிட்டிருந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

36 வயதாகும் ஜெகன்நாத் ஷெல்கே கடந்த வாரம் வியாழனன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மின்சார கட்டணத்தை கண்டு அவருக்கு மனஅழுத்தம் அதிகரித்ததாகவும் மேலும் மகாராஷ்டிரா மாநில மின்சார பகிர்மான நிறுவன அலுவலகத்துக்கு பல முறை நேரில் சென்று எடுத்துரைத்தும் பலன் இல்லாததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஷெல்கேவுக்கு மார்ச் மாதத்துக்கான மின்சார கட்டண ரசீது வந்திருக்கிறது. அதில் 61,178 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதால் ரூ 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்பட்டுள்ளது.

'உண்மையில் ஷெல்கேவின் வீட்டுக்கான மார்ச் மாத மின் பயன்பாடு 6,117.8 யூனிட் மின்சாரம் மட்டுமே. அதாவது ரூபாய் 2,800 மட்டுமே அவர் கட்ட வேண்டிய தொகை என மகாராஷ்டிரா மாநில மின்சார பகிர்மான நிறுவன அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்னர்.

தற்கொலை செய்து கொண்ட அந்நபர், தற்கொலைக்கான காரணமாக இந்த மின் கட்டண ரசீது ஏற்படுத்திய எரிச்சலை குறிப்பிட்டுள்ளார்.

''மிகவும் அதிக அளவில் இருந்த மின் கட்டணத்தால் எனது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எட்டு நாட்களுக்கு முன்னதாக என்னைத் தொடர்பு கொண்ட அவர், இவ்வளவு பெரிய தொகை தனக்கு கவலையளிப்பதாகவும் அதிகாரிகள் அவரது சொத்தை பறிமுதல் செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். எங்களது சகோதரருக்கு நீதி வேண்டும். எனது சகோதரர் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும்'' என ஜெகன்நாத் செல்கே சகோதரர் விட்தல் ஷெல்கே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

'' எனது அக்காவுக்கு இரண்டு மாதம் முன்புதான் திருமணம் ஆனது. எனக்கும் எனது சகோதரனுக்கும் படிப்பு செலவுகள் உள்ளன. இதனால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருந்த எனது தந்தைக்கு மின் கட்டணம் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்த அமைப்பின் தோல்வியால் எனது தந்தையை இழந்துள்ளேன்'' என்றார் ஜெகன்நாத் மகள் அஷ்வினி.

அவுரங்காபாத், புண்ட்லிக்நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் லட்சுமிகாந்த் ஷிங்கரே பிபிசியிடம் பேசியபோது '' தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப் ஐ ஆர்) பதிவு செய்ய வேண்டும் என ஜெகன்நாத் குடும்ப உறுப்பினர்கள் கோரினார்கள். மேலும் இறந்த உடலை பெறவும் மறுத்தனர். முதல் கட்ட விசாரணைக்கு பிறகு நாங்கள் ஐபிசி 306-ன்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எஃப் ஐ ஆர் பதிந்துள்ளோம். விசாரணைக்கு பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

கடமையில் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டு காரணமாக கடந்த புதனன்று சுஷில் காஷிநாத் கோலி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் ஷெல்கே தற்கொலைக்கான கடிதம் பகிரப்பட்டதையடுத்து மகாராஷ்டிரா மின்சார பகிர்மான நிறுவனம் தனது ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

'' ஜெகன்நாத்துக்கு அனுப்பப்பட்ட ரசீதில் ஒரு தசம புள்ளியில் தவறு ஏற்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமான பணியாளர் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என மகாராஷ்டிரா மாநில மின்சார பகிர்மான நிறுவனத்தின் தலைமை பொறியியலாளர் சுரேஷ் கணேஷ்கர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்