`இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் பாலகுமாரன்'

படத்தின் காப்புரிமை Facebook

தமிழின் பிரபல எழுத்தாளரும் சினிமா வசனகர்த்தாவுமான பாலகுமாரன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த பாலகுமாரன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். ஆனால், அந்த சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார்.

சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த பாலகுமாரனுக்கு கமலா, சாந்தா என இரு மனைவியரும் ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு.

தஞ்சாவூரில் திருக்காட்டுப் பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி பிறந்த பாலகுமாரன், பள்ளி இறுதிப் படிப்புவரை மட்டுமே படித்தவர். பிறகு டாஃபே என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த அவர், 1969வாக்கில் கவிதைகளை எழுதத் துவங்கினார். முதலில் கசடதபற இதழிலும் பிறகு வெகுஜன இதழ்களிலும் அவர் எழுத ஆரம்பித்தார்.

அதன் பிறகு சிறுகதைகளிலும் பிறகு நாவல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த பாலகுமாரன், இதுவரை 274 நாவல்களை எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார் அவர். எழுத்தாளர் சாவி நடத்திவந்த சாவி இதழிலும் சிலகாலம் பாலகுமாரன் பணியாற்றியிருக்கிறார்.

ஆசிரியராக இருந்த தன்னுடைய தாய் சுலோச்சனாவிடமிருந்தே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் பாலகுமாரன், துவக்க காலத்தில் ஆனந்த விகடன், கல்கி ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார்.

சினிமா பங்களிப்பு

சினிமாவிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்புச் செய்திருக்கும் பாலகுமாரன், இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். சிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தர சொப்பனங்களு ஆகிய படங்களில் பாலச்சந்தருடன் பணியாற்றினார் பாலகுமாரன்.

நாயகன், குணா, செண்பகத் தோட்டம், ஜென்டில்மேன், காதலன், கிழக்கு மலை, பாட்ஷா, சிவசக்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதிய பாலகுமாரன், பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தையும் இயக்கியுள்ளார்.

இவருடைய நாவல்களில் மெர்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும்.

"கல்கியில் வெளிவந்த இரும்புக் குதிரை ஒரு மிகச் சிறந்த படைப்பு. எல்லாவற்றுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது. குதிரையைப் பற்றிய நிறைய கவிதைகள் அந்த நாவலின் ஊடே இருந்தன. கல்கி மாதிரியான ஒரு வெகுஜன பத்திரிகையில் அதைச் செய்தது பெரிய சாதனை" என்கிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன்.

இளைஞர்களை பெரிதும் பாதித்த எழுத்தாளர்

உடையார் என்ற பெயரில் ராஜராஜ சோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும் 6 பாகங்களில் இவர் எழுதிய நாவல் இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று.

"அவரை நவீன எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியாது. நாவலில் கவிதைகளைப் பயன்படுத்தியதே ஒரு நவீன முயற்சிதானே. பிற்காலத்தில் ஆன்மீகத்தைச் சொல்ல அவர் தன் எழுத்தைப் பயன்படுத்தியது குறித்து பலருக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால், அது அவருடைய தேர்வு" என்கிறார் மாலன்.

80களின் துவக்கத்தில் இளைஞர்களை வெகுவாக பாதித்த எழுத்து பாலகுமாரனுடையது என்கிறார் எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான து. ரவிக்குமார்.

தமிழ் கலாசாரத்தில் ஈடுபாடு

"மெர்க்குரிப் பூக்கள் வடவமைப்பிலும் நேர்த்தியிலும் மிகச் சிறந்த படைப்பு. அந்தத் தொடர் வெளிவந்த காலத்தின் இளைஞர்களின் மனநிலையை அது வெகுவாகப் பாதித்தது. தமிழ்க் கலாசாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த தேர்ச்சியும் ஈடுபாடும் இருந்தது அவருக்கு. அதைப் படிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இவரை ஜெயமோகனோடு ஒப்பிட்டால், பல முயற்சிகளில் பாலகுமாரன் மேலானவர். காரணம், தமிழ் மரபு மீது அவருக்கு இருந்த புலமைதான் காரணம்" என்கிறார் ரவிக்குமார்.

பாலகுமாரன் கடந்த பல வருடங்களாகவே ஆன்மீகம் குறித்து எழுதுவது, யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மீகக் கூட்டங்களை நடத்துவது எனச் செயல்பட்டுவந்தார். "பாலகுமாரன் தன் ஆன்மீகத்தை மற்றவர்களின் மீதான வெறுப்பாக மாற்றவில்லை. அது மிக முக்கியமானது" என்கிறார் ரவிக்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்