மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழிபோடப்படுவதன் பின்ணணி என்ன? - டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பதில்

  • 16 மே 2018
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு படத்தின் காப்புரிமை SAM PANTHAKY

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக இந்த தேர்தலிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

''வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரியாக கையாள முடியாமல் குழப்பத்தில் இருந்தால் வேறொரு புது இயந்திரத்தை அங்கு வைப்பார்கள். இயந்திரம் என்றைக்கும் தவறாக வேலை செய்யாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பே கிடையாது'' என உறுதியாகச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

''இயந்திரத்துக்கு பொய் சொல்லத் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு இயந்திரம் மீது ஏன் குற்றச்சாட்டு வருகிறதெனில் இயந்திரத்தின் மீது பழி போட்டால் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

மேலும் இயந்திரத்தின் மீது எளிதாக பழி போடலாம் என்பதே முக்கிய காரணம். ஆகவே கட்சிகள் பலவீனமான நிலையில் இருக்கும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழி சுமத்துகிறார்கள். உண்மையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன'' என விளக்குகிறார் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்.

இந்தியாவே உருவாக்கிய, இந்தியா பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எனச் சொல்லும் கிருஷ்ணமூர்த்தி, இவ்வியந்திரத்தை பலர் குற்றம்சாட்டி குழப்பத்தை உண்டாக்குகிறார்கள் என்றும் கூறுகிறார்.

தன்னைப் பொறுத்தவரையில் இக்குற்றச்சாட்டு தவறு என்றும், நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் குறித்து சென்றவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் சவால்

''மின்னணு இயந்திர முறைகேடுகள் குறித்து எங்களது இடத்திற்கு வந்து நிரூபியுங்கள் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரை வைத்து அதனை சரிபார்க்கிறோம் என தேர்தல் ஆணையம் ஒரு சவால் விடுதிருந்திருந்தது. ஆனால் ஒருவரும் வரவில்லை. ஆகவே இக்குற்றச்சாட்டுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என எனக்கு தோன்றவில்லை'' என்றார்.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY

மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விதமாக மின்னணு இயந்திரத்தில் வாக்களித்தவுடன் ஒரு ரசீது அவர்களுக்கு கிடைக்கும் வசதியானது இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை அனைத்து தேர்தல்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமல்படுத்தப்படவில்லை. ஆகவே வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து சிலருக்கு சந்தேகம் எழுகிறது.

'’இந்த ரசீது வழங்கும் வசதி இல்லாமலேயே நாங்கள் தேர்தல்களை நடத்தியிருக்கிறோம். இவ்வசதியை அனைத்து தேர்தல்களிலும் அடுத்தடுத்து பயன்படுத்துவதற்காக உரிய இயந்திரங்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் கர்நாடக தேர்தலில் இந்த வசதிகள் எவ்வளவு மையங்களில் பயன்படுத்தப்பட்டது எனச் சரியாக தெரியவில்லை.

இது ஒரு குற்றச்சாட்டு எனச் சொன்னால் என்ன செய்வது? நாங்கள் இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்கிறோம். அவர்கள் செய்ய முடியும் என்கிறார்கள். ஆனால் நிரூபித்தும் காட்டுவதில்லை. இது போன்ற நிலைகளில் இக்கட்சிகள் ஒரு சாக்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன என்றே தோன்றுகிறது'' என விவரித்தார் கிருஷ்ணமூர்த்தி.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு முறை கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சமீப சில வருடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வைக்கப்படுகிறது. ஏன் திடீரென இக்குற்றச்சாட்டுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி,

''கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் இல்லாதபோது காட்சிகள் இக்குற்றச்சாட்டை வைக்கின்றன. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பல முறை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பலன் இல்லை.''

'' ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோற்பவர்கள் இக்குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்திலோ, தேர்தல் ஆணைய அலுவலகத்திலோ அவர்கள் நிரூபித்துக் காட்டலாம். அதை அவர்கள் செய்வதே இல்லை." என்கிறார்.

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் நிறைய நன்மைகள் உள்ளன. வாக்குசீட்டு முறையில் போலி ஓட்டு போடமுடியும்; போட்டிருக்கிறார்கள். மதிப்பில்லாத ஒட்டு செலுத்தவும் முடியும். ஆனால் இவை மின்னணு இயந்திரத்தில் சாத்தியமில்லை."

"மேலும் தேர்தலை விரைவாக நடத்தி விரைவாக முடிவை அறிவிக்க முடிகிறது. இது வாக்குச்சீட்டு முறையில் சாத்தியமல்ல."

"மின்னணு வாக்குப்பதிவு முறையால் காகிதங்கள் பெருமளவு சேமிக்கப்படுகிறது. டன் கணக்கில் காகிதங்கள் சேமிக்கப்படுகின்றன'' என விவரித்தார் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

கர்நாடக தேர்தல் தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: