கர்நாடக சிம்மாசன சிக்கல்: எந்தக் கூட்டணி ஆட்சியில் நீடிக்க முடியும்?

கர்நாடகத்தில் இது எதிர்பாராத திருப்பம். காலை 11 மணிவரை பா.ஜ.க. மந்திர எண்ணான 113ஐத் தாண்டிவிடும் என்ற சூழல்தான் இருந்தது. தற்போது பா.ஜ.கவால் 104 இடங்களையே பிடிக்க முடிந்துள்ளது. காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (ம.ஜ.த) இணைந்தால் தற்போது ஆட்சி அமைத்துவிடலாம். காங்கிரஸ் ம.ஜ.தவை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பாகக்கூட எதிர்பாராத திருப்பம்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES / TWITTER
Image caption மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு

இம்மாதிரி சூழலில் ஆளுநரின் பணிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். கர்நாடக மாநில ஆளுநர் என்ன செய்வார் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆனால், தற்போது காங்கிரஸ் செய்யும் காரியம் சரியானதாகத் தெரியவில்லை. அதிக இடங்களைப் பிடித்த கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் முறையானதாக இருக்கும். அப்படித்தான் பெரும்பாலும் நடந்திருக்கிறது, குறிப்பாக பொம்மை வழக்கில் தீர்ப்பிற்குப் பிறகு. ஆனால், வேறு மாதிரியும் நடந்திருக்கிறது.

இங்கிலாந்தில் ஒருமுறை இதேபோன்ற சூழல் ஏற்பட்டபோது, அதிக இடங்களைப் பிடித்த கட்சியும் அதற்கு அடுத்த இடத்தில் இருந்த கட்சியும் ராணியைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரினர். ஆனால்,  ராணி இரண்டாவதாக வந்த கட்சியைத்தான் அழைத்தார். காரணம், மூன்றாவது இடத்தில் இருந்த கட்சி இரண்டாவது இடத்தில் இருந்த கட்சியை ஆதரித்தது என்பதுதான் காரணம். இவர்கள் இருவரும் சேர்ந்தால் முதலாவது இடத்தில் இருந்த கட்சியைவிட கூடுதல் இடங்களைப் பிடித்திருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் கூடுதல் இடங்களைப் பிடித்த கட்சியையே அழைப்பது மரபாக இருந்திருக்கிறது. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது காங்கிரஸ் செய்வது தவறு என்று தோன்றுகிறது. இப்போது அதிக இடங்களைப் பிடித்திருக்கும் பா.ஜ.கவை ஆட்சியமைக்க அழைத்து, அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், ஆளுநர் காங்கிரஸை அழைக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் ஆளுநர் காங்கிரசை அழைக்கும்போது, அவர்கள் நாங்கள் ம.ஜ.த.வை வெளியிலிருந்து ஆதரிக்கப்போகிறோம், அல்லது அவர்கள் அரசில் இடம்பெறப் போகிறோம். அதனால், அவர்களை அழையுங்கள் என்று காங்கிரஸ் கூறினால் அதை ஆளுநர் ஏற்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

தங்களை அழையுங்கள் என்று காங்கிரஸ் சொல்லலாம். ஆனால், மூன்றாவதாக வந்த ம.ஜ.தவை அழையுங்கள் என காங்கிரஸ் சொல்ல முடியுமா, ஆளுநர் என்ன முடிவெடுப்பார் என்பதைப் பார்க்க வேண்டும். 

மஜதவை பாஜக உடைக்க வாய்ப்பு உள்ளதா?

ஒரு வேளை பா.ஜ.கவை ஆட்சியமைக்க அழைத்தால், அந்தக் கட்சி ம.ஜ.தவை உடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரசும் அதைச் செய்யும். ஆனால், கட்சித் தாவல் தடைச்சட்டப்படி, மூன்றில் இரு பங்கினர் கட்சியை உடைக்க வேண்டும். சுமார் 26 பேராவது கட்சியை உடைக்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பங்கினரை உடைக்க முடியாவிட்டால்கூட, தேவையான அளவுக்கு ஆட்களை இழுத்துக்கூட பா.ஜ.க. அரசை அமைக்கலாம். அப்போது தகுதி நீக்க உத்தரவை சபாநாயகர்தான் பிறப்பிக்க வேண்டும். அவர் அந்த விவகாரத்தில் முடிவே எடுக்காமல் இருக்கலாம். அதில் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது. இது தொடர்பான விவகாரங்களில் உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட முடியுமா என்ற விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே, பா.ஜ.க. பிற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுக்கும் முயற்சியில் நிச்சயம் இறங்கும். 

Image caption காங்கிரஸ் கட்சி அலுவலகம்

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆகவே அக்கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம் என்று சிலர் கூறலாம்.  ஆனால், இந்தியத் தேர்தல் முறையில், யார் அதிக சதவீத வாக்குகளைப் பெற்றார்கள் என்பது பொருட்டு அல்ல. ஆனால், எத்தனை இடங்களைப் பெற்றார்கள் என்பதுதான் முக்கியம். கர்நாடகத்தைப் பொறுத்தவரை அறுதிப் பெரும்பான்மை பெற 113 இடங்களைப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். அதைச் செய்ய எந்த அரசியல் கட்சியும் விரும்பாது. 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் குழப்பமான முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காங்கிரசைப் பொறுத்தவரை, அந்த அரசு மீது பெரிய குற்றச்சாட்டு இல்லை. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது இந்த முடிவு ஆச்சரியமானது. சித்தராமய்யா லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்தது காங்கிரஸ் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை.

இந்த முடிவை சிறிய மடங்கள் ஏற்றாலும் பெரிய மடங்கள் ஏற்கவில்லை. தவிர, ஒரு பிரிவை தனி மதமாக அறிவிக்கும் அதிகாரம், மத்திய அரசுக்குத்தான் உண்டு. ஆக, அதை பெயருக்குத்தான் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் போது, சித்தராமய்யா இதுகுறித்து எங்கேயுமே பேசவில்லை. அதைச் செய்யாமல் இருந்திருந்திருந்தால், வெற்றிபெற்றிருப்பாரா என்ற கேள்வியை இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது.

தற்போதைய சூழலில் காங்கிரஸ் ஆதரவுடன் ம.ஜ.த. ஆட்சிக்கு வந்தால் அது வெகு நாட்கள் நீடிக்குமெனக் கருதவில்லை. காங்கிரசின் வரலாற்றைப் பார்த்தால், இது புரியும். ஆனால், அதே நேரம் ம.ஜ.தவை உடைத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அது கூடுதல் நாட்கள் நீடிக்கும். ஏன், முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவுசெய்யலாம். ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது சுலபமான பதவிக்காலமாக இருக்காது.

(பிபிசி தமிழின் ஃபேஸ்புக்கிற்கு அளித்த நேர்காணலில் இருந்து)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: