அணைகளை திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரம் -உச்ச நீதிமன்றம் உறுதி

உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிந்து, புதிய அமைச்சரவை இன்னும் அமைக்கப்படாததால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கு பின் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை என்றும், தங்கள் வழங்கிய தீர்ப்புக்கு உட்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவுத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறதா என்பதே இந்த வழக்கில் விசாரிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள், இன்றைய வழக்கு விசாரணையின்போது தெரிவித்தனர்.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்புக்கு, 'காவிரி மேலாண்மை வாரியம்' என்றே பெயர் வைக்கப்படவேண்டும் என்று தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் அல்லாமல் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்குமுறைக் குழுவின் தலைமையிடம் பெங்களூருவில் அமைக்கப்படுவதற்கு எந்த ஆச்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாநிலம் வேறொரு மாநிலத்துக்கு தண்ணீர் திறந்துவிடாவிட்டால், தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்படுவது, அரசியல் நோக்கங்கள் கலக்க வழிவகுக்கும் என்று புதுவை அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்தை தயாரித்தபின், நீர் திறந்துவிடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.

அணைகளைத் திறந்து விடுவதற்கான அதிகாரம் புதிதாக அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்படுவது, மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கேரளா அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த அந்த வாரியத்துக்கு அத்தகைய அதிகாரம் தேவை என்று கூறினர்.

திருத்தப்பட்ட இறுதி செயல்திட்டம் நாளை வியாழக்கிழமை மத்திய அரசால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: