சாமானிய பெண்ணுக்கு வந்த இளவரசர் திருமண அழைப்பிதழ்: நெகிழ வைத்த அங்கீகாரம்!

சுஹானி ஜலோடா இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருக்கிறார். சாமானிய பெண்ணான அவர் முகத்தில் அரும்பும் புன்னகை பார்ப்பவர்களை உடனே தொற்றிக் கொள்கிறது. இருபத்து மூன்றே வயதான சுஹானியிடம் நெகிழ வைக்கும், உற்சாகம் கொள்ள வைக்கும் ஒரு கதை இருக்கிறது. அவரது வயதினர் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை, சுஹானி தொட்டு இருக்கிறார்.

இப்போது இந்த சாமானிய பெண்ணுக்கு இங்கிலாந்தில் நடக்க இருக்கும் இளவரசர் ஹாரி, மெகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல ஒரு சிறப்பு அங்கீகாரமும் கிடைத்து இருக்கிறது.

சுஹானியின் கதை

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுஹானியும் மும்பையில் குடிசை பகுதியில் இருக்கும் சில பெண்களும் இணைந்து `மைனா மஹிளா' எனும் அரசுசாரா அமைப்பை தோற்றுவித்தனர். இந்த அமைப்பின் நோக்கம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

பல பெண்களின் வாழ்க்கை மேம்பட இவரது பணி காரணமாக அமைந்து இருக்கிறது. அதற்கான பல அங்கீகாரங்களும் அவருக்கு கிடைத்து இருக்கிறது. இப்படியான சூழலில் சுஹானிக்கு லண்டனின் நடக்க இருக்கும் அரச குடும்பத்தின் திருமணம் தொடர்பாக சிறப்பு மரியாதை ஒன்று கிடைத்து இருக்கிறது.

இளவரசர் ஹாரி தனது திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களுக்கு திருமண பரிசு தருவதற்கு பதில் ஏழு தொண்டு நிறுவனங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அந்த ஏழு தொண்டு நிறுவனங்களில் `மைனா மஹிளா'-வும் ஒன்று.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் லண்டனில் இயங்கும் நிறுவனங்கள். 'மைனா மஹிளா' மட்டும் லண்டனுக்கு வெளியே இயங்கும் தொண்டு நிறுவனம்.

பெண்கள் மேம்பாடு, சமுக மாற்றம், விளையாட்டு, சூழலியல், எய்டஸ் உள்ளிட்டவற்றில் பணி செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பிதழ் வந்தது. இந்த தொண்டு நிறுவனங்களில் பல சிறிய தொண்டு நிறுவனங்கள் என்கிறது கென்ஸிங்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கை.

இன்னும் சில தினங்களில் சுஹானியும் அவரது தோழிகளும் இந்த அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்பதற்காக லண்டன் பயணிக்கிறார்கள்.

இது குறித்து சுஹானி, "இந்த அழைப்பு எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது." என்கிறார்.

மைனா மஹிளா தொண்டு நிறுவனம்

கிழக்கு மும்பையில் உள்ள கோவாண்டி குடிசைப் பகுதியில்தான் 'மைனா மஹிளா' தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் இயங்குகிறது. படிப்பறிவும் இந்த பகுதியில் குறைவு, குற்ற சதவிகிதமும் இந்த பகுதியில் அதிகம். இந்த பகுதியின் சூழலும் மாசுப்பட்டு, எங்கும் நீக்கமற குப்பைகள் சிதறி இருக்கும்.

ஆனால், இது எதுவும் சுஹானிக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. அவர் தாம் மேற்கொண்ட பணியை செம்மையாக செய்தார். இவரது தொண்டு நிறுவனம் அந்த குடிசைப் பகுதியில் உள்ள பெண்களுக்கு சுகாதார பேடுகள் செய்ய சொல்லி கொடுத்தனர். இன்று அந்த பெண்கள் ஒரு நாளுக்கு 1000 பேடுகள் வரை செய்கின்றனர்.

முதல்முதலாக, ஜூலை 2015 ஆம் ஆண்டு 'மைனா' பேடுகளை உற்பத்தி செய்ய அந்த பெண்கள் தொடங்கினர்.அதன் பின், 2016 ஆம் ஆண்டு இந்த தொண்டு நிறுவனம், மும்பையின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் உள்ள 1500 பெண்களுக்கு 'மைனா மஹிளா` இந்த பயிற்சியினை அளித்தது.

சுஹானி, "நாங்கள் மாதவிடாய் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்று விரும்பினோம். குறைந்தபட்சம் அவர்களுக்குள்ளாவது பேசி கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகதான் இந்த சானிட்டரி நாப்கின் செய்யும் பயிற்சியையும் அதற்கான உபகரணங்களையும் வழங்கினோம்" என்கிறார்.

இந்த தொண்டு நிறுவனத்துக்கு 'மைனா' என்று பெயரிடவும் காரணம் இருக்கிறது என்கிறார் அவர். 'மைனா' அதிகம் பேசும் பறவை. அந்த பறவையை போல பெண்களும் மாதவிடாய் குறித்து பேச வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகதான் இப்படி பெயரிட்டோம்.

பெருநிறுவன சமூக பங்களிப்பின் பொறுப்பிலிருந்துதான் மைனா மஹிளா நிறுவனத்திற்கு அதிக நிதி வருகிறது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவது பெரும் மனத்தடை ஒன்றாக உள்ளது. இன்னும் பல குடும்பங்களில் மாதவிடாய் உதிரப் போக்கு உள்ள பெண் பரிசுத்தம் அற்றவள் என்று நினைக்கும் போக்கு உள்ளது. மாதவிடாய் குறித்த உரையாடல்களில் ஆண்களும் பங்கேற்பதில்லை.

சுஹானி, "ஒரு பெண் சானிட்டரி நேப்கின் வாங்க சென்றால், அதுவும் அந்த கடைக்காரர் ஆணாக இருந்துவிட்டால், அந்த ஆண் நாப்கின் வாங்குவது ஏதோ பெருங்குற்றமான செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்து விடுவார். அந்த நேப்கினை செய்திதாளில் சுற்றி, பின் ஒரு கருப்பு ப்ளாஸ்டிக் பையில் போட்டு தருவார். அதாவது நேப்கினை சுமப்பது ஏதோ அசிங்கமான ஒரு செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவார்." என்கிறார்.

இது குறித்துதான் எங்கள் தொண்டு நிறுவனம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் குறித்தும் சானிட்டரி நேப்கின் பயன்பாடு குறித்தும் வீடுவிடாக சென்று உரையாடுகிறோம் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: