கர்நாடக தேர்தல்: தலை விழுந்தால் எனக்கு வெற்றி, பூ விழுந்தால் உனக்குத் தோல்வி

  • 17 மே 2018

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இந்தக் கணத்தில், கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அண்மைக்காலமாக பாரதீய ஜனதாக் கட்சி எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்பவர்கள் அநேகமாக - தலைக்கு நூறு கோடி விலை பேசியாவது, எதிரணியினரை பிளவுசெய்து ஆளை இழுத்து - பாஜக ஆட்சி அமைத்துவிடமுடியும் என்றுதான் நம்புகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

ஆனால், முடியாது என்கிறார் உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர். பாஜக செய்த அஸ்வமேதயாகம் பெங்களூரில் முடிந்துவிடும் என்கிறார் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச் டி குமாராசாமி.  அஸ்வமேதயாகம் முடியப்போகிறதா, அல்லது குதிரைப்பேரம் வெற்றிகரமாக முடியப்போகிறதா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

ஆனால், எந்த ஆட்சி அமைந்தாலும் மங்களகரமான நாட்கள் - அச்சே தின் - இனி கர்நாடகத்துக்கு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிரி பற்றியெல்லாம் கொஞ்சகாலத்துக்கு என்ன பேசினாலும் அங்கே அதெல்லாம் இப்போதைக்கு அஜெண்டாவிலேயே இல்லை. தேர்தலைக் காரணம்காட்டி இரண்டு மாதம் இழுத்தடித்தார்கள். அடுத்து ஆட்சி இழுபறியைக் காரணம்காட்டி இழுக்கப்போகிறார்கள்.  அரசியல் பருவ மழை பொய்த்துவிட்டது).

பெரும்பாலான தேர்தல் கணிப்புகளும் வாக்கெடுப்புநாள் கணிப்புகளும் திரிசங்கு சட்டமன்றம்தான் அமையும் என்று குறிப்பிட்டிருந்தன. அதுவேதான் நடந்துமிருக்கிறது. அப்படியென்றால், சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தலுக்கு முன்பாகவே ஒரு கூட்டணிக்கு வந்திருக்கலாம் இல்லையா என்று நம்மில் சிலர் அப்பாவித்தனமாக கேட்பதுண்டு.

மக்களின் நாடித்துடிப்பை நன்கறியும் திறனுள்ள எந்தக் கட்சியும் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஓரளவேனும் தேர்தல் முடிவுகள் பற்றி ஒரு புரிதலுக்கு வந்திருக்கமுடியும். ஆனால் மெய்யான நிலைமைகள் மீதான ஆராய்ச்சியைவிட வேறு பல்வேறு காரணிகள் இப்போது கோலோச்சுகின்றன. குறிப்பாக மூன்றாம் அணி என்று சொல்லக்கூடிய இடத்திலிருப்பவர்கள் அதிர்ஷ்டதேவதையின் கடைக்கண் பார்வையை அதிகம் நம்பித்தான் களத்தில் இறங்குகிறார்கள்.

அதிர்ஷ்ட்டக்காரர்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகத்தைப் பொறுத்தவரை மூன்றாமிடத்திலிருக்கும் மஜக தன்னுடைய ஒக்கலிகர் வட்டாரத்தில் உறுதியாக வெற்றிபெறுவோம் என்று நம்பியது. அதற்கு பலனுமிருந்தது. அது தன்னுடைய கடந்தகால வாக்கு மற்றும் இடங்களின் எண்ணிக்கையை பெரிதும் மாற்றமில்லாமல் பார்த்துக்கொண்டது. கர்நாடகத்தின் அத்தனைத் தொகுதிகளிலும் தங்களுக்கு வலுவான நிலை இல்லை என்று அதற்குத் தெரியும். ஆனாலும் தங்கள் பேட்டையில் மட்டும் ஜெயித்தால் போதும் என்று நினைத்து அது செயல்படுகிறது என்றால் அதனுடைய வியூகம் என்னவாக இருக்கமுடியும்? நாளைக்கு காங்கிரசோ பாஜகவோ தங்களை நாடிவரும் என்கிற எதிர்ப்பார்ப்பைத் தவிர வேறு எந்த வியூகமும் குமாரசாமிக்கு இருக்கமுடியாது. குமாரசாமிகளின் கணக்குகளுக்கு அர்த்தமில்லாமலா போகும்!

ஆனால் இந்த உலகத்திலேயே எச் டி தேவகவுடாவையும் அவரது மகனையும்விட அதிர்ஷ்ட்டக்காரர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது. முன்னவரை பிரதமர் பதவி தேடி வந்தது. பின்னவரை இரண்டாம் முறையாக முதல்வர் பதவி நாடி வருகிறது. இருவருக்குமே மைசூர் மாண்டியா வட்டாரத்துக்கு வெளியே எந்தச் செல்வாக்கும் இல்லை!

மக்களின் தீர்ப்பு அவ்விதமாக இருக்கிறது என்று யாரும் குறைகூறாதீர்கள். மக்கள் தங்களுடைய தீர்ப்பை மூன்று பெரிய கட்சிகளுக்கு அளித்திருக்கிறார்கள். இரு கட்சிகளில் ஒன்றுக்குத்தான் தீர்ப்பளிக்கவேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. எனவே அவரவர் தேர்வு அவரவர் உரிமை. இந்திய அரசியல்சாசனமும் இதை உணர்ந்தே இருக்கிறது. அதன் தர்க்கம் எளிமையானது. நாடாளுமன்றமோ சட்டமன்றமோ அங்கே உறுப்பினர்களாகப் பொறுப்பேற்பவர்களில் பெரும்பான்மையினர் எந்த அணியில் இருக்கிறார்களோ அவர்களே ஆட்சிப்பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அது சொல்கிறது. அந்த அவைக்கு எப்படி நீங்கள் வந்தீர்கள் என்பது இரண்டாம் பட்சமானது.

படத்தின் காப்புரிமை Getty Images

மக்களிடம் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது, யார் அதிக இடங்களை வென்றிருக்கிறார்கள் என்பது போன்ற கணக்குகள் இந்த மன்றங்களில் அர்த்தமில்லாதவை என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சிகரமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

நீங்கள் வெளியே பார்க்கும் கட்சி வேறு கட்சி. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அங்கே ஒரு நாடாளுமன்றக் கட்சியை அல்லது சட்டமன்றக் கட்சியை உருவாக்கி, அந்த அவையில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில்தான் செயல்படமுடியும். இது நாடாளுமன்ற சனநாயகத்தின் நுட்பமானத் தன்மைகளில் ஒன்று. கேட்பதற்கு விசித்திரமாகவோ அராஜகமாகவோ தோன்றும். ஆனால் எண்ணற்ற சம்பவங்களினூடாக, அனுபவங்களின் காரணமாக உருவான ஒரு முடிவு இது. அது மட்டுமல்லை, சட்டம் இயற்றும் அவையில் யாருக்குப் பெரும்பான்மை என்பதன் அடிப்படையிலேயே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.

கார்ப்பரேட் அரசியலும் காவி அரசியலும்

உலகின் இளைய ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்தியாவைப் பொறுத்தவரை இவை எல்லாம் இன்னமும் புரியாத புதிர்கள். எனவேதான், பாரதிய ஜனதாக் கட்சி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருந்தும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை எப்படி ஆட்சிக்கு அழைக்கமுடியும் என்று மக்களிடமே ஒரு கேள்வி எழுகிறது. ஆனால் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைச் சதவீதத்தில் பாஜகவை விட காங்கிரஸ் பெரியது என்கிற கணக்கை எங்கே கொண்டுபோய் சொல்லி அழ?

படத்தின் காப்புரிமை GETTY IMAGES / TWITTER
Image caption மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு

எனவே காங்கிரஸ் - மஜக கூட்டணி என்பது, அது தேர்தலுக்குப் பிந்தையதாக இருந்தாலும்சரி - சட்டபூர்வமாக ஏற்புடைய ஒன்றுதான். ஏனென்றால் தனிப்பெருங்கட்சியான பாஜகவைவிட (தனிப் பெரும்பான்மை கட்சி அல்ல!) வாக்குகளையும் இடங்களையும் விட இந்தக் கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. தேர்தல்களத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருந்திருக்கலாம். ஆனால் சட்டமியற்றும் அவையில் இருவரும் இணைந்து நிற்பது என்று முடிவுசெய்தால், அரசியல்சாசனப்படி அதுதான் சரியானது. அதுதான் பெரும்பான்மை.

ஆனால் காங்கிரசும்சரி பாஜகவும்சரி வாய்ப்பிருக்கும் போதெல்லாம் இந்த அடிப்படையான நியாயத்தை மறுத்தே வந்திருக்கின்றன. தங்களுக்கு எதிரான அணி ஆட்சி அமைக்கப்போகிறது என்றால் பணத்தையோ ஊழல் குற்றச்சாட்டையோ காட்டி அதைத் தடுக்கின்றன. அல்லது பெரிய ஆசையைக் காட்டி வழிமறிக்கின்றன. அந்தச் சமயங்களிலெல்லாம் அந்த ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யக்கூடிய பெரிய கோடரியை ஏந்தி வரக்கூடிய அரசியல் கதாபாத்திரத்தை ஆளுநர்கள் மேற்கொள்கிறார்கள். ஆயா ராம் காயா ராம் அரசியல் தொடங்கி கூவத்தூர் வரை இதுதான் நடந்தது. கர்நாடகத்தில் இது நடந்திருக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வராக இருந்த எஸ் ஆர் பொம்மை தொடர்பான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது.

ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒரு முக்கியமான தன்மை இருக்கிறது.  எல்லாவற்றையும் சட்டங்களாலும் விதிகளாலும் மட்டுமே சரி செய்துவிடமுடியாது. மரபுகள் (conventions)  மிக முக்கியமானவை. நீதித்துறையோ நாடாளுமன்றமோ சட்டமன்றமோ காவல்துறையோ எல்லாவற்றிலும் சட்டத்துக்குச் சம்மாக மரபுகள் முக்கியமானவை. அந்த மரபுகள் நீண்ட கால அனுபவத்திலிருந்தும் அரசியல் முதிர்ச்சியிலிருந்தும் வருபவை. இந்திய நாடாளுமன்ற ஜனநாயக மரபு கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சி அடைந்துவந்த தருணத்தில்தான் கார்ப்பரேட் அரசியலும் காவி அரசியலும் உள்ளே நுழைந்தன.

உவப்பில்லாத ஒன்று

குறிப்பாக பாஜக. இந்து ராஷ்ட்டிரவாதிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் உவப்பில்லாத ஒன்று.  அவர்கள் உருவாக்கவிரும்பும் ராமராஜ்யத்துக்கு மக்களிடமிருந்து தீர்ப்பைப் பெறுகிற வழிமுறை என்பது இசைவற்ற ஒன்று. வேறுவழியில்லாமல் தேர்தலில் பங்கேற்கும் பாஜகவினர், நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றுவதையெல்லாம் தேவையற்ற ஒன்றாக, எரிச்சலூட்டக்கூடிய ஒன்றாகவே கருதுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

நடைமுறை காரணமாக மட்டுமின்றி, சிந்தாந்த அடிப்படையிலும் விதிகளையும் மரபுகளையும் ஒழிப்பதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள். தேர்தல் முறையை முறியடிக்கும் அமித் ஷாவின் சாகசங்களே இன்றைய அரசியல் வியூகமாக முன்வைக்கப்படுகிறது. மற்றக்கட்சிகளும் அதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதில் நிபுணத்துவம் பெறாதவர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் கண்கூடான உண்மைதான்.

கர்நாடகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது நமக்குத் தெரியாது. மரபுகள் இல்லாத இடத்தில் எல்லாமே சூதாட்டம்தான். தலை விழுந்தால் எனக்கு வெற்றி, பூ விழுந்தால் உனக்குத் தோல்வி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: