கர்நாடக ஆளுநர் ஏன் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைத்திருக்க கூடாது?

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு படத்தின் காப்புரிமை GETTY IMAGES / TWITTER

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எச்.டி.குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தார். பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடியூரப்பாவும் கடிதம் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இந்நிலையில், ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருக்கிறார். 15 நாட்களுக்குள் தனது பெரும்பானமையை அவர் நிரூபிக்கவேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

குமாரசாமியா? எடியூரப்பாவா?

நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களை வென்றுள்ளது. அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட தனிப் பெரும் கட்சியாக அது விளங்குகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் 116 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களைத் தவிர, 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகாவில் 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். அவர்களைத் தவிர, அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கக் கூடிய வேறு கட்சியோ, எம்.எல்.ஏ.க்களோ அங்கு இல்லை. பா.ஜ.க. தவிர, எஞ்சியுள்ள  எம்.எல்.ஏ.க்கள் எச்.டி.குமாரசாமியை முதலமைச்சராக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது ஆளுநருக்கு முன்னால் உள்ள கேள்வி இதுதான்: தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் பெரும்பான்மைக்குக் குறைவான பலம் கொண்ட பா.ஜ.க.வை அழைப்பதா? அல்லது, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையைவிடக் கூடுதலான எம்.எல்.ஏக்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியை அழைப்பதா?

ஆளுநரின் அதிகாரம் வரம்பற்றதா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தராமையா - குமாரசாமி

ஒரு மாநிலத்தில் தேர்தல் முடிந்து எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் ஆட்சி அமைப்பதற்கு யாரை அழைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. அந்த அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன. எனினும் அந்த அதிகாரம் நீதிமன்ற சீராய்வுக்கு உட்பட்டதுதான்.

இந்நிலையில், 'ஆளுநர் தனிப் பெரும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வைத்தான் ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும்' என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வந்தனர். அதற்கு ஆளுநர் சம்மதித்திருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் அவர் செய்தது நியாயமாகவே தோன்றும். ஆனால், அண்மைக்காலமாக நடந்த நிகழ்வுகள் அதற்கு மாறாக இருக்கின்றன .

கோவா, மணிப்பூர், மேகாலயா முன்னுதாரணங்கள் :

படத்தின் காப்புரிமை Getty Images

நாற்பது உறுப்பினர்களைக்கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு 2017 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 17 உறுப்பினர்களோடு தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. அங்கே பா.ஜ.க.வுக்கு வெறும் 13 இடங்கள் மட்டும்தான் கிடைத்தன. தனிப் பெரும் கட்சியாக இருந்த காங்கிரசை ஆட்சி அமைக்க அழைப்பதற்குப் பதிலாக அங்கிருந்த ஆளுநர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தார். பா.ஜ.க.வுக்கு பிற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர்களால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற அடிப்படையில் அழைப்பு விடுத்ததாக ஆளுநர் கூறினார். இப்போது, அங்கே பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

அறுபது உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு 2017 மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 31 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 28 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தனிப் பெரும் கட்சியாக விளங்கியது. அதைவிட 7 இடங்கள் குறைவாக பெற்று பா.ஜ.க. 21 எம்.எல்.ஏ.க்களுடன் 2 ஆவது இடத்தில் இருந்தது. அங்கும் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசை ஆட்சி அமைக்க அழைக்காமல், பா.ஜ.க.வை ஆளுநர் அழைத்தார். இப்போது, அங்கே பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

அறுபது உறுப்பினர்களைக்கொண்ட மேகாலயா சட்டமன்றத்துக்கு 2018 மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கு 21 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. ஆனால் ஆட்சி அமைக்க காங்கிரசை அழைக்காமல், இரண்டே இரண்டு இடங்களை வென்ற பாஜகவின் ஆதரவைப் பெற்ற, 19 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த என்.பி.பி கட்சியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைத்தார். அங்கு இப்போது பாஜக - என்பிபி கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

கோவாவில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமல் பாஜக கூட்டணியைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட 'சந்த்ரகாந்த் கவ்லேகர் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (2017) என்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதவியேற்றதும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு உத்தரவிட்டதே தவிர தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கூறவில்லை.

அன்றைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கை விசாரித்தபோது, " உங்களிடம் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஆளுநர் முன்பாக அழைத்துச்சென்று காட்டினீர்களா? அவர் முன் தர்ணா செய்தீர்களா?"  என்று தலைமை நீதிபதி கேஹர் கேட்டார். தனிப் பெரும் கட்சியைத்தான் அழைக்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கலாமா?

மதச்சார்பற்ற ஜனதா தளமும் - காங்கிரசும் தேர்தலின்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடவில்லை. தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கூட்டணி முறையற்றது. அதை ஆட்சி அமைக்க அழைக்கக்கூடாது என பாஜகவினர் கூறுகின்றனர். இதையும் ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

"கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படுவது மாநிலங்கள் பலவற்றில் சகஜமாகிவிட்டது. மத்தியிலும் கூட அது யதார்த்தமாகிவிட்டது. ஓர் அரசியல் கட்சியின் கருத்தியல் இன்னொரு அரசியல் கட்சிக்கு ஒத்துப்போவதாக இருந்தால் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்கப்படாவிட்டாலும் அக்கட்சிகள் தமக்கிடையே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை " என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது ( ராமேஷ்வர் பிரசாத் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா -2006). எனவே மதச்சார்பற்ற ஜனதா தளமும் - காங்கிரசும் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் எந்தத் தவறும் இல்லை.

குதிரைபேரம் துவங்கிவிட்டது 

புதன்கிழமையன்று (16.05.2018 ) செய்தியாளர்களை சந்தித்த எச்.டி.குமாரசாமி தமது கட்சி எம்.எல்.ஏ.க்ளுக்கு 'நூறு கோடி ரூபாய் வரை தருகிறோம், அமைச்சர் பதவி தருகிறோம்' என்று பா.ஜ.க. தரப்பில் இருந்து ஆசை காட்டப்படுவதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். '100 கோடி ரூபாய் தருவது என்றால் அதை கறுப்புப் பணமாகத்தானே தர முடியும்? கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் வாய் மூடி இருக்கிறார்கள்?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் குதிரை பேரம் துவங்கி விட்டது என்பதையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி இந்த குதிரை பேரத்திற்கு, 'ஆபரேஷன் லோட்டஸ் 2.0' என்று ஊடகங்கள் பெயரிட்டு அழைக்கின்ற நிலையும் உருவாகியுள்ளது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இத்தகைய அலங்கோலங்களில் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியே ஈடுபடுவதும், அதை ஆளுநர் அனுமதிப்பதும் வெட்கக்கேடானது.

பாஜகவினர் மறந்துபோன இன்னொரு தீர்ப்பு :

ஆட்சி அமைக்க ஒரு கட்சியை அழைக்கும் விஷயத்தில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு பா.ஜ.க.வால் மேற்கோள் காட்டப்படுகிறது. அது தொடர்பாக இன்னொரு வழக்கும் உள்ளது. 'ராமேஷ்வர் பிரசாத் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா' என்ற வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 2006ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்தத் தீர்ப்பை எழுதிய அன்றைய தலைமை நீதிபதி ஒய்.சபர்வால் அத்தீர்ப்பில் கூறியுள்ள கருத்து இப்போது கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள நிலைக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

2005 ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் அரசு அமைக்க உரிமை கோரப்பட்டபோது, 'தில்லுமுல்லுகள் அடிப்படையிலேயே பெரும்பான்மை என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதை அனுமதிக்க முடியாது. அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என அப்போதைய பிகார் ஆளுநர் பரிந்துரை செய்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பின்வருமாறு கூறியது:

'' அநியாயமான முறைகளில் ஜனநாயக வழிமுறைகள் சீரழிக்கப்படும் போது ஆளுநர் என்பவர் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது. ஜனநாயக விரோத அடிப்படையில் பெரும்பான்மை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அதிகாரத்தைப் பறிக்க முற்படுவது ஜனநாயக விரோதமானது என்பது தெளிவாகும். பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதில், பெரும்பான்மை என்பதை சட்டவிரோதமான முறையில் உருவாக்கினால் அது மக்கள் அளித்த தீர்ப்புக்கே எதிரானதாகும். தேர்தலுக்குப் பிறகு விலை போவதற்காக ஒரு உறுப்பினரை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை அடைய வேண்டும் என்று முனையும்போது, அதற்குத் தவறான வழிமுறைகளைக் கையாளும்போது ஆளுநர் அத்தகைய அரசு ஒன்று அமைவதை அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் ஜனநாயகத்தின் ஆன்மாவுக்கு அவர் எதிராகச் செயல்படுகிறார் என்று பொருள். அது தேர்தல் ஜனநாயகத்தை அசுத்தப்படுத்திவிடும். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது முன்னோர்கள் தேர்தல் ஜனநாயகம் இப்படி சீரழிக்கப்படும் என்று கருதவில்லை." என அத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

கட்சித் தாவலும் நம்பிக்கை வாக்கெடுப்பும்:

'தனிப் பெரும் கட்சி என்ற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அனுமதிக்கவேண்டும். ஒரு கால வரையறைக்குள் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் அவர் தொடரட்டும் இல்லாவிட்டால் அடுத்த வாய்ப்பை குமாரசாமிக்கு கொடுக்கலாம் ' என ஒரு வாதம் பாஜகவினரால் முன்வைக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Facebook

காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்குவதற்கு நேரம் கேட்பதாகவே இந்த வாதம் அமைந்திருக்கிறது. இந்த வாதம் எப்படி சட்ட விரோதமானது என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது:

கட்சித் தாவுதல் என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படை மீது தாக்குதல் தொடுக்கிறது. அது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல. சட்ட விரோதமானது. அநீதியானது. நியாயத்துக்குப் புறம்பானது. ஏற்றுக்கொள்ளவே முடியாதது. கட்சித் தாவல் பிரச்சனையை அதற்காக இயற்றப்பட்ட கட்சித் தாவல் தடுப்புச் சட்டம்தான் கவனிக்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, சுயேச்சை எம்.எல்.ஏ.க்களைப் பொருத்தவரை அப்படி நாம் அனுமதித்துவிட முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலமாகத்தான் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று சொல்லுவது உள்ளீடற்ற ஒரு வாதமாகும். தவறான வழிமுறைகளின் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு பெரும்பான்மையைத் தடுப்பதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது எல்லா நேரத்திலும் உகந்ததொரு வழிமுறை அல்ல'' ( 2006) என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ராமேஷ்வர் பிரசாத் வழக்கில் (2006) அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின்படி பார்த்தால், கர்நாடக ஆளுநர் உடனடியாக எச்.டி.குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் முறையானதாகும். எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அவர் அழைப்பாரேயானால் தெரிந்தே குதிரை பேரத்துக்கும், முறைகேடுகளுக்கும் ஆளுநர் துணை போகிறார் என்றே நாம் எண்ணவேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி ஆளுநரின் அத்தகைய செயல் சட்டவிரோதமானதும் கூட.

மக்கள் ஆதரவு யாருக்கு?

கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்றும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பா.ஜ.க.வுக்குத்தான் அளித்திருக்கிறார்கள் என்றும் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் கட்சி 38 % வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.க.வோ 36.2 % வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. பா.ஜ.க.வைவிட சுமார் ஆறரை லட்சம் பேர் காங்கிரசுக்குக் கூடுதலாக வாக்களித்துள்ளனர். தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வாக்குகளையும் சேர்த்துப் பார்த்தால் 56.3 % வாக்குகள் அந்த அணிக்கு உள்ளது.

மக்கள் ஆதரவு என்ற முறையில் பார்த்தாலும், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பார்த்தாலும், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநர் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமியை அழைப்பதே சரியானதாகும். கர்நாடக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருப்பாரா அல்லது ஜனநாயகப் படுகொலைக்கு சாட்சியாக மாறப்போகிறாரா என்பது மிகவிரைவில் புலப்பட்டுவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: