அழகு நிலையப் பணி என ஆசைகாட்டி சௌதியில் வீட்டு வேலைக்கு தள்ளப்படும் தமிழ் பெண் பட்டதாரிகள் #BBCSpecial

"சௌதியில் அழகு நிலையத்தில் வரவேற்பறையில் வேலை, மாத சம்பளம் ரூ.40,000 என்று கூறியதால் போன வருடம் வந்தேன். முதல் மூன்று மாதம் மட்டும் ஒரு வீட்டில் தங்கி அரபு மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முகவர் ஆனந்த் சொன்னார். கொஞ்ச நாட்களிலேயே முஸ்கான் என்ற பெண் முகவர் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு எங்களின் மற்ற தோழிகளிடம் சௌதி வேலையில் நல்ல சம்பளம் கிடைப்பதாகக் கூறி, அவர்களையும் சௌதிக்கு வரவழைக்கவேண்டும் என்று மிரட்டினார். உயிருக்கு பயந்து மற்றொரு பெண்ணிடம் பொய் சொன்னேன்.''

படத்தின் காப்புரிமை Getty Images

அழகான பணி என்று ஆசையுடன் செளதிக்கு வந்து வீட்டுப்பணிப்பெண் என்ற வலையில் மாட்டிக் கொண்ட கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரி சுந்தரி, தழுதழுக்கும் குரலில் பிபிசி தமிழிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

இப்படி ஏராளமான தமிழ் பெண் பட்டதாரிகள் செளதியில் சிக்கிக் கொண்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

கடந்த வாரம் தன்னார்வலர்  ரஷீத்கான்  என்பவரால் மீட்கப்பட்ட சுந்தரி, மேகலா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய இரண்டு பட்டதாரிப் பெண்கள் தற்போது சௌதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசி தமிழிடம் பேசிய இரண்டு பெண்களும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு முகவர்கள் தங்களை ஏமாற்றி, சௌதிவந்த பின்னர், மிரட்டி வீட்டு வேலையில் ஈடுபடுத்தியாகக் கூறுகின்றனர். அவர்களின் தோழிகள் இருவர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதால், அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

''எங்களை சீக்கிரம் எங்கள் பெற்றோரிடம் சேர்த்துவிடுங்கள். எங்கள் தோழிகளின் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று நினைக்கிறோம், காப்பாற்றுங்கள்,'' என்று அழுதுகொண்டே பேசுகிறார்கள் சுந்தரி மற்றும் மேகலா.

சுந்தரி பொய் சொல்லி தமிழ்நாட்டிலிருந்து மேலும் பெண்களை அழைக்காவிட்டால் அவரை மீட்க யாரும் வரமாட்டார்கள் என முகவர் ஆனந்த் எச்சரிக்கை செய்யும் தொலைபேசி உரையாடலை அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துள்ளார்.

சுயமரியாதையை இழந்துவிட்டோம்

''எங்களைப் போல எத்தனை இளம்பெண்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாதது போல உணருகிறோம். நான் எம்.பி.ஏ முடித்திருக்கிறேன். சொந்த ஊரில் கிடைப்பதைவிட நல்ல சம்பளம் கிடைத்தால், குடும்பத்துக்கு உதவலாம் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். இருபது நபர்கள் உள்ள வீட்டில் எல்லோருக்கும் சமைக்கும் வேலை. இரவு இரண்டு மணிக்கு தூங்கி, காலை ஆறு மணிக்கு மீண்டும் வேலைசெய்தேன். சுயமரியாதையை இழந்துநிற்கிறோம்'' என்று கண்ணீர் மல்க பேசினார் மேகலா.

வேலைக்கு வந்த இரண்டு மாதங்கள் கழித்த பின்னர்தான் தனது குடும்பத்திடம் பேசியதாகவும், அப்போதும் உண்மையைச் சொல்லும் நிலையில் அவர் இல்லை என்றும் கூறினார்.

`சுஷ்மா சுவராஜுக்கு  சொல்லுங்கள்'

படத்தின் காப்புரிமை Getty Images

சுந்தரி மற்றும் மேகலாவின் தோழியான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்னும் மீட்கப்படாமல் உள்ளார். ''நான் தூதரகத்துக்கு ஈமெயில் அனுப்பினேன். உதவி எண்ணுக்கு அழைத்துச் சொன்னேன். எந்த பதிலும் இல்லை. நீங்களாக வெளியே வந்து தூதரகம் வந்தால், உதவி செய்வோம் என்று கூறுகிறார்கள். எங்களது பிரச்னையை  உடனடியாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜுக்கு  சொல்லுங்கள். எங்களைப் போல  மாட்டிக்கொண்ட  பெண்களை  மீட்க வேண்டும். நான் உயிரோடு இந்தியாவுக்கு திரும்புவேனா என்று சந்தேகமாக உள்ளது,'' என பிபிசி தமிழ் வாயிலாக தனது  கோரிக்கையை வைத்துள்ளார் பிரியா. 

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சௌதியில் வசித்துவரும் தமிழரான ரஷீத்கான் பல பெண்களை மீட்டு தூதரகத்தில் சேர்த்த அனுபவம் கொண்டவர். ரஷீத்கானின் வழிகாட்டுதலின்படிதான் தூதரகம் வந்து சேர்ந்ததாகக் கூறினார்கள்.

மீட்கப்படாமல் தவிக்கும் பெண்கள்

''இந்திய தூதரகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உதவி எண்ணை அழைத்திருந்தால், எனக்கு தகவல் கொடுப்பார்கள். இந்தமுறை இளம் பட்டதாரி பெண் ஒருவரின் புகார் வந்துள்ளது என்று சொன்னபோது, அலுவலக பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணினேன். முதலில் ஒரு பெண், தன்னை மீட்கவேண்டும் என்றார், அவரது தோழிகளும் மாட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். அவர்களிடம் விரிவாக பேசியபோது, வேலைக்கு வந்த பெண்கள், முகவர்கள் தொலைபேசியில் கூப்பிடும்போது, மற்ற பெண்களை ஈர்க்கும் வகையில் பேசவேண்டும், இல்லாவிடில் வீட்டுவேலையில் இருந்து வேறு வேலைக்கு அனுப்ப முடியாது என்று கூறியதால், இதுபோல இவர்கள் மற்ற பெண்களிடம் சொல்லவும், இவர்கள் மூலமாக வந்த பெண்கள் வேறு பெண்களிடம் பேசவும் என பல பெண்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் இருப்பிடம் தெரியவில்லை,'' என்கிறார் ரஷீத்கான்.

படத்தின் காப்புரிமை Getty Images

''சௌதிக்கு வந்ததும் வேலைக்கு வந்த பெண்கள் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்படுவதால், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாது, அடிக்கடி தொடர்பு கொள்ளவும் முடியாது. வீட்டுவேலைகளில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், முழுநேர வேலையாளாக மாறிவிடுவார்கள். அவர்களின் குடும்பத்துடன் பேசுவதற்கு அனுமதி இல்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவருவது பெரிய சிரமம்,'' என்கிறார் ரசீத்கான்.

ஏமாற்றப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பல பெண்கள் ஏமாற்றப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் இருந்து சௌதிக்கு அழைத்து வரப்படுவது  அதிகரித்துவருவதாகக் கூறும் இந்திய தூதரகக அதிகாரி அனில் நாட்டியால், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் நானூறு நபர்கள் மீட்கப்பட்டு திருப்பி அனுப்ப்ப்பட்டதாக கூறுகிறார்.

முகவர்கள் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி இந்த பெண்கள் வருகிறார்கள் என்று கூறிய அவர், ''வேலைக்கு அமர்த்தப்படும்போதே அவர்களின் கடவுச்சீட்டை முதலாளி வாங்கிக்கொள்கிறார். மொழி, ஊர் என எல்லாம் புதிதாக இருப்பதால், யாரிடமும் உதவிகூட கேட்கமுடியாத நிலைக்கு இந்த பெண்கள் தள்ளப்படுகிறார்கள். தற்போது எங்களிடம் வந்து சேர்ந்த இரண்டு பெண்களும் சமையல், வீட்டை பராமரிப்பது, பத்திரங்கள் துலக்குவது என இரவு பகலாக வேலை செய்ததாக கூறுகிறார்கள். இன்னும் எத்தனை பெண்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றனர் என்ற விவரம் தெளிவாக இல்லை,'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அனில்.

''இந்தியாவில் டெல்லி, சென்னை போன்ற ஊர்களில் வீட்டு வேலைக்கு போவதைப் போன்ற வேலை இங்கு இல்லை. சௌதிக்கு வரும் பெண்கள், வேலை செய்யும் வீட்டிலே தங்கவைக்கப்படுவார்கள். ஒரே குடும்பத்தில் பத்து நபர்கள் வரைகூட இருப்பார்கள். அதனால் வேலைக்கு வருபவர்கள், நாள் முழுவதும் வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும். ஓய்வு நாள் கிடைக்காது. வெளியில் போகமுடியாது,'' என்றார் அனில்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக்கிடம் இளம் பெண்கள் சௌதியில் சிக்கியுள்ளது குறித்து கேட்டபோது, ''கடந்த வாரம் ஒரே ஒரு புகார் வந்தது. விசாரித்தபோது பாதிக்கப்பட்ட அந்த பெண் தூதரகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முகவர் ஆனந்தை பற்றி விசாரணை செய்துவருகிறோம். மேலும் முகவர்களின் விவரங்களில் இருந்து உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,'' என்று தெரிவித்தார்.

இதுவரை ஆண்கள் பலர் சௌதிக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டது குறித்து பல புகார்கள் உள்ளது என்றும் பெண்கள் ஏமாற்றப்படுவது பற்றிய விவரங்கள் எதுவும் சமீபத்தில் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: