கர்நாடகா : ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு

எடியூரப்பா படத்தின் காப்புரிமை RAVEENDRAN

பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநர் கடிதம்

கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்நாடக ஆளுநர். பதவியேற்கும் தேதி, நேரம், இடம் ஆகியவற்றை எடியூரப்பா தெரியப்படுத்த வேண்டும் என ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Governor of Karnataka

நாளை (வியாழக்கிழமை) காலை ஒன்பது மணியளவில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்பார் என பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் தந்துள்ளார் என முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

''சட்ட வழிமுறைகள் மற்றும் அரசியல் சாசனத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்துவோம் '' என ஆளுநர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தப்பின்னர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.

''பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் ஆளுநர் அவகாசம் தந்துள்ளது . அரசியல் சாசனத்துக்கு புறம்பானது மேலும் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளது '' என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (15.05.2018) அறிவிக்கப்பட்டது. 104 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் வென்றுள்ளன.

நேற்றைய தினம் , ஆளுநரை சந்தித்த பின்னர் எடியூரப்பா '' நாங்கள் தான் தனிப்பெரும் வலிமை பெற்ற கட்சியாக உள்ளோம். நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு நூறு சதவீத நம்பிக்கையை கொண்டிருக்கிறோம்'' என்றார்.

''ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம் எல் ஏக்கள் எண்ணிக்கை காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சியிடம் மட்டுமே உள்ளது. சரியான எண்ணிக்கையின்றி பாஜக கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது'' எனக் கூறியிருந்தார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மொய்லி.

கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 112 ஆகும். சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் சுயேட்சையும், கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: