கர்நாடக அரசின் எதிர்காலத்தை முடிவு செய்யப்போகும் மூன்று நீதிபதிகள் யார்?

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (வெள்ளிக்கிழமையன்று) நடைபெறும்.

மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி நள்ளிரவு 1:45 மணியளவில் இந்த வழக்கை விசாரித்தது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவியேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகளின் கோரிக்கையை தள்ளுபடி செய்யவில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணை தொடரும் என்று கூறியது.

இந்த வழக்கு தொடர்பாக பி.எஸ் எடியூரப்பா உட்பட பிற தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த நோட்டீஸின்படி எடியூரப்பா, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருக்கும் மூன்று நீதிபதிகள் யார்? அவர்களின் பின்னணி என்ன?

நீதிபதி ஏ.கே. சிக்ரி

1954, மார்ச் ஏழாம் தேதியன்று பிறந்த அருண் குமார் சிக்ரி, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வழக்கறிஞராக பணிபுரிந்த அவர், 1999இல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

2011 அக்டோபர் 10ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற நீதிபதி அருண் குமார் சிக்ரி, 2012இல், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2013 ஏப்ரல் 12 முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றத் தொடங்கினார்.

டெல்லியில் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்த தீர்ப்பு சிக்ரியின் தீர்ப்புகளில் முக்கியமான ஒன்று, பிரபலமாக பேசப்பட்ட தீர்ப்பு. அதேபோல, திருமணம் செய்துக் கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் வழக்கில் நீதிபதி அருண் குமார் சிக்ரி தலைமையிலான நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி அஷோக் பூஷண்

1956ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதியன்று உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் பிறந்தவர் நீதிபதி அஷோக் பூஷண். 1979ஆம் ஆண்டு அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பில் பட்டம் பெற்றார்.

படத்தின் காப்புரிமை supremecourtofindia.nic.in

கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அஷோக் பூஷண், 2016ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கினார்.

லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் வழக்கில் நீதிபதி சிக்ரி தலைமையிலான நீதிமன்ற அமர்வில் நீதிபதி அசோக் பூஷணும் ஒருவர்.

2018 ஜூலை நான்காம் தேதியுடன் நீதிபதி அஷோக் பூஷணின் பதவிக்காலம் முடிவடைகிறது.

நீதிபதி ஷரத் அர்விந்த் போப்டே

1956, ஏப்ரல் 24ஆம் தேதியன்று நாக்பூரில் பிறந்த நீதிபதி ஷரத் அர்விந்த் போப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.

படத்தின் காப்புரிமை supremecourtofindia.nic.in

பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றிய போப்டே, 2000வது ஆண்டில் பாம்பே உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர், 2012 அக்டோபர் 16 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2013, ஏப்ரல் 12 அன்று நியமிக்கப்பட்ட நீதிபதி பாப்டேவின் பதவி காலம் 2021, ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கர்ப்பம் தரித்து 26 மாதங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி ஷரத் அர்விந்த் போப்டே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: