காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

  • 18 மே 2018
காவிரி: இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு படத்தின் காப்புரிமை Getty Images

வரும் ஜூன் மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால் காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்துள்ளது.

கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்புக்கு 'காவிரி மேலாண்மை வாரியம்' என்று பெயர் வைக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

எனினும், இன்று நீதிமன்றத்தில், 'காவிரி நீர் மேலாண்மை ஆணையம்' (Cauvery Water Management Authority) என்ற பெயரில் அமைக்கப்படும் என்றும், வாரியத்தைவிட ஆணையம் கூடுதல் அதிகாரம் மிக்கதாக இருக்கும் என்பதால் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆணையத்திடம் சம்மந்தப்பட்ட மாநிலங்கள், தங்கள் அணைகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்பதையும், தங்களின் நீர்த் தேவை எவ்வளவு என்பதையும் மாதாந்திர அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் காவிரி நடுவர்மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் நீர் திறந்துவிடப்படும்.

வரைவறிக்கை விவரம்:

  • குழுவின் தலைவர், செயலாளர், இரண்டு முழுநேர உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதிநேர உறுப்பினர்கள் என்று 6 பேரை மத்திய அரசு தேர்வு செய்து அளிக்கும்.
  • மீதமுள்ள 4 பேரும் நீர் பங்கீட்டில் தொடர்புடைய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். அவர்களை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்யும்.
  • இந்த குழுவில் இடம்பெறும் அனைவருமே, நீர்பாசனம் அல்லது விவசாயம் ஆகிய துறைகளில் நிபுணர்களாகவோ, அது தொடர்புடைய அமைச்சகத்தில் பணியாற்றியவர்களாகவோ இருப்பார்கள்.
  • இந்த குழு, 740 டி.எம்.சி தண்ணீரை பகிர்ந்தளிக்கும் பணியை ஒருங்கிணைப்பு முறையில் மேல்பார்வையிட்டு செயல்படுத்தும்.
  • தண்ணீர் எவ்வளவு உள்ளது, எவ்வளவு திறக்கப்படவேண்டும், எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பனவற்றை இந்த குழு முடிவு செய்யும்.
  • இந்த குழுவின் செயல்பாடுகளுக்கு எதிராக எந்த மாநிலம் செயல்பட்டாலும், அது குறித்த தகவல்கள் மத்திய அரசிற்கு குழுவால் அனுப்பப்படும்.
  • மத்திய அரசு, சம்மந்தப்பட்ட மாநிலத்திற்கு வழிமுறைகளை அளிக்கும். இதன்மூலம், மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்படுதல் என்பது முடியாத நிலை ஏற்படுகிறது.
  • மேலும் இந்த குழுவால் 10 நாட்களுக்கு ஒருமுறை, நீர் இருப்பு, நீர்மட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கைகளாக மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்படும். இதுவும் இதற்கு முன்பு நடுவர் மன்றத்தில் அளிக்கப்பட்டிருந்த வழிமுறையே.
  • உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 15 ஆண்டுகள் செல்லும். இவைகளில் மாற்றம் செய்ய இயலாது.

இதனிடையே வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்