கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி?

1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப்பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை MUSEE_GUIMET_PARIS
Image caption தலைப்பாகையை மாற்றி சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் சடங்கை சாக்காக வைத்து, நாதிர் ஷா, முகம்மது ஷா ரங்கீலாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது

டெல்லி அரசவையில் இரானிய பேரரசர், நாதிர் ஷாவின் முன் அமர்ந்திருக்கிறார் முகலாய பேரரசர் முகம்மது ஷா ரங்கீலா. முகலாய அரசரின் தலையில் ராஜ கிரீடம் இல்லை. அதை நாதிர் ஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு பறித்துவிட்டார்.

56 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் இருந்து இரானுக்கு திரும்ப முடிவு செய்த நாதிர் ஷா, இந்துஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை முகம்மது ஷாவிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.

பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கைப்பற்றிய நாதிர் ஷா, நகரில் இருந்த செல்வந்தர்களின் சொத்துக்களையும் பறித்துக்கொண்டார்.

ஆனால் இதுவரை நீங்கள் பறித்த செல்வங்கள் எல்லாம் முகம்மது ஷாவின் தலைப்பாகையில் ஒளிந்திருக்கும் செல்வத்திற்கு ஈடாகாது என்ற செய்தியை டெல்லி அரசவை நர்த்தகி நூர்பாய், நாதிர் ஷாவுக்கு ரகசியமாக அனுப்பினார்.

தந்திரமாக தலைப்பாகையை பெற விரும்பிய நாதிர் ஷா, அதற்கேற்ப யுக்தியை வகுத்தார்.

Image caption ஒளரங்கசீப் ஹிந்துஸ்தானில் இஸ்லாமின் புது வகையை அறிமுகப்படுத்தினார்

"இரானில் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் சகோதரர்கள் தலைப்பாகையை மாற்றிக் கொள்வார்கள், நாமும் ஏன் இந்த வழக்கத்தை கடைபிடிக்கக்கூடாது?" என்று முகம்மது ஷாவிடம் கேட்டார்.

பவ்யமாக நாதிர் ஷா கேட்டாலும், தலையாட்டுவதைத் தவிர முகம்மது ஷாவுக்கு வேறு வழி இல்லை. திருடனுக்கு தேள் கொட்டியதுபோன்ற நிலையில் இருந்த அவரிடம் தனது தலைப்பாகையை மாற்றிய நாதிர் ஷா, உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இந்தியாவில் இருந்து கவர்ந்து சென்றார்.

ரங்கீலா ராஜா

கோஹினூர் வைரத்தை பறிகொடுத்த முகம்மது ஷா யார்? முகலாய பரம்பரையின் வாரிசான முகம்மது ஷா 1702ஆம் ஆண்டு ஒளரங்கசீப் ஆட்சியில் இருந்தபோது பிறந்தவர். அவரது இயற்பெயர் ரோஷன் அக்தர் என்றபோதிலும், 1719 செப்டம்பர் 29ஆம் நாளன்று தைமூரியாவின் அரசராக மகுடம் சுட்டப்பட்டபோது, அபு அல்-ஃபத்தா நசீருதீன் ரோஷன் அக்தர் முகமத் ஷா என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர் முகம்மது ஷா ரங்கீலா என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் கடும்போக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முதல் பலி, இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்று கருதப்பட்ட கலைஞர்கள்.

இதுபற்றி இத்தாலிய பயணி நிகோலோ மனூசீ ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார்.

ஔரங்கசீப்பின் காலத்தில் இசைக்கு தடை விதிக்கப்பட்டபோது பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை PENGUIN INDIA

வேறுவழியில்லாமல் ஆயிரக்கணக்கான கலைஞர்கள், ஒரு வெள்ளிக்கிழமை நாளன்று டெல்லி ஜம்மா மசூதி பகுதியில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் இறுதி ஊர்வலத்தில் செல்வது போல அடித்துக் கொண்டும், அழுது கொண்டும் சென்றார்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அங்கு வந்திருந்த அரசர் ஒளரங்கசீப் இதை பார்த்துவிட்டு, யாருடைய இறுதி ஊர்வலம் இது? ஏன் இவர்கள் இப்படி அழுகின்றனர்? என்று விசாரித்தார்.

இசையை நீங்கள் கொன்று விட்டீர்கள் அல்லவா? அதனை புதைக்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் சொன்னார்கள். சரி, சரி, குழியை கொஞ்சம் ஆழமாகவே தோண்டுங்கள் என்று பதிலளித்தார் ஒளரங்கசீப்.

எந்தவொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்கிறது இயற்பியல். அது சரித்திரத்திற்கும், மனித சமுதாயத்திற்கும் பொருந்தக்கூடியது...

ஒரு பொருளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதன் எதிர்வினையும் வலிமையாகவே வெளிப்படும் அல்லவா? ஒளரங்கசீப் கலைஞர்களை அழுத்தி அடக்கினால், அவரது வழித்தோன்றலான முகம்மது ஷாவின் காலத்தில் பல்வேறு கலைகளும் முழு வலிமையுடன் மேலெழும்பியது.

எதிரெதிர் துருவங்கள்

அதன் மிக சுவாரஸ்யமான சான்றுகள் 'மர்கயே டெல்லி' என்ற புத்தகத்தில் கிடைக்கிறது.

முகம்மது ஷாவின் அரசவை கவிஞரான கலீ கான் எழுதிய இந்த புத்தகம், அந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

படத்தின் காப்புரிமை SAN_DIEGO_MUSEUM_OF_ART
Image caption நாதிர் ஷாவின் படையெடுப்புக்கு பிறகு, முகம்மது ஷா ரங்கிலா பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளையே அணியத் தொடங்கினார்.

இந்த புத்தகம் வெளிப்படுத்தும் ஒரு விஷயம் விசித்திரமானதாக இருக்கிறது. முகலாய அரசர் மட்டுமல்ல, டெல்லி மக்களுடைய வாழ்க்கையும் இரு துருவங்களுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.

ஒரு புறத்தில், வசதியாகவும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்த முகம்மது ஷா ரங்கீலா, சோர்வடைந்தால், துறவியைப் போல் மாறிவிடுவார். பிறகு சிறிது நாட்களில் அதுவும் அழுத்துப்போய் மீண்டும் ஆடம்பர வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்.

'மார்கயா டெல்லி'யில், மக்களின் வாழ்க்கை முறை, ஹஸ்ரத் அலி நிஜாமுதின் ஒளலியாவின் கல்லறை, குதுப் சாஹிப்பின் தர்கா மற்றும் டஜன் கணக்கான இடங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான யானைகள்

அந்த காலத்தில் நடனத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. நூர்பாய் என்ற நர்த்தகியின் வீட்டின் முன் செல்வந்தர்களின் யானைகள் பல நின்றிருப்பது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துமாம்!

"நூர்பாயின் வீட்டிற்கு வந்துபோகும் செல்வந்தர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள், ஒருமுறை அந்த இடத்திற்கு வந்தால் பிறகு அங்கிருந்து மீளவேமுடியாது. அங்கேயே பழி கிடக்கும் செல்வந்தர்கள், போட்டிபோட்டு செலவழித்து தங்கள் சொத்தையே இழந்துவிடுவார்கள்." என்று மர்கயா டெல்லி கூறுகிறது.

நாதிர் ஷாவுடன் நெருக்கமான நூர்பாய், ஷாவிடம் கோஹினூர் வைரத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டார்.

படத்தின் காப்புரிமை metmuseum
Image caption முகம்மது ஷா ஆட்சியில், இசை ஊக்குவிக்கப்பட்டது

கிழக்கு இந்தியா நிறுவனத்தின் வரலாற்று ஆசிரியரான தியோ மைட்காஃப், கோஹினூர் வைரம் பற்றி பற்றிய தன்னுடைய புத்தகத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார். பல வரலாற்றாசிரியர்கள் கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து கொண்டு போகப்பட்ட வழிமுறை பற்றிய சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

"நூர்பாய் டெல்லியில் பிரபலமான நடன மாது. அவர் அந்த காலத்தில் மற்ற பெண்கள் அணிந்ததுபோல பைஜாமா அணியமாட்டார். மாறாக தனது உடலின் கீழ் பாகத்தை மறைப்பதற்காக பைஜாமாவைப் போல இலைகளையும், மலர்களையும் கொண்ட ஓவியத்தை வரைந்துக் கொள்வார். அது மெல்லிய ரோமன் துணியில் நெய்யப்பட்ட வேலைப்பாடுகளாகவே தோன்றும். அவர் அணிந்திருக்கும் பர்தாவை விலக்கும் வரை அவரின் பைஜாமா ரகசியம் யாருக்கும் தெரியாது. இப்படி அவர் மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டுவதில் வல்லவர்."

கேளிக்கை விரும்பி முகமது ஷா ரங்கீலா

முகமது ஷா காலை வேளையில் ஆடுகள் அல்லது யானைகளின் சண்டையை வேடிக்கை பார்த்து மகிழ்வார். மக்கள் அப்போது அங்கு வந்து அவரிடம் குறைகளை முறையிடுவார்கள். மதிய நேரத்தில், விருந்துகளும், கேளிக்கைகளும் என்றால், மாலையும் இரவும் கலைஞர்கள், நடனம், இசை என நீண்டு கொண்டேயிருக்கும்...

மெல்லிய ஆடைகளை அணிய விரும்பும் அரசர், காலில் முத்துக்களால் ஆன காலணியை அணிந்திருப்பார். நாதிர்ஷாவின் படையெடுப்புக்கு பிறகு வெண்ணிற ஆடைகள் அணியத்தொடங்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

ஔரங்கசீப் காலத்தில் மூடுவிழா நடத்தப்பட்ட ஓவியக்கலைக்கு இவரது காலத்தில் புத்துயிர் கிடைத்தது. முகலாய காலத்து புகழ்பெற்ற ஓவியர்களின் வரிசையில் அந்த காலகட்டத்தை சேர்ந்த நந்தா மல் மற்றும் சித்ரமன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

பேரரசர் ஷாஜகானின் காலத்திற்கு பிறகு டெல்லியில் ஓவியர்களுக்கான காலம் அப்போதுதான் திரும்பியது. அப்போது, அதிக அடர் வண்ணங்கள் பயன்படுத்தப்படவில்லை.

அதே காலகட்டத்தில் முகமது ஷா ரங்கீலா ஒரு விலைமாதுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதை சித்தரிக்கும் ஓவியம் ஒன்று பிரபலமானது. முகமது ஷா ஆண்மையற்றவர் என்ற வதந்தி டெல்லியில் பரவியிருந்ததால் அந்த எண்ணத்தை மாற்ற இந்த ஓவியம் வரையப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றே இதுபோன்ற 'ஆபாச கலைபடைப்புகளும்' (Porn art) இருந்ததற்கு இதுவொரு சான்று.

Image caption 1739-இல் நாதிர் ஷா கைபர் கணவாயை கடந்துவந்து ஹிந்துஸ்தான் மீது படையெடுத்தார்

அரசர் இப்படி உல்லாசியாகவும், போகியாகவும் இருந்தால் ஆட்சி எப்படி நடக்கும்? அவத், வங்காளம், மற்றும் தக்காணம் போன்ற வளமான பிராந்தியங்களின் நவாப்களே அவற்றின் அரசர்களாக செயல்பட்டார்கள்.

தெற்கில் மராட்டியர்கள் தலைதூக்கினார்கள். தைமூரியாவில் அதிகாரிகள் சுரண்டத் தொடங்கினார்கள். மேற்குப்பகுதியில் இருந்து நாதிர் ஷாவின் வடிவில் வந்த சவால் முகமது ஷா ரங்கீலாவை அடிபணிய வைத்தது.

நாதிர் ஷா ஹிந்துஸ்தான் மீது படையெடுத்ததற்கு காரணம்? ஷஃபிகுர்-ரஹ்மான் எழுதிய 'துஜ்கே நாத்ரி' என்ற புத்தகத்தில் அதற்கான விளக்கம் கிடைக்கிறது. ஹிந்துஸ்தானின் படை பலவீனமாக இருந்தது பிரதான காரணம் என்றால், இங்கு இருந்த அளப்பறிய செல்வம் அடுத்த காரணம்.

டெல்லியின் பிரபலமும், புகழுமே பலர் அதை அடிமையாக்கவேண்டும் என்று கருதியதற்கு அடிப்படை உத்வேகத்தை கொடுத்தது.

காபுல் முதல் வங்காளம் வரை பரவிக்கிடந்த முகலாய ஆட்சியை கட்டுப்படுத்தும் தலைநகராக இருந்த டெல்லி, அந்த காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நகரங்களின் வரிசையில் ஒன்றாக இருந்தது. அப்போது டெல்லியின் மக்கள் தொகை இருபது லட்சம் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்!

எதிரி நெருங்கும் வரை அமைதி காத்த ரங்கீலா

லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய இரு நகரின் மக்கள் தொகையை சேர்த்தாலும் டெல்லியை விட குறைவாகவே இருக்கும். மேலும் உலகின் செல்வச்சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக திகழ்ந்தது டெல்லி என்பதும் ஆக்ரமிப்பாளர்கள் தொடர்ந்து இந்தியா மீது படையெடுக்க காரணமானது.

1739 ஆம் ஆண்டில், நாதிர் ஷா புகழ்பெற்ற கைபர் கணவாயை கடந்து ஹிந்துஸ்தானுக்குள் நுழைந்தார். நாதிர் ஷாவின் துருப்புக்கள் முன்னேறுவதை பற்றி தகவல்கள் முகமது ஷா ரங்கீலாவுக்கு தொடர்ந்து சொல்லப்பட்டன. டெல்லியில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும் அவர்களால் இங்கு வருவது கடினம் என்று அவர் அலட்சியப்படுத்திவிட்டார்.

நாதிர் ஷா டெல்லிக்கு நூறு மைல் தொலைவில் வந்தபிறகுதான், முகலாய பேரரசர் தனது படைகளை முதல் முறையாக களத்தில் இறக்கினார். அவரே படைக்கு தலைமை ஏற்க வேண்டியிருந்தது.

முகலாய படையின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் சற்றே அதிகமாக இருந்தது. ஆனால் அப்போது முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அரசரிடம் இருந்த கலைஞர்களின் குழுவின் எண்ணிக்கையும் சுமார் ஒரு லட்சம் என்பதையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

இரானிய ராணுவத்தின் எண்ணிக்கை 55 ஆயிரம். தொலைதூர பயணத்தில் வந்திருந்தாலும், நாதிர் ஷாவின் படையினர் பயிற்சி பெற்றவர்களாகவும் திறமை மிக்கவர்களாகவும் இருந்தனர். கேளிக்கையில் மூழ்கிக் கிடந்த முகலாய படைகளால் அவர்களை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியவில்லை.

கர்னால் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் மூன்று மணி நேரத்திலேயே வெற்றி பெற்று நாதிர் ஷா டெல்லி அரண்மனைக்குள் நுழைய, தோல்வியடைந்த முகமது ஷா ரங்கீலா சிறையில் அடைக்கப்பட்டார்.

Image caption கத்தல்-இ-ஆம் சமயத்தில் டெல்லியில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது

படுகொலைகள்

அடுத்த நாள் டெல்லியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடங்கின. டெல்லியின் மசூதிகளில் அரசர் நாதிர் ஷாவுக்காக சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.

நாதிர் ஷா கொல்லப்பட்டதாக பரவிய வதந்திகளை நம்பிய டெல்லி மக்கள் உத்வேகம் கொண்டு, இரானிய சிப்பாய்களை கொல்லத் தொடங்கினார்கள். அதன்பிறகு டெல்லியில் ரத்த ஆறு ஓடியது. ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சரித்திரத்தின் கறைபடிந்த அந்த நாட்கள் பற்றி கூறப்படுகிறது. வதந்திகள் உருவாக்கிய அந்த படுகொலை சம்பவம் கத்தல்-இ-ஆம் என்று குறிப்பிடப்படுகின்றன.

"சூரியன் உதித்த சற்று நேரத்தில் செங்கோட்டையிலிருந்து வெளியே வந்த நாதிர் ஷா குதிரையில் அமர்ந்திருந்தார். போர்க்கோலத்தில் இருந்த அவரின் தலையில் இரும்பு கவசமும், இடுப்பில் வாளும் இருந்தது. செங்கோட்டையில் இருந்து அரை மைல் தொலைவில் மசூதியை நோக்கி நின்ற அவர், உறையில் இருந்த வாளை உருவி தலைக்கு மேலே உயர்த்தி தாக்குதலை தொடங்க வீரர்களுக்கு சமிக்ஞை செய்தார்."

காலை ஒன்பது மணிக்கு கொலை வெறித் தாக்குதல்களை தொடங்கிய இரானிய வீரர்கள், வீடு வீடாக சென்று மக்களை கொன்று குவித்தனர். ரத்த ஆறு ஓடியது என்பதை அன்றைய தினம் நிதர்சனமாக பார்க்க முடிந்தது. அன்று டெல்லி கழிவு நீர் குழாய்களில் வெளியான நீர் செந்நிறத்தில் இருந்ததாம்!

லாகூர் தர்வாஜா, ஃபைஜ் பஜார், காபூலி தர்வாஜா, அஜ்மீரி தர்வாஜா, ஹெளஸ் காஜி, ஜோஹ்ரி பஜார் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகள் பிணமேடாக காட்சியளித்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கிணறுகளில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர். மனைவி, மகள்கள் வன்புணர்வு செய்யப்படுவதை தவிர்க்கும் விதமாக குடும்பத்தை சேர்ந்தவர்களே அவர்களை கொன்ற அவலமும் அரங்கேறியது.

சுமார் முப்பதாயிரம் பேர் அன்றைய தினம் டெல்லியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அனுமானங்கள் கூறுகின்றன. சிறையில் இருந்த அரசர் முகமது ஷா, சமாதானம் பேச தனது பிரதம மந்திரியை நாதிர் ஷாவிடம் அனுப்பிவைத்தார்.

தலையில் தலைப்பாகை இல்லாமல், காலணி அணியாமல் நாதிர் ஷாவிடம் சென்ற அவர், 'நகரத்தில் இருக்கும் அனைவரையும் கொன்று குவித்துவிட்டீர்கள், இனி கொல்வதற்கு நகரத்தில் மக்களே எஞ்சவில்லை, இனி சடலங்களை உயிர்ப்பித்து மீண்டும் அவற்றைத்தான் கொல்ல வேண்டும்' ரத்த சகதி நிரம்பிய சூழலிலும் கவிதை வரிகளில் எதிர்ப்பை துயரமாக எடுத்துச்சொன்னார்.

இதன்பிறகு நாதிர் ஷா தனது வாளை உறைக்குள் போட்ட பின்னரே அவரது வீரர்களும் தங்கள் வாட்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.

பொதுமக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நிறுத்தப்பட்ட பிறகு, மக்களின் சொத்துக்கள் சூறையாடும் படலம் தொடங்கியது.

ராணுவம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. முடிந்த அளவு செல்வங்களை கைப்பற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்ட இரான் ராணுவத்தினர் கொடூரமான கொள்ளையர்களாக செயல்பட்டார்கள். செல்வங்களை மறைக்க முயன்ற மக்கள் படுமோசமாக சித்ரவதை செய்யப்பட்டனர்.

டெல்லி நகர மக்களின் செல்வங்களை எல்லாம் துடைத்தெடுத்து மூட்டை கட்டிய பிறகு, நாதிர் ஷாவின் பார்வை அரண்மனையை நோக்கி திரும்பியது. நாதிர் ஷாவின் அரசவையில் நடைபெற்ற விவரங்களை வரலாற்றாசிரியரான மிர்ஸா மஹ்தி அஸ்த்ராவாதி சொல்கிறார்: 'அரண்மனை பொக்கிஷங்களை சில நாட்களுக்குள் மூட்டைகட்டும்படி சிப்பாய்களுக்கு உத்தரவிடப்பட்டது'.

படத்தின் காப்புரிமை Getty Images

'விலையுயர்ந்த கற்கள், வைரங்கள், ஆபரணங்கள், தங்கம் மற்றும் வெள்ளிப்பாளங்கள் மலையாக குவிக்கப்பட்டிருந்தன. முத்துக்கள் மற்றும் பவளங்களின் எண்ணிக்கையோ அளவிடமுடியாதது. இந்துஸ்தானில் இவ்வளவு பெரிய செல்வக்குவியல் இருக்கும் என்பதை இரானியர்கள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை'.

'டெல்லியில் எங்கள் ஆட்சி நடைபெற்றபோது, அங்கிருந்து கோடிக்கணக்கான பணம் எங்கள் நாட்டு பொக்கிஷத்திற்கு வந்து சேர்ந்த்து. டெல்லி அரசவை சீமான்கள், நவாபுகள், சிற்றரசர்கள், செல்வந்தர்கள் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ஆபரணங்களை கொடுத்தார்கள்'.

'இந்தியாவை வெற்றி கொண்டதால் கிடைத்த செல்வத்தை இரானுக்கு கொண்டு வருவதற்கு வசதியாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு மாதம் தொடர்ந்து பணியாற்றினார்கள். அங்கு சேகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், பொருட்களும், பாத்திரங்களும் உருக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டன'.

இந்த நிகழ்வை பற்றி பிரபல உருது எழுத்தாளரான ஷஃபியுர்-ரஹ்மான் எழுதிய 'துஜ்கே நாத்ரி' என்ற புத்தகத்தில் விரிவாக விவரிக்கிறார். "எங்கள் கருணைமிக்க அரசர் நாதிர் ஷா, டெல்லியின் செல்வங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தார். எடுத்துச் செல்லும் தகுதியும் பண மதிப்பும் கொண்ட எந்தவொரு பொருளை கண்ணில் கண்டாலும் அதை விட்டுவிடவேண்டாம் என்று உத்தரவிட்டார். மக்கள் கூக்குரலிட்டு அழுதார்கள், எங்கள் செங்கோட்டை வெறுமையாகிவிடும் என்று ஓலமிட்டார்கள். உண்மைதான், செங்கோட்டை காலியாகிவிட்டதை நாங்களும் உணர்ந்தோம்.'

நாதிர் ஷா அப்படி எவ்வளவுதான் கொள்ளையடித்தார்?

சரித்திர ஆசிரியர்களின் மதிப்பீட்டின்படி, அன்றைய மதிப்பில் 70 கோடி ரூபாய்க்கு ஈடான செல்வத்தை டெல்லியில் இருந்து கொண்டு சென்றார் நாதிர் ஷா. இன்றைய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்! யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் கொள்ளையடித்துச் சென்றதிலேயே மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்படுகிறது.

Image caption மது, ஓபியம் போன்ற போதைப்பொருட்கள், முகம்மது ஷாவை வீழ்த்தியதுபோல, அவரது சாம்ராஜ்ஜியத்தையும் பலவீனமாக்கியது

உருது இலக்கியம், கவிதையின் பொற்காலம்

முகலாயர்களின் அரசவை மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் பாரசீக மொழியே இருந்தது. அரசு பலவீனமான நிலையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாரசீக மொழி இறங்குமுகத்தில் வீழ்ச்சியடைய, புதிய மொழியான உருது மொழி வளர்ச்சியடைந்தது.

முகமது ஷா ரங்கீலாவின் காலத்தில் உருது மொழி ஏற்றம் கண்டது. அந்த காலகட்டம், உருது கவிதைகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

முகமது ஷா ரங்கீலா அரியணை ஏறிய ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தக்காண பிரதேசத்தின் திவான் டெல்லிக்கு வந்தார். டெல்லியில் தங்கிய அவர் உருது மொழியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். உருது மொழியிலும் மிகச் சிறந்த கவிதைகளை படைக்கமுடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த காலத்தில் உருதுமொழியானது, ரேக்தா, ஹிந்தி அல்லது தக்காண மொழி என்றே அறியப்பட்டது.

அதன்பிறகுதான் உருதுமொழிக் கவிஞர்கள் உருவானார்கள். ஷாகிர் நாஜி, நஜ்முதீன் அபூர், ஷத்ஃபவுதீன் மஜ்மூன், ஷா ஹாதிம் போன்ற பல கவிஞர்களின் எழுத்துக்களால் உருதுமொழி வளர்ச்சி கண்டது.

ஷா ஹாதிமின் சீடரான மிர்ஸா ரஃபி செளதா என்பவருடன் ஒப்பிடும் அளவு இன்று வரையில் உருது மொழியில் கவிஞர்கள் யாரும் கிடையாது என்றே கூறலாம். செளதாவின் சமகால கவிஞரான மீர் தகீ மீர் என்பவரின் கஜல் பாடல்களுக்கு இணையான படைப்புகளே இதுவரை உருவாக்கப்படவில்லை. அன்று டெல்லி முழுவதும் பிரபலமான உருது கவிதைகளை எழுதிய மீர், இன்றும் உருதுவின் சூஃபி கவிஞராக கருதப்படுகிறார்.

உலகப்புகழ் பெற்ற இந்த உருதுக் கவிஞர்களைத் தவிர, வேறு சில உன்னதமான உருது கவிஞர்களும் இந்த காலத்தில் தோன்றினார்கள். மீர் செளஜ், காயம் சாந்த்புரி, மிர்ஜா தாபில் மற்றும் மீர் ஜாஹக் போன்றவர்களும் முகமது ஷா ரங்கீலாவின் காலத்தை சேர்ந்தவர்களே.

Image caption முகலாய பேரரசில் முகமது ஷா ரிங்கிலாவைவிட நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்கள் அக்பர் மற்றும் ஒளரங்கசீப் மட்டுமே

இந்த காலகட்டத்தில் இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பல இசைக்கலைஞர்களைப் பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா ரங்க், சதா ரங் என்ற இருவரும் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் க்யால்-தர்ஜ்-ஏ-காய்கி என்ற புதிய இசை வடிவைக் கொடுத்தார்கள். அது தற்போதும் இசைக்கப்படுகிறது.

"சதா ரங்க் தனது விரலால் மீட்டத் தொடங்கும்போது, அவரது இதயத்தில் இருந்து வார்த்தைகள் வெளியாகும். அவரது வார்த்தைகள் வாயில் இருந்து வெளிப்படுபவையல்ல, அவரது உயிரின் ராகமாகவே தோன்றும்" என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசவையில் இருந்த இசைக் கலைஞர்கள், நடன மாதர்கள், வாத்தியக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நகைச்சுவையாளர்கள், தகவல் அறிவிப்பவர்கள் என பலதரப்பட்ட சேவகர்கள் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மது, ஓபியம் போன்ற போதைப்பொருட்கள், முகம்மது ஷாவின் ஆரோக்கியத்தை பலவீனமாக்கியதுபோல, அவரது சாம்ராஜ்ஜியத்தையும் பலவீனமாக்கியது

46 வயதிலேயே உடல்நிலை குன்றிய அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் மருந்துகளும் அவரது ஆயுளை நீட்டிக்கவில்லை. காபுல் முதல் வங்காளம் வரை பரந்து விரிந்த முகலாய சம்ராஜ்யம் சுருங்கியதுபோலவே, அதன் அதிபதியான முகமது ஷா ரங்கீலாவின் உடல், ஆறடி நிலத்தில் நிஜாமுதின் ஒளலியாவில் அடங்கிவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: