கர்நாடகா: பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை நாட்கள் கேட்கிறார் குமாரசாமி?

கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார் பாரதிய ஜனதாவின் எடியூரப்பா.

படத்தின் காப்புரிமை Getty Images

எடியூரப்பா ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்ததும், குமாரசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரியுள்ளனர்.

இன்று, சனிக்கிழமை, கர்நாடக அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் நிகழ்ந்த அதிரடித் திருப்பங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

7:51: பெரும்பாலான பிராந்திய தலைவர்கள், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறினார்.

7:50: "மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜீ, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாயாவதி ஆகியோர் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்."

7:48: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தள தொண்டர்கள், கர்நாடக மக்கள் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார் குமாரசாமி.

7:43: ஆட்சி அமைத்தபின் பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு 15 நாட்கள் தேவையில்லை என்று குமாரசாமி தெரிவித்தார்.

7:40 திங்களன்று முதல்வர் பதவியேற்கவுள்ளதாக குமாரசாமி தெரிவித்தார்.

7:37: தங்களை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் குமாரசாமி தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான மே 15 அன்று ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தனர்.

7:15: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க மீண்டும் உரிமை கோர ஆளுநர் மாளிகை வந்தடைந்தார்.

5:56: ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் எடியூரப்பா

5:46:"எடியூரப்பாவின் ராஜிநாமா ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இதன்மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வராக நான் எனது மகிச்சியை தெரிவித்து கொள்கிறேன்" என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

5:26 கர்நாடக மாநிலத்தில் பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என்று ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

5:20 ஜனநாயகம் வென்றது. கர்நாடகத்துக்கு வாழ்த்துக்கள் என மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

5:10 "பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் அத்துமீறல்களுக்கு ஓர் எல்லை உள்ளது என்பதை நாங்கள் இப்போது விளக்கியுள்ளோம். அவர்கள் இதன்மூலம் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்," என்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி தெரிவித்தார்.

"காங்கிரஸ் மற்றும் ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்க பிரதமரே எப்படி நேரடியாக அனுமதி அளித்தார்? ஊழலுக்கு எதிராக போராடுவதாக அவர் கூறுவது எல்லாம் பொய்."

"சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட தொலைபேசி உரையாடல்களே டெல்லியின் அனுமதியுடன்தான் நடந்தது." என்றும் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

"நாங்கள் பாஜகவை தோற்கடித்துள்ளோம். இனியும் அதைத் தொடர்ந்து செய்வோம்."

"இந்தியாவை விடவும், இந்திய மக்களை விடவும், இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் ஆகியவற்றைவிடவும் பிரதமர் ஒன்றும் பெரியவர் அல்ல. ஆனால், அவர் அதை அவர் புரிந்துகொள்வாரா என்று தெரியவில்லை. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் அவர்கள் அவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்."

"அவர்கள் ஊடகங்கள் உள்பட இந்தியாவின் அனைத்து அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். சில ஊடகங்கள் துணிவுடன் அதை எதிர்க்கின்றன. துரதிர்ஷ்டவசமாக சில ஊடகங்களும் அதற்கு ஆதரவாகிவிட்டன. "

"எதிர்கட்சிகளுடன் ஒன்றாக இணைந்து பாஜகவை வீழ்த்த பணியாற்றுவோம்." என்றார் ராகுல் காந்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

5:00 "அவை நடவடிக்கைகள் முடிந்தபின் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே இடைக்கால சபாநாயகர், பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினார், "என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனங்களை அவர்கள் மதிப்பதில்லை."

"அதிகாரம், பணம், ஊழல் ஆகியன மட்டுமே இங்கு அனைத்தும் ஆகிவிட முடியாது. மக்களின் விருப்பங்களே இங்கு வல்லமை மிக்கது. "

"நான் காங்கிரஸ் மற்றும் ஜனதாதள தொண்டர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் பிரதமர் தேவ கௌடாவுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரி்வித்தார் ராகுல் காந்தி

4:50: "உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையின் மூலம் கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. குமாரசாமிக்கும், காங்கிரஸுக்கும் எனது வாழ்த்துக்கள்" என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

4:45 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

4:40: 2007இல் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணியில் நவம்பர் 12 முதல் நவம்பர் 19 வரை மட்டுமே முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, அப்போது ஏற்பட்ட அரசியல் முரண்களால் ஜனதா தளம் ஆதரவை விலக்கிக்கொண்டதால் வெறும் ஏழு நாட்களில் பதவியை இழந்தார்.

அதற்கு முன்பு பாஜக ஆதரவுடன் ஜனதா தளத்தின் குமாரசாமி 20 மாதங்கள் கர்நாடக முதல்வராக இருந்தார்.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

4:30: "அனைத்து ஆசைகாட்டுதல் முயற்சிகள் மற்றும் மத்திய அரசு அமைப்புகளின் அச்சுறுத்தல்களாலும் மனம் மாறாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

"நம்பிக்கை வாக்கெடுப்புக்கான அவகாசத்தை 15 நாட்களில் இருந்து இரண்டரை நாட்களாக குறைத்த உச்ச நீதிமன்றத்துக்கும் என் நன்றியத் தெரிவித்துக்கொள்கிறேன்."

"காங்கிரஸ் மற்றும் ஜனதா தள உறுப்பினர்கள் யாரும் கட்சி தாவவில்லை. இது அரசியல் அமைப்புக்கும், நீதித்துறைக்கும் கிடைத்த வெற்றி. "

"எடியூரப்பா தனது பதவி விலகலை முறைப்படி ஆளுநரிடம் அளித்ததும், குமாரசாமியை முதல்வராக்க நாங்கள் ஆளுநரிடம் உரிமை கோருவோம்."என்று அவர் தெரிவித்தார்.

4:25 ஜனநாயகம் மீண்டும் வென்றுவிட்டது என காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

4:20 ராஜிநாமா கடிதத்தை வழங்க ஆளுநர் மாளிகை சென்றடைந்தார் எடியூரப்பா

4:15 நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் முன்மொழியப் படாததால், வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அளிக்கச் சென்றார் எடியூரப்பா.

4.10: எடியூரப்பா மற்றும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறியதும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அவையிலேயே தங்கள் கைகளை உயர்த்தி வெற்றியைக் கொண்டாடினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

4:05 முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எடியூரப்பா.

ராஜிநாமா செய்வதாக அறிவித்த எடியூரப்பா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க செல்கிறார்.

ராஜிநாமா செய்வதற்கு முன்னதாக பேசிய அவர்:

"2019 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் 28 மக்களவை தொகுதிகளிலும் வெல்வோம். அதை நோக்கி நான் பணியாற்றுவேன்."

"தேவைப்பட்டால் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர்ந்து பணியாற்ற தயார்."

"தங்கள் குடும்பத்திடம் பேசக்கூட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை."

"இந்த வாய்ப்பை வழங்கிய இடைக்கால சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கிறேன்."

"நான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை இந்த அவையில் மொழியவில்லை. நான் ஆளுநர் மாளிகைக்கே செல்கிறேன்" என்று தெரிவித்த அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்..

4:00 சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார் எடியூரப்பா

"முந்தைய காங்கிரஸ் அரசால் மக்களுக்கு நல்ல குடிநீரைக்கூட வழங்கவில்லை. கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நான் எப்போதுமே விவசாயிகளை என் மனதில் வைத்துள்ளேன். அவர்களை எண்ணி நான் கண்ணீர் விடுகிறேன்."

"நான் இந்த மாநில மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். கூட்டுறவு வங்கிகளின் விவசாயக் கடன்களை நான் தள்ளுபடி செய்ய விரும்புகிறேன். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க விரும்புகிறேன்."

"கர்நாடகாவின் தலித்துகள் பற்றி நான் மிகவும் கவலைகொண்டுள்ளேன். அவர்கள் வசிக்கும் மோசமான நிலையை நான் அறிவேன்." என்று உரையாற்றி வருகிறார் எடியூரப்பா.

3:55 பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு முன்பு எடியூரப்பா சட்டமன்றத்தில் பேசியது.

"கர்நாடகாவின் 6.5 கோடி மக்களும் நான் வாக்கு கேட்டு சென்றபோது எனக்கு அவர்களின் அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

"கடந்த சட்டமன்றத்தில் நாங்கள் வெறும் 40 உறுப்பினர்கள்தான். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் சரிந்துள்ளது."

"காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன."

"எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முறைப்படி அதிக இடங்களை பெற்ற கட்சியையே ஆட்சி அமைக்க அழைக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் ஆளுநர் எங்களை அழைத்தார்" என்று தெரிவித்தார் எடியூரப்பா.

படத்தின் காப்புரிமை Getty Images

3:45: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீண்டும் கூடிய சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடியூரப்பா உரையாற்றி வருகிறார்.

எடியூரப்பா, சித்தராமையா உட்பட தேர்தலில் வெற்றிப் பெற்ற 195 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டனர்.

மீதமுள்ள 25 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டபின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்.

முன்னதாக கர்நாடக சட்டப்பேரவையில்,கே.ஜி போபையா இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

ஆனால் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் மூத்த சட்டமன்ற உறுப்பினரைதான் சபாநாயகராக நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் வாதாடியது.

மூத்த சட்டமன்ற உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்பது நடைமுறையே தவிர அது சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று உச்சநீதிமன்றம் அதற்கு பதில் அளித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: