"நான் ஏன் நிர்வாண மாடலானேன்?" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை

  • தனலட்சுமி மணி முதலியார்
  • பிபிசி-க்காக

(மராத்தி திரைப்படமான 'Nude', தனலட்சுமி மணிமுதலியார் என்ற பெண்மணியின் கதை. அவர் ஒரு கலைக்கல்லூரிக்கு நிர்வாண மாடலாக பணிபுரிகிறார். இப்படமானது அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த திறந்த விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது கதையை அவரே விளக்குகிறார்.)

எனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம்.

என் பெற்றோருக்கு படிப்பறிவு கிடையாது. குப்பை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். சில நேரங்களில் எங்களை தெருக்களில் பிச்சை எடுக்கவும் அனுப்பி வைத்தனர்.

சில நாட்கள் கழித்து, நாங்கள் தாராவி குடிசைப்பகுதிக்கு இடம்பெயர்ந்தோம். ஏழ்மை எங்களை வாட்டியது. அதன் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை.

பின்பு என் அம்மா, என்னை வீட்டு வேலை செய்ய அனுப்பினார்.

சாதம், பொறித்த மீன் ஆகியவற்றை சமைத்து மும்பையில் கிராண்ட் சாலை பகுதியில் உள்ள நிஷா தியேட்டருக்கு முன் விற்பனை செய்து கொண்டிருந்தோம். சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது.

நான் பார்த்த முதல் படம் ஷோலே.

என் தந்தைக்கு குடிப் பழக்கம் உண்டு. குடித்து விட்டு என் தாயை அடிப்பார். நான் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்து என்னிடம் அழுது தீர்ப்பார் என் தாய். இதனால், அங்கு என் வேலை போய்விட்டது. பின்னர், நான் இறால் விற்கத் தொடங்கினேன்.

14 வயதில் திருமணம்

என் தாய்க்கு பரிச்சயமானவர் மணி. அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். என்னை விட 10-12 வயது மூத்தவர். அவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த போது எனக்கு 14 வயது .

இந்நிலையில், எனது இரு சகோதரர்களும் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தார்கள். தனது குழந்தைகளை விட்டுவிட்டு என் சகோதரி எங்கேயோ சென்று விட்டாள். அதனால், அவர்களின் குழந்தைகளை நான் பார்த்துக் கொண்டேன். என் கணவருக்கு அது பிடிக்காமல் என்னை கொடுமை செய்ய ஆரம்பித்தார்.

என்னிடம் இருந்து பணம் வாங்கி, அதை வைத்து மது அருந்துவார்.

என் தந்தை மிகுந்த கொடுமை செய்ததால், அதனை தாங்க முடியாமல் என் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

என் உடல்தான் தேவைப்பட்டது

என் மூத்த மகனுக்கு 6 வயது இருக்கும் போது, நான் மீண்டும் கர்பமானேன். அப்போது என் கணவர் இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்க்க வேண்டிய முழு பொறுப்பு என் தலையில் விழுந்தது.

வேலை தேடி அலைந்து கொண்டிருந்த போது, பல ஆண்கள் என்னை தவறான நோக்கத்துடன் பார்த்தனர். எனக்கு வேலைதரத் தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு என் உடல் தேவைப்பட்டது. நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

'உன் உடல் நன்றாக இருக்கிறது'

ஜெ.ஜெ கலைக் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த ராஜம்மா என்ற பெண் எனக்கு அறிமுகமானார். எனக்கு அங்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டும், அவர் எனக்கு உதவி செய்யவில்லை. தான் அங்கு துப்புரவு பணி செய்வதாக அவர் என்னிடம் கூறியிருந்தார்.

ஒருநாள் ராஜம்மாவை தேடி, அக்கல்லூரிக்கு நான் சென்றிருந்தேன். அவரை அங்கு கண்டுபிடிக்க முடியாமல், ஒரு வகுப்பறை முன்பு தண்ணீர் அருந்த நின்ற போது, அந்த அறைக்குள் எட்டிப் பார்க்க, ராஜம்மாவின் கால்கள் மட்டும் தெரிந்தன.

உள்ளே சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார் ராஜம்மா.

"நீ எதற்காக இங்கு வந்தாய்?" என்று என்னைப் பார்த்து கத்தினார் ராஜம்மா.

நான் வேலை தேடி வந்தேன் என்று கூற, அதற்கு அவர், இப்போது நீ இதை பார்த்து விட்டதால், நீயும் இதனை செய்யலாம். பசியால் இறப்பதை விட இந்த வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று கூறினார். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை.

நாங்கள் அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது, இரண்டு ஆசிரியர்கள் அறைக்குள் வந்து, நான் இந்த வேலை செய்ய முடியுமா என்று கேட்டனர். ராஜம்மா நான் செய்வேன் என்று கூறிவிட்டார்.

நான் சற்று யோசித்தேன். ஆனால் ராஜம்மா என்னிடம், "முதலில் இந்த வேலையை செய். பின்பு யோசி. இங்கு நிர்வாணமாக அமர்ந்தால், நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் கிடைக்கும். ஆடைகளுடன் அமர்ந்தால் 50 ரூபாய். உன் உடல் நன்றாக இருக்கிறது. அதனால், நல்ல பணம் கிடைக்கும்" என்றார்.

அன்றே நான் என் பணியை தொடங்கினேன். ஒரு மாணவர் நான் அமர மேஜையை கொண்டு வந்தார்.

முதன்முதலில் நிர்வாணமான அனுபவம்

முதலில் தயக்கமாக இருந்தது. அழத் தொடங்கி விட்டேன்.

அப்போது, என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும். என் மார்பகங்கள் பெரிதாக இருந்தன. எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனால், மாணவர்கள் என்னை சமாதானப்படுத்தினர்.

எப்படியோ என் ஆடைகளை களைந்து மேஜையில் அமர்ந்தேன். என் படத்தை மாணவர்கள் வரைந்து கொண்டிருக்கும் போது, என் மார்பகங்களில் இருந்து பால் வடிய ஆரம்பித்தது. அதனை எப்படி துடைப்பது என்று தெரியாமல் விழித்தேன். என் பிரச்சனையை மாணவர்கள் புரிந்து கொண்டனர்.

என்னை அன்று வீட்டுக்கு திரும்புமாறு கூறிய மாணவர்கள், அடுத்த நாள் வருமாறு சொன்னார்கள்.

60 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை

ஜெ. ஜெ கல்லூரியில் ராஜம்மாவிற்கு நல்ல மதிப்பு இருந்தது. நான் புதிதாக சேர்ந்தேன் என்பதால் எனக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை.

போகப் போக மாணவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் பணி குறித்து நன்கு அறிந்து கொண்டேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் இந்த வேலையை செய்து வருகிறேன்.

இப்போது, நிர்வாணமாக என்னை ஓவியம் வரைய 1000 ரூபாயும், ஆடைகளுடன் வரைய 400 ரூபாயும் நான் பெறுகிறேன்.

தற்போது, பல கலைஞர்கள் எனக்கு நல்ல மரியாதை அளிக்கின்றனர். என் காலை தொட்டு வணங்குகிறார்கள்.

எனக்கு பல கலைஞர்கள் உதவியும் செய்துள்ளார்கள். தவறான நோக்கத்துடன் என்னை யாரும் பார்ப்பதில்லை. அவ்வப்போது கலைஞர்களின் கண்காட்சிக்கும் நான் செல்வேன்.

Nude திரைப்படத்தின் இயக்குநர் ரவி ஜாதவ் மற்றும் அதில் நடித்த நடிகை கல்யாணி மூலே என்னை பார்க்க வந்தனர். என்னிடம் நிறைய பேசினார்கள். என் வாழ்வின் கதைதான் அந்தத் திரைப்படம். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. ஆனால், அதன் இறுதிப்பகுதி பிடிக்கவில்லை.

Nude படத்தில் என் கதாப்பாத்திரத்தில் நடித்த கல்யாணி ஜெ.ஜெ. கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது, கல்யாணியை விட, எனக்கு அதிக கைத்தட்டல் கிடைத்தது. அது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்.

அத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நான் அந்தப்படத்துக்காக அதிக பணம் வாங்கினேன் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அதற்காக நான் பெற்றது ஒரு புடவையும், 20,000 ரூபாய் பணமும்தான். அதுவும் என் கடனை அடைக்க செலவாகிவிட்டது.

'என்னை நினைத்து பெருமைப்படும் என் பிள்ளைகள்'

நான் ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி வந்தேன் என்று என் பிள்ளைகளிடம் கூறியதில்லை. பேராசிரியர்களுக்கு டீ போட்டு கொடுக்கும் பணியும், துப்புரவு பணியும் செய்து வருவதாகத்தான் அவர்களிடம் கூறிவந்தேன். ஆனால், இந்த திரைப்படம் வெளியாவதற்குமுன், படத்தின் கதை என்னுடைய வாழ்க்கையை பற்றியதுதான் என்பதை தெரிவித்தேன். முதலில், நான் நகைச்சுவைக்காக கூறுவதாக என் பிள்ளைகள் நினைத்தார்கள். பிறகு என் மீது எரிச்சலைடைந்தார்கள். ஆனால், நல்லபடியாக என்னுடைய சூழலை நான் அவர்களுக்கு புரிய வைத்துவிட்டேன்.

இந்த திரைப்படம் குறித்து ஜெ. ஜெ கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது. அதற்குகூட என்னுடைய குடும்பத்தை நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சியை தொலைக்காட்சியில்தான் என் குடும்பத்தினர் பார்த்தனர். தங்களது தாய் கெளரவிக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள். என்னைப்பற்றி பெருமைப்பட்டார்கள்.

பல ஆண்டுகளாக ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி நிறைய பணம் சம்பாதித்த பிறகும், எனக்கென்று ஒரு சொந்த வீடு கூட இல்லை. நான் குர்லா பகுதியில் என்னுடைய மகன்களோடு வசித்து வருகிறேன். என்னால் என்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியவில்லை. என்னுடைய மகன்கள் சவாலான பணிகளையே செய்து வருகின்றனர். எப்போதும் பணத்தேவை என்பது இருந்துகொண்டே இருக்கிறது.

தற்போது, ஓவிய பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெண்கள் கழிப்பறை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். இந்த வேலைக்கு, நாள் ஒன்றுக்கு 200 ரூபாயாக வருமானம் கிடைக்கிறது.

நான் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறேன். நான் ஒரு விதவை. எனக்கு விதவைகளுக்கு தரப்படும் உதவித்தொகையும் கிடையாது. எங்களுக்கென்று எந்தவொரு அரசாங்க திட்டங்களுமில்லை. என்னுடைய உடல் தோற்றத்துடன் இருக்கும்வரை இந்த தொழிலில் இருக்கலாம். அதன்பிறகு நான் என்ன செய்வேன்? இந்த ஒரு கேள்வியே என்னை நிலைகுலைய வைக்கிறது.

(20 மே 2018 பிபிசி தமிழில் வெளியான கட்டுரையின் மீள் பகிர்வு இது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: