‘குட்டிபையன், மிதிவண்டி மற்றும் ஒரு பலூன்’ - ஓர் ஊர்சுற்றியின் சுவாரஸ்ய கதை

  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

ஒரு நாள் கதை சொல்வற்காக தமிழகத்தின் ஏதோ ஒரு நிலத்தின் பயணம் செய்து கொண்டிருந்த போது சில காட்சிகள் என் நினைவில் மின்னலென வந்து சென்றது. அந்த காட்சி தரிசனத்துக்கு என்னை முழுவதுமாக ஒப்புகொடுத்தேன். அந்த ஒப்படைப்புதான் என்னை கேரளா, கர்நாடகா, குஜராத், கங்கோதரி, ஹரித்வார், டெல்லி என இந்தியாவின் அனைத்து நிலபரப்புகளுக்கும் என்னை அழைத்து வந்து இருக்கிறது என்று கவித்துவமாக பேசுகிறார் குமார் ஷா.

பட மூலாதாரம், facebook/kumarshaw

படக்குறிப்பு,

குமார் ஷா

பயணி, கதை சொல்லி, நாடக கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் குமார் ஷா. ஆனால், இது எதுவும் என் திறமை அல்ல என்கிறார் அவர். "நான் எப்போதோ பார்த்த காட்சிகள், நான் எங்கேயோ கேட்ட கதைகள்... இவைதான் நான். இவற்றுடன் ஊடாடல்தான்."என்கிறார் குமார்.

'இருநூறு ரூபாயுடன் தொடங்கிய பயணம்'

"ஒரு நாள் குழந்தைகளுக்கு கதை சொல்லிவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது, மின்னல்வெட்டாக எனக்கு சில காட்சிகள் தோன்றின. ஒரு சிறுவன் ஒரு சைக்கிளில் ஒரு பலூனுடன் பயணம் செய்வதாய் இருந்தது அந்த காட்சி. அந்த காட்சி என்னை தொந்தரவு செய்தது. பலூனுடன் பயணம் செய்யும் அந்த சிறுவன் எத்தனை எத்தனை நிலப்பரப்புகளை பார்ப்பான். எவ்வளவு மனிதர்களை சந்திப்பான் என்ற யோசனையே அலாதியானதாக இருந்தது. மின்னல் வெட்டாய் வந்த காட்சி தரிசனம் என்னை நெகிழ செய்தது. அந்த சிறுவனாக என்னை உருவகப்படுத்திக் கொண்டேன். சைக்கிள் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்" என்று தாம் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்ய தூண்டிய கதையையும், அந்த பயணத்தில் அவர் உறவாடிய நிலபரப்பு, மனிதர்கள் குறித்து சொல்ல தொடங்குகிறார் குமார்.

பட மூலாதாரம், facebook/kumarshaw

"இந்த பயணம் தொடங்கும் போது இங்குதான் செல்ல வேண்டும், இவர்களைதான் சந்திக்க வேண்டும் என்ற பயணதிட்டமும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னிடம் இருநூறு ரூபாய்க்கு மேல் பணமும் இல்லை. ஆனால், அந்த பலூன் குழந்தையின் காட்சி என்னை செலுத்தியது. அந்த இருநூறு பணத்துடன் என்னை பயணத்தை தொடங்கினேன்." என்கிறார் அவர்.

'மொழியை கடந்து செல்லுதல்'

பட மூலாதாரம், facebook/kumarshaw

"சிவகங்கை வழியாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு டீ-கடையில் 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவரை சந்தித்தேன். அவருடன் உரையாடிய போது, தனது அனுபவங்களை, இத்தனை ஆண்டுகளாக அவர் தரிசித்த விஷயங்களை கதையாக என்னிடம் கடத்தினார். ஆனால், தமிழக எல்லையை கடந்தபின் மொழி எனக்கு முதலில் பெரும் தடையாக இருந்தது. நான் சொல்வதற்கும் அவர்கள் பேசுவதற்கு இடையே ஒரு வெளி உண்டாக்கியது. வெற்றிடத்தை காற்று நிரப்பும்தானே... அது போல் அந்த வெற்றிடத்தை அன்பு நிரப்பியது" என்று அன்பு மொழியை வவரிக்கிறார் குமார்.

"நான் இருநூறு ரூபாயுடன்தான் இந்த பெரும்பயணத்திற்கு கிளம்பினேன் என்று சொன்னேன்தானே, ஆனால், இந்த பயணத்தில் ஒரு நாள்கூட பசியுடன் உறங்கியது இல்லை. மொழி, இனம் தாண்டி மனிதர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். இந்த உலகம் இன்னும் ஜீவித்து இருக்கிறது அன்பினால் மட்டும்தான் என்பதை முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நண்பர்கள் புரியவைத்தார்கள்" என்கிறார் குமார் ஷா.

பட மூலாதாரம், facebook/kumarshaw/jaisingh Nageswaran

படக்குறிப்பு,

குமார் ஷா

கேரளா, அகமதாபாத், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ் என போகிற வழிகளில் எல்லாம் பள்ளிகளில் பணி செய்து இருக்கிறார் குமார். அங்கு பொம்மலாட்டம் நடத்துவது, பேப்பரில் கலை பொருட்கள் செய்வது மற்றும் நாடக பயிற்சி அளிப்பது என பயணம் முழுவதும் குழந்தைகளுடன் இருந்திருக்கிறார் குமார் ஷா.

'ஹிப்பி நாட்கள்'

பட மூலாதாரம், facebook/kumarshaw

"நாம் இவ்வளவு பயணம் செய்கிறோம். நமக்கு எல்லாம் தெரியும், எல்லோரைப் பற்றியும் புரியும் என்ற அகந்தை கோவாவில் உடைந்தது. ஹிப்பி என்றால் தான்தோன்றிகள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், கோவாவில் அவர்களை கவனித்தபோது, அவர்களிடம் இருந்த ஒரு ஒழுங்கு புரிந்தது. அவர்கள் யாரையும் தங்கள் நலத்திற்காக தொந்தரவு செய்வது இல்லை. குறிப்பாக, நாங்கள்தான் வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தங்கள் வாழ்க்கை முறையை பிரசாரம் செய்வது இல்லை. திணிக்க முயற்சிப்பதில்லை. இதுதான் முக்கியம் என்று கருதுகிறேன். இங்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் இந்த திணித்தலில்தான் தொடங்குகிறது. இதுபோன்ற என்னுடைய பல முன்முடிவுகள் இந்த பயணத்தில் உடைந்தன. " என்கிறார்.

'நிலம், மனிதர்கள்'

"நிலமும், மனிதர்களும் வெவ்வேறு அல்ல. அந்த நிலத்தின் தன்மைதான் அந்த மனிதர்களிடம் பிரதிபலிக்கிறது. நிலத்தை மதிப்பது என்பது மனிதர்களை மதித்தல் என்பதை இந்த பயணம் உணர்த்தியது"

பட மூலாதாரம், facebook/kumarshaw

இந்த பயணத்தின்போது டேராடூனிலிருந்து கங்கோதரி வரை 8 நாட்கள் வரை நடந்து சென்றோம். அந்த நடைபயணம் என்னை முழுவதுமாக மாற்றி போட்டு இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் டெல்லியிலிருந்து கிளம்புகிறேன். வடகிழக்கு மாநிலங்கள் செல்கிறேன். பின் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு செல்கிறேன்.

மின்னல் வெட்டாக வந்த ஒரு பையனின் காட்சி என்னை இந்தியா முழுவதும் சுற்ற வைத்து இருக்கிறது. அந்த பையனின் மூலமாக நான் கண்ட நிலபரப்பும், மனிதர்களும் என்னுள் கதை ஊற்றை உண்டாக்கி இருக்கிறது. என் நினைவில் இந்தியாவின் பெரும்பாலான பகுதியின் நிலபரப்புகள் பதிந்துள்ளன. இனி கதைகளில் இது ஊற்றெடுக்கும் என்கிறார் குமார் எனும் பயணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: