நாளிதழ்களில் இன்று: உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா - ஆய்வுத் தகவல்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி இந்து (தமிழ்)

பட மூலாதாரம், Getty Images

நிலம், பணம், தொழில் அமைப்புகள், பங்கு சந்தை முதலீடுகள் போன்றவை சொத்துகளாக கருதப்பட்டு கடன் தொகை அதிலிருந்து கழிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட எஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கையில், இந்தியா 8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக உள்ளதென்று தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, முதலிடத்திலுள்ள அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 62,58,400 கோடி டாலராகும். இதற்கு அடுத்த இடங்களில் சீனா (24,80,300 கோடி டாலர்), ஜப்பான் (19,52,200 கோடி டாலர்) போன்றவை உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

பட மூலாதாரம், TWITTER

நேற்று மும்பை அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் காலிறுதிப் போட்டியில் நுழைவதற்கான வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்ட நடப்பு சாம்பியனான மும்பை மற்றும் பெங்களூரு அணி இந்தாண்டுக்கான தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரங்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே 159 ரன்களை எடுத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், Getty Images

நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்கு முன்னர் சுமார் 19 நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தினசரி பெட்ரோல், டீசல் உயர்வு அங்கு தேர்தல் முடிவுற்ற பிறகு தொடர்ந்து ஏழாவது நாளாக தினமும் அவற்றின் விலையை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மும்பையில் நாட்டிலேயே அதிகமான 84.07 ரூபாய்க்கும், சென்னையில் 79.13 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியளவு குறைந்துள்ளதால், அவற்றின் விலை இந்தியாவில் அதிகரித்து காணப்படுவதாகவும், ஆனால், விலையை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்குமென்று அவர் தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: