இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?

  • விவேக் ஆனந்த்
  • பிபிசி தமிழ்

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 30 டாலருக்கும் கீழ் சரிந்தது. ஆனால் இன்றைய நிலையில் விலை 80 டாலர்களை நெருங்கியுள்ளது.

பட மூலாதாரம், Scott Barbour

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80 ரூபாயை நெருங்கிவிட்டது. பெட்ரோலின் விலையேற்றத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிற பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலையானது அனுதினமும் சில காசுகள் அல்லது ரூபாய்கள் அளவு மாற்றத்தை சந்திக்கக் கூடியது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே விலையில்தான் வாங்குகின்றன.

ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வெவ்வேறு வரி விதிமுறைகளால் நுகர்வோருக்கு விற்கப்படும் பெட்ரோலின் விலையில் வித்தியாசம் நிலவுகிறது.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?

ஓரு பீப்பாய் கச்சா எண்ணெய் என்பது கிட்டதட்ட 159 லிட்டர் அளவை கொண்டது. கச்சா எண்ணெய் அமெரிக்க டாலர்களில் விற்கப்படுகிறது.

ஒரு பீப்பாயின் விலை 75 டாலர்களாகவும், ஒரு டாலரின் இந்திய மதிப்பு 68 ரூபாயாகவும் கணக்கில் கொள்வோம். அதனடிப்படையில் எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை - 5,100 ரூபாய் (75 x 68)

ஒரு லிட்டர் எண்ணெய்யின் விலை - 32.08 ரூபாய் (5100/159)

தோராயமான அடிப்படை பராமரிப்பு கட்டணத்தில் நுழைவு கட்டணம், சுத்திகரிப்பு கட்டணம், கப்பல் வழியாக தரைக்கு இறக்குமதி கட்டணம், மற்ற அடிப்படை செயல்பாட்டுச் செலவு, அடிப்படை செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவு, போக்குவரத்துச் செலவு, கப்பல் வழியாக எண்ணெய்யை எடுத்துவரும் செலவு உள்ளிட்டவை அடங்கும்.

ஒரு லிட்டருக்கான (பெட்ரோல்) தோராயமான அடிப்படை பராமரிப்பு கட்டணம் - 5.93 ரூபாய். இதே கட்டணம் ஒரு லிட்டர் டீசலுக்கு 8.78 ரூபாய்.

ஆகவே ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை - ரூ. 38.01

ஒரு லிட்டர் டீசலின் அடிப்படை விலை - ரூ. 40.86

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை நுகர்வோரை சென்றடையும் போது எப்படி இரு மடங்காகிறது?

இடத்தை பொறுத்து டீலருக்கு கொடுக்கப்படும் தொகை மாறக்கூடும்

உதாரணமாக டெல்லியை அடிப்படையாக கொண்ட இடத்தில் பெட்ரோல் பம்புக்கு டீலருக்கான தரகு தொகையை கணக்கில் கொள்வோம்.

வாட் வரி - மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உதாரணமாக பெட்ரோலுக்கு 27% வாட் வரி. டீசலுக்கு 16.75% என கணக்கில் கொள்வோம். மேற்கொண்டு 25 பைசா மாசுபாடு வரியாகவும் செலுத்த வேண்டும்,

குறிப்பு :- இந்த விலை கணக்கீட்டில் வரிகள் உட்பட அனைத்துக் கட்டணங்களும் தோராயமாகவே கணக்கிடப்பட்டுள்ளது. இவை துல்லியத்துக்கு நெருக்கமான கட்டணமே. அதி துல்லியமான கணக்கீடு அல்ல.

தோராயமாக 38 ரூபாய் கொண்ட ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு வெவ்வேறு வரிகள் விதிப்பதன் மூலம் ரூ 36.22 காசுகள் (தோராயமாக) வரை பெறுகின்றன.

இந்தியாவில் எந்தெந்த மாநிலத்தில் பெட்ரோலுக்கு எவ்வளவு விற்பனைவரி/வாட் வரி விதிக்கப்படுகிறது?

ஆதாரம் - பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கூடம் (01.05.2018 நிலவரப்படி)

தென்னிந்தியாவில் கர்நாடகாவை தவிர பிற பகுதிகளில் ’வாட்’ வரி 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. வட கிழக்கு இந்தியாவில் ஒப்பீட்டளவில் மற்ற பகுதிகளை விட வாட் வரி குறைவாக இருக்கிறது .

ஒவ்வொரு வருடமும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை எவ்வளவு இருந்துள்ளது என்பதை கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.

கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து பெட்ரோல் விலை ஏறுவதும் குறைவதும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் மக்கள் இதனால் பெரும் சிரமத்தைச் சந்திக்கக் கூடாது எனில் அரசாங்கம்தான் வரி விதிப்பில் மாற்றங்கள் செய்து நிலைமையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்கிறார் தமிழக பெட்ரோல் விநியோகர் சங்க தலைவர் முரளி.

''இந்தியாவில் பெட்ரோல் மூலம் பெரும் வருமானம் வருகிறது. இதற்கு காரணம் மக்கள். நாடு முழுவதும் மக்கள் பெட்ரோல் வாங்காவிட்டால் அரசாங்கத்திற்கு இவ்வருமானம் கிடைக்கப்போவதில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயல்படவேண்டும். பெட்ரோல் விலை உயர்வால் முதலில் பாதிக்கப்படுவது மக்கள். இரண்டாவது எங்களை போன்ற வியாபாரிகளே. நாங்கள் தினமும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் கசப்புணர்வைச் சந்திக்கிறோம்'' என ஆதங்கத்துடன் சொல்கிறார் முரளி.

''முன்பெல்லாம் கச்சா எண்ணெய் விலை ஏறினால் அரசாங்கங்கள் அதற்கேற்ப கலால் வரி உள்ளிட்டவற்றை குறைத்துக்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைப்பார்கள். மாநில அரசாங்கம் கூட வாட் வரியை தற்காலிகமாக குறைப்பார்கள். ஆனால் தற்போதைய அரசானது கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தபோதும் கூட வரி விகிதங்களில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் பெரிய பணப்பலன் பெற்றார்கள். ஆனால் விலை அதிகரிக்கும்போதும் மக்களின் வலியை உணராமல் வரிவிகிதங்களில் மாற்றம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இதுவே பிரச்சனைக்கு எளிமையான காரணம்.பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு மத்திய அரசும் மாநில அரசுமே பொறுப்பு'' என்றார் முரளி.

'' பெட்ரோல் பயன்பாடு அதிகரித்து வருவதனால் அதிகளவு இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என சில சமயங்களில் அரசாங்கம் கூறுகிறது. உண்மையில் அப்படியொரு அக்கறை இருப்பின் ஏற்கனவே பெட்ரோலிய அமைச்சகத்திடம் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் கிட்டதட்ட 53 ஆயிரம் விநியோகஸ்தர்கள் இருக்கும்போது எதற்காக தனியார் நிறுவனங்கள் புதிதாக பெட்ரோல் பம்ப் திறப்பதற்கு உரிமம் தர வேண்டும்'' என முரளி கேள்வி எழுப்புகிறார்.

''பெட்ரோல் விலை உயர்வை பொறுத்தவரையில் மத்திய அரசு மாநில அரசையும், மாநில அரசு மத்திய அரசையும் குறை சொல்கின்றன. ஆனால் இரு அரசுகளும் தங்களுக்கு வாக்களித்த மக்களின் நலனை கருத்தில் கொள்வதில்லை''.

''இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூன்றும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது வாடிக்கையாளர்கள் அதிக டீசல் வாங்கவேண்டுமென்பதற்காக கார்டு போன்றவற்றின் மூலம் சில தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. விலையில் தள்ளுபடி அறிவிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தால் அதை ஏன் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலையில் இதனைச் செய்யக்கூடாது'' என கேள்வி எழுப்புகிறார் முரளி.

பெட்ரோல் விலை ஒவ்வொரு முறை உயரும்போதும் மக்களும், மக்களின் எதிர்ப்பை நேரடியாகச் சந்திக்கும் வியாபாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் என்ன நடந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசும் நிலையான வருமானத்தை பெற்று அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன. இது அநியாயமானது என தமிழக பெட்ரோலியம் விநியோக சங்க தலைவர் பிபிசியிடம் பேசியபோது குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், PAL PILLAI

''கச்சா எண்ணெய் விலை வர்த்தக நாட்களில் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் கொள்முதல் செய்வது கிடையாது. தன்னிடம் உள்ள கொள்ளளவு, தேவை, விலையின் போக்கு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மொத்தமாக கொள்முதல் செய்துவிடுகின்றன. ஆனால் கடந்த 10 மாதமாக தினமும் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணி முதல் புது பெட்ரோல் விலையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

காலையில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு வந்தவுடன் விலை உயர்வை தெரிந்துகொண்டால் எரிச்சல் அடைகிறார்கள்.

இதனால் பெட்ரோல் விற்பவர்களும் வாங்குபவர்களுக்கு காலையிலேயே ஒரு இணக்கமற்ற சூழல் உருவாகிவிடுகிறது.

இந்தியாவில் உள்ள 53 ஆயிரம் பெட்ரோல் பம்புகள் சுமார் 80% குறைந்த அளவு பெட்ரோல் வாங்குபவர்களையே பெரும்பான்மையான வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கின்றன. இந்தியாவில் 75% வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 2 லிட்டர் பெட்ரோல் வரை மட்டுமே ஒரே நேரத்தில் போடுகிறார்கள். அன்றாட செலவுகளை கணக்குப் பார்த்து செலவு செய்யும் சூழ்நிலையில் உள்ள எளிய மற்றும் நடுத்தர மக்கள் அடிக்கடி பெட்ரோல் உயர்வு ஏற்படுவதால் அதிக எரிச்சல் அடைவதால் பெட்ரோல் பம்பில் வேலை செய்பவர்களிடம்தான் அவர்களின் வெறுப்பையும் சீற்றத்தையும் வேறு வழியின்றி கொட்டுகிறார்கள். இந்த வியாபாரத்தில் இடைத்தரகராக இருப்பவர்கள்தான் மக்களிடம் இருந்து நேரடியாக அதிக எதிர்ப்புகளை சந்திப்பவர்களாக உள்ளனர்'' என்கிறார் முரளி.

பெட்ரோலிய விநியோகஸ்தர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 3.62 ரூபாய் அளவுக்கு நிலையான தரகு தொகை தரப்படுகிறது. இந்த தரகு தொகை சில காரணங்களால் வெவ்வேறு இடங்களில் மாறக்கூடும். பெட்ரோல் விலை உயர்ந்தாலோ குறைந்தாலோ இந்த தரகு தொகையில் பெரும்பாலும் எந்தவித மாற்றமும் செய்யப்படுவதில்லை.

பிபிசியிடம் இது குறித்து பேசிய முரளி ''எண்ணெய் நிறுவனங்கள் தரும் தரகு தொகையில் சுமார் 43 பைசா அளவுக்கு உரிமம் மீட்புத் தொகை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை காரணம் காட்டி அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது. மின்சார செலவுகள் முதல் ஊழியர்கள் செலவுகள் வரை விநியோகஸ்தர்களுக்கு செலவு செய்யும் தொகை அதிகளவில் உள்ளது. ஏகப்பட்ட விநியோகஸ்தர்கள் தற்போது நிதி நெருக்கடியில் உள்ளனர்'' என்றார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

கடந்த இரு மாதங்களாக கச்சா எண்ணெய்யின் விலை சீராக அதிகரித்து வந்துள்ளது. கடைசி 15 நாட்களில் மட்டும் சுமார் ஐந்து டாலர் அளவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஏறியுள்ளது.

இந்தியாவில் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80 ரூபாயை தாண்டிவிட்டது. சென்னை உட்பட பிற நகரங்களிலும் பெட்ரோலின் விலை 80 ரூபாயை நெருங்கியுள்ளது

இந்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையின் படி, அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றை விட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. அதேவேளையில் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை இந்தியாவில் மானியத்திற்கு பிந்தைய விலையானது ஒப்பீட்டளவில் அண்டை நாடுகளைவிட குறைவாக உள்ளது.

^ - இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விலையின் படி

# - மும்பையில் உள்ள விலை

* - மானியத்துக்கு பிந்தைய விலை

பட மூலாதாரம், NARINDER NANU

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோல் என்ன விலை என்பதை வெளியிடும் Global Petrol Prices இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த மே -14 நிலவரப்படி வெனிசுவேலா நாட்டில்தான் உலகிலேயே பெட்ரோல் மிக மலிவாக கிடைக்கிறது.

உலகில் மிக மலிவாக பெட்ரோல் விலை உள்ள நாடுகள் (விலை - இந்திய ரூபாயில்)

  • வெனிஸ்வேலா - ரூ 0.59 (ஒரு லிட்டருக்கு)
  • இரான் - ரூ 19.39
  • சூடான் - ரூ 23.26
  • குவைத் - ரூ 23.68
  • அல்ஜீரியா - ரூ 25.11

ரஷ்யாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 47.68 ஆகவும், அமெரிக்காவில் ரூ 56.69, இங்கிலாந்தில் ரூ 114.62, பிரான்சில் ரூ 123.59 ஆகவும், ஹாங்காங்கில் ரூ 142.70 ஆகவும் இருந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: