`நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவரின் உமிழ்நீர், வேர்வையில் இருந்தும் பரவும்'

கேரளாவில் பரவி வரும் நிபா வைரசால் அங்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் அங்கு நேரில் சென்று, வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, நாளை கேரளா சென்றடையும் என்றும், மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் பழந்தின்னி வௌவால்கள் இருக்கும் கிணற்றை ஆய்வு செய்யும் கால்நடைத்துறை அதிகாரிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோழிக்கோட்டில் பழந்தின்னி வௌவால்கள் இருக்கும் கிணற்றை ஆய்வு செய்யும் கால்நடைத்துறை அதிகாரிகள்

கோழிக்கோடில் அதிகளவில் இந்த வைரஸ் பரவி வந்தாலும், மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதரத்துறை அமைச்சர் சார்பில், பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் திலிப், இதுவரை 6 பேர் நிபா வைரசால் உயிரிழந்திருப்பதாக கூறினார். இதில் 5 பேருக்கு இந்த வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Twitter

"தற்போது இருக்கும் சூழலை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் இது பரவியிருந்தாலும், அருகில் உள்ள பிற மாவட்டங்களையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக" அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் வல்லுநர் குழுவிற்காக காத்திருப்பதாகவும் திலிப் தெரிவித்தார்.

"காய்ச்சல் போன்ற இந்த வைரசின் அறிகுறிகளால் சுமார் 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த 3 செவிலியர்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றும் திலிப் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை சோதனை செய்யும் மருத்துவ அதிகாரிகள்

கோழிக்கோட்டில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து, இதனை தொடர்ந்து கண்காணித்து வரும் மணிப்பால் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் இயல் துறையின் தலைவர் மருத்துவர் அருண்குமாரை தொடர்பு கொண்டு பேசியது பிபிசி தமிழ்.

பழந்தின்னி வௌவால்களின் உமிழ் நீரில், நிபா வைரஸ் இருக்கும் என்பதால், கடித்த பழங்கள் எதையும் மக்கள் உட்கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் அருகில் இருக்க வேண்டாம் என்றும் அருண் குமார் தெரிவித்தார். நிபா வைரஸ் இருக்கும் நபர்களின் உமிழ்நீர் மற்றும் வேர்வையில் இருந்து மற்ற நபருக்கு இது பரவும்.

"விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிலிருந்து மற்றொருவருக்கும் இது எளிமையாக பரவக்கூடும். குறிப்பாக மருத்துவமனைகளில் இது வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக" அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிணற்றில் இருந்த வௌவால்களை, டப்பாவில் அடைக்கும் அதிகாரிகள்

இந்த வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர் அருண்குமார் தெரிவித்தார்.

நிபா வைரஸ் என்றால் என்ன?

 • நிபா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரசாகும். இதன் பிறப்பிடம் `fruit bats` எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.
 • 1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
 • 2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவப்படுவதும் கண்டறியப்பட்டது.
 • நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அதன் அறிகுறிகள் என்ன?

ஆசியாவில் சில விலங்குகள் மூலம் பரவும் நிபா வைரஸ், எந்த வயதுடையவர்களையும் தாக்கும்.

அதன் அறிகுறிகள்

 • மூளை வீக்கம்
 • கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி
 • உடல்வலி
 • தசைகளில் வலி
 • அயர்வு
 • சுவாசப் பிரச்சனைகள்
 • மனக்குழப்பம்

நிபா வைரஸ் தாக்கிய 5 - 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும்.

சிகிச்சை

நிபா வைரஸ் தாக்குதலுக்கு என குறிப்பாக சிகிச்சை ஏதும் இல்லை.

கோழிக்கோட்டில் அதிகளவில் இந்த வைரஸ் பரவி வந்தாலும், கேரளா முழுவதும் இதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வழிகள்

 • பழந்தின்னி வௌவால்கள், விலங்குகள் கடித்த பழங்களை உட்கொள்ள வேண்டாம்.
 • நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அருகில் இருக்க வேண்டாம்.
 • இந்த வைரசால் இறந்த நபர்களின் உடலில் இருந்தும் வைரஸ் பரவக்கூடும்.
 • கடும் காய்ச்சலோ அதற்கான அறிகுறிகளோ இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: