மாஞ்சோலை, மொழிப் போர், மெரினா, ஸ்டெர்லைட்: தமிழகம் சந்தித்த 8 முக்கிய மக்கள் போராட்டங்கள்
- மு. நியாஸ் அகமது
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Marji Lang
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது போலீஸ் தாக்குதல் நடத்தியதில், சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் ஆற்றில் மூழ்கி பலியான நாள் இன்று. தமிழகத்தில் நடந்த முக்கிய மக்கள் போராட்டங்களையும், போராடும் மக்கள் மீதான காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் இங்கே தொகுத்துள்ளோம்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
அவற்றில் 7 முக்கிய போராட்டங்களை மட்டும் இங்கும் தொகுத்து அளிக்கிறோம்.
மொழிப் போர்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது இந்தித் திணிப்புக்கு எதிராக 1965 அம் ஆண்டு தமிழகத்தில் நடந்த போராட்டம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்த போரட்டத்தில் நூற்றுகணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963-ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதா 1965 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி திருச்சி ரயில் நிலையம் அருகே தீக்குளித்தார். இந்த மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய போரட்டத்துக்கு வழி கோலியது.
1965 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்டட்டதில் மாணவர் ராசேந்திரன் பலியானார்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றதில் நூற்றுகணக்கானோர் பலியானார்கள். போராட்டத்தை அடக்க இந்திய ராணுவம் வந்தது. அப்போது முதல்வராக பக்தவத்சலம் இருந்தார்.
தாமிரபரணி படுகொலை
தாமிரபரணி மாவட்டம் மாஞ்சோலையில் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடந்த தொழிலாளர் ஊர்வலத்தின் போது காவல் துறை நடத்திய தடியடியில் 17 பேர் உயிரிழந்தனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்ற போது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இரண்டு ரவுண்ட் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதிலிருந்து தப்புவதற்காக தாமிரபரணி ஆற்றில் குதித்ததிலும் சிலர் உயிரிழந்தனர்.
அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த சோ. பாலகிருஷ்ணன், போலீஸ் கற்களை கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக குற்றஞ்சாட்டி இருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், இடதுசாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.
அப்போது தமிழக முதல்வராக மு. கருணாநிதி, போலீஸ் தற்காப்புக்காகவே தாக்குதல் மேற்கொண்டதாக கூறினார். ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வன்னியர் சங்க போராட்டம்
தமிழகத்தில் இந்தித் திணிப்பு போராட்டத்திற்கு பின் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்னியர் சங்கம் 1987 ஆம் ஆண்டு முன்னெடுத்த தனி இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம்.
இந்த போரட்டமும் எம்.ஜி. ஆர் ஆட்சியின் போதுதான் நடந்தது. பல்லாயிர கணக்காணோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஏறத்தாழ 18,000 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விவசாயிகள் போராட்டம்
ஓட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது 1977 ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் முன்னெடுத்த போரட்டம். மின்சார கட்டணம், கூட்டுறவு கடன், நில வரி உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் போராடினர். நீண்ட நாட்களாக நடந்தது இப்போராட்டம். 1978 ஆம் ஆண்டு தமிழகம் தழுவிய அளவிலான முழு அடைப்புக்குப் போராட்ட குழுவினர் அழைப்பு விடுத்தனர். இப்போரட்டத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு துப்பாக்கிகளை கொண்டு எதிர்கொண்டது. எட்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொலப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
இறந்த ஆறு பேரும் தலித் மக்கள். இமானுவேல் சேகரனின் 54 வது குரு பூஜையின் போது இந்த சம்பவம் நடந்தது.
குரு பூஜையில் கலந்து கொள்வதிலிருந்து தடுப்பதற்காக, முன்னதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியனை போலீஸார் கைது செய்து இருந்தனர். அவரை விடுவிக்கக் கோரி குரு பூஜைக்கு சென்றவர்கள் சாலை மறியல் செய்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸார் மீது கல் எறிந்ததாக கூறி, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். இதில் 6 பேர் பலியானார்கள்.
அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் போலீஸார் தங்கள் தற்காப்புக்காகவும், பொது சொத்தை காப்பதற்காகவும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக கூறினார்.
கூடங்குளம் போராட்டம்
பட மூலாதாரம், Getty Images
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக திருநெல்வேலி மாவட்டம் இடிந்தக்கரையில் செயற்பாட்டாளர் எஸ்.பி. உதயகுமார், எம். புஷ்பராயன் மற்றும் எம்.பி.ஜேசுராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
பின் இந்த தாக்குதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது. மணப்பாடு அருகே போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார்.
போலீஸ் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் தொடுத்ததாகவும், இதில் ஐ.ஜி, டி.ஐ.ஜி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயம் அடைந்ததாகவும் போலீஸார் கூறினர். முதல்வராக இருந்த ஜெயலலிதா, அர்ப்பாட்டாக்காரர்களை அமைதி காக்கும்படியும், ரஷ்யா கூட்டுதயாரிப்பான இந்த அணு உலை பாதுகாப்பானது என்றும் கூறினார்.
மெரினா போராட்டம்
பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மெரினாவில் இளைஞர்கள் திரண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராட தொடங்கினர்.
இந்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவியது. தொடர்ந்து ஒரு வாரம் மெரினாவில் முற்றுகையிட்டு மாணவர்களும், இளைஞர்களும் போராடினர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஜனவரி 23 ஆம் தேதி காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடந்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
அமைதியாக தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் நுழைந்து விட்டதாக காவல் துறை குற்றஞ்சாட்டியது.
அப்போது தமிழக முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், "தேச விரோதிகளும், சமூக விரோதிகளும் இந்த போராட்டத்தில் உட்புகுந்து அமைதியாகப் போராடிய இளைஞர்களை தவறாக வழிநடத்தினர்." என்றார்.
பட மூலாதாரம், Getty Images
தங்களை போலீஸார் மிக மோசமாக தாக்கியதாக மெரினா அருகே இருந்த ரூதர்புரம் மற்றும் நடுக்குப்பம் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
ஸ்டெர்லைட போராட்டம்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
2018-ல் மே 22 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை நடத்திய மக்கள் நூறாவது நாள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் திரளாக வந்த பொதுமக்களை கட்டுப்படுத்தமுடியாமல், அறிவிப்பின்றி காவல்துறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிதறி ஓடினர். 13 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் பலியான சம்பவத்தில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் என்றும், துப்பாக்கிச்சூடு நடைபெறவுள்ளது என பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்தன.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்