மக்கள் போற்றும் ஒரு செவிலியரின் தியாகம்: நெகிழ வைக்கும் சம்பவம்

"உங்களை என்னால் மீண்டும் சந்திக்க இயலும் என்று எனக்கு தோன்றவில்லை. நம் குழந்தைகளை நன்கு வளருங்கள்."

படத்தின் காப்புரிமை DR DEEPU SEBIN/ TWITTER
Image caption லினி

இந்த துயர்மிகு வரிகளை எழுதியது 28 வயதான செவிலியர் லினி புதுசெரி. இந்த வரியை தமது கணவருக்கு அவர் எழுதி இருந்தார்.

நிபா வைரஸால் கேரளாவில் திங்கட்கிழமை (மே 21) உயிரிழந்த செவிலியர் லினி. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவருக்கு வயது ஐந்து, மற்றொருவருக்கு வயது இரண்டு.

நிபா தொற்று

கேரள மாநிலம் கோழிகோட்டில் பரவிய நிபா வைரஸால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏறத்தாழ 40 பேர் நோய் அபாயம் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை SK MOHAN

கேரள சுகாதாரத்துறை இந்த நிபா வைரஸை எதிர் கொள்ள மருத்துவ முகாம் அமைப்பதில் தீவிரமாக செயல்படுகிறது.

நிபா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரசாகும். இதன் பிறப்பிடம் 'fruit bats' எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.

நிபா வைரஸ் தாக்குதலுக்கு என குறிப்பாக சிகிச்சை ஏதும் இல்லை. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 70 சதவீதம் வரை இறக்க வாய்ப்பு இருக்கிறது.

செவிலியர் லினியின் தியாகம்

இந்த நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு லினி ஓர் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தார்.

ஆனால் அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை அவருக்கும் காய்ச்சல் வந்ததாக கூறப்படுகிறது.

தன்னையும் நிபா வைரஸ் தாக்கி இருக்குமோ என்று அச்சப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து, தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்கிறது உள்ளூர் ஊடகத் தகவல்கள்.

லினியின் கணவர் சஜீஷ் புதுசெரி பஹ்ரைனில் கணக்காளராக பணிப்புரிகிறார். அவரது சகோதரர் லினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை கூறியதும் கேரளா திரும்பினார்.

பிபிசியிடம் பேசிய சஜீஷ் புதுசெரி,"லினி என்னிடம் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதாகவும் கூறினார்." என்கிறார்.

புதுசெரி ஞாயிற்றுக்கிழமை பஹ்ரைனிலிருந்து கேரளா வந்தார். ஆனால், லினி அதற்கு முன்பாகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுவிட்டார்.

"லினியால் மூச்சுவிட முடியாததால், அவருக்கு பிராணவாயு அளிக்கப்பட்டது. அவளால் என்னுடன் பேச முடியவில்லை, என் கரங்களை இறுகப்பற்றி கொண்டார்." என்கிறார் புதுசெரி.

திங்கட்கிழமை காலை லினி இறந்தவுடன், லினி எழுதிய ஒரு கடிதத்தை அவரது உறவினர் புதுசெரியிடம் கொடுத்தார். இந்த கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள வரி அந்த கடிதத்தில்தான் இடம்பெற்று இருந்தது.

அந்த கடிதத்தை அவர் உள்ளூர் நிருபர் ஒருவரிடம் பகிர்ந்துக் கொண்ட பின் அந்த கடிதம் பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

லினியின் உடல், நோய் தொற்று காரணமாக அவரது உறவினர்களிடம் அளிக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

லினியின் மரணத்தை அதிகாரிகளும் மருத்துவர்களும் உன்னதமான தியாகம் என்று போற்றுகின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது (லினி) தன்னலமற்ற சேவை எப்போதுக் நினைவுகூரப்படும் என்று ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்