இந்தியாவில் தலித்துகள், முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா?

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் மக்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பது அவசியம், கோடிக்கணக்கான மக்கள் பற்றிய கவலைகள் எவை?

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

போர்ச்சுகல், ஹங்கேரி, ஸ்வீடன், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை நான்கு கோடி. இந்தியாவில் மிக அதிகமான மக்கள்தொகைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், ஏறக்குறைய இதே அளவு முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். இந்த 4 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் யாரும் நாடாளுமன்றத்தில் இல்லை.

இது மிகப்பெரிய கவலை என்றபோதிலும், முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை இந்தியாவில் எழுவதில்லை. உதாரணமாக, குஜராத்தில் 9% மக்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, 2017 சட்டசபை தேர்தல்களில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒருவரைக் கூட வேட்பாளராக நிறுத்தவில்லை.

பா.ஜ.கவின் ஹிந்துத்துவ அரசியல், முஸ்லிம்களை வெறும் வாக்குவங்கியாக மட்டுமே பார்க்கிறது, அரசியலில் அவர்களது பங்களிப்பை தடுக்கிறது. 80 சதவிகிதத்தினருக்கு எதிராக 14 சதவிகிதம் என்ற ஒரு புதிய விதி ஜனநாயகத் தேர்தல்களில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு ஜனநாயகம் என்பதன் பொருள் என்னவாக இருக்கும் என்பது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டவை 'திருப்திபடுத்தும் முயற்சிகள்' என்று பா.ஜ.க கூறினாலும், உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் திருப்தியாக, நிம்மதியாக இருந்தார்களா?

இல்லை. அவர்களின் தற்போதைய நிலை கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல, பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட அவர்கள், அரசியல் தந்திரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இங்குக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பா.ஜ.க உருவாக்கிய சூழ்நிலையையே, காங்கிரசும், பிற கட்சிகளும் பின்பற்றி முஸ்லிம் சமுதாயத்தினரிடம் இருந்து இடைவெளியை உருவாக்குகின்றன. அநேகமாக இந்த இடைவெளி எதிர்காலத்தில் மேலும் விரிவடையலாம்.

படத்தின் காப்புரிமை AFP Contributor

முஸ்லிம் மக்களுக்கு பல்வேறுவிதமான சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் முஸ்லிம்களின் தேசபக்தியை பற்றி பேசப்படும் அளவுக்கு இதுபோன்ற முக்கியமான விஷயங்கள் பேசப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றன. 'அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி' என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் 'அனைவர்' என்ற பதத்தில் 'முஸ்லிம்களும்' இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மக்கள்தொகை விகிதாசாரத்துடன் பார்க்கும்போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமானது அரசியலில் மட்டுமல்ல, பெருநிறுவனங்கள், அரசு வேலைகள் மற்றும் தொழில்முறை வேலைகளிலும் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அக்லாக், ஜுனைத், பஹ்லூ கான் மற்றும் அஃப்ராஜுல் போன்ற பலர் கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம் அவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான். "நரேந்திர மோதியின் ஆட்சியில் சிறுபான்மை மதத்தினரின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது" என்று சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்கன் ஏஜென்சி யு.எஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA

சஹாரன்புர் மற்றும் முஜாஃபர் நகர் போன்ற உத்தரப் பிரதேச மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறும் இந்த அறிக்கை, "பிரதமர் இனவாத வன்முறையை கண்டனம் செய்கிறார், ஆனால் அவருடைய கட்சியோ மக்கள் மீது வன்முறையைத் தூண்டி விடுகிறது."

காஸ்கஞ்ச், ஔரங்காபாத், ரோஸ்டா, பாஹல்பூர், ஆஸன்சோல் போன்ற பல நகரங்களில் நடைபெற்ற இனவாத வன்முறைகள் ஏறக்குறையே ஒன்றுபோலவே இருந்தன. சில சந்தர்ப்பங்களில், பா.ஜ.க தலைவர்கள் குழப்பங்களுக்கு காரணமாக இருக்கின்றனர். வன்முறையாளர்களின் இலக்குக்கு ஆளாவது முஸ்லிம்களின் கடைகளே.

இந்தியாவில் சுமார் 17 கோடி முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். உலகம் முழுவதும் 'இஸ்லாமோஃபோபியா' அதிகமாக இருக்கும் நிலையில், முஸ்லிமாக இருப்பதே குற்றமாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் அவர்களது பிரச்சனைகளை பட்டியலிட்டு ஆழமாக அலச வேண்டியது அவசியமாகும்.

தலித்துகளின் அரசியல் நிலைமை சற்றே மாறுபட்டது. ஏனெனில் இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினராக இருக்கும் இந்துக்களின் பெரும்பான்மையான வாக்குகள் அவர்களிடம் இருக்கின்றன. முஸ்லிம்களைப் போன்று அவர்களின் பங்களிப்பு இல்லாமல், அவர்களுக்கு அதிகாரம் கொடுக்காமல் அவர்களின் வாக்குகளை பெறுவது சாத்தியமல்ல. எனவே அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு தேவையானதை செய்வதாக வாக்களிக்க வேண்டியிருக்கிறது.

தலித்துகளின் நிலைமை

தலித்துகள் நிலைமை பல நூற்றாண்டுகளாக ஒரே மாதிரியாக தொடர்கிறது. இந்திய விடுதலைக்கு பிறகு அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு கிடைத்த உரிமைகளின் காரணமாக, அவர்களின் நிலைமை முன்னேற்றம் அடைந்தாலும், சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்த பிறகும் தலித்துகளின் நிலைமை பெரிய அளவில் முன்னேறவில்லை.

அரசியலமைப்பு விதிகளினால் தலித்துகளின் நிலைமையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவை தொடருமா என்பது பற்றி அவர்களின் மனதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தியதற்கு தலித்துகள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு இப்போது மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

எஸ்/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் நடைபெற்ற தலித்துகளின் எதிர்ப்பு, அதில் நிகழ்ந்த வன்முறை, அதை போலீஸ் கையாண்ட விதம் ஆகியவை நிறைய அனுமானங்களை ஏற்படுத்துகின்றன.

இட ஒதுக்கீடு தொடர்பாக ஆதிக்க சாதிகள் கொடுக்கும் அழுத்தமும் சீற்றமும் தற்போது வேறு விதமாக வெளிப்படுகிறது. இது மத்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை உருவாக்குகிறது.

ஹிந்துத்துவ அரசியலை வலுவாக ஆதரிப்பவர்களில் பிராமணர்களும், ராஜபுத்திரர்களும் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். இவர்கள் இட ஒதுக்கீட்டை பேரழிவாக கருதுகின்றனர். குஜராத்தில் ஊனா, உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் என தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. அதுமட்டுமா? தலித் மணமகன் குதிரையில் அமர்ந்தாலும் அவர்களுக்கு அது அவமானமாக இருக்கிறது. இதுபோன்ற மிக மோசமான நிகழ்வுகள் தினசரி நிகழும் சூழ்நிலையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வன்முறையாளர்களுக்கு பா.ஜ.க, 'வலுவான' ஆதரவளிக்கிறது.

தலித்துகள் மீதான ஆதிக்க சாதிகளின் அட்டூழியங்கள் விஷயத்தில் பா.ஜ.க தலைமை அமைதி காக்கிறது. ஏனென்றால் அவர்கள் யாரையும் ஆதரிப்பதாக அது வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால் மெளனத்தை 'தீவிர ஆக்கிரமிப்பு ஹிந்துத்துவா' வெறி கொண்டவர்கள், அரசு தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக புரிந்துக் கொள்கின்றனர்.

தலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்த ஒரு நிகழ்வை கூட இங்கு உதாரணமாக காட்ட முடியவில்லை ஊனாவில் தலித் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல நாட்களுக்கு பிறகுதான் பிரதமர் மோதி தனது மெளனத்தை கலைத்து, "தலித்துகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம், என்னைக் கொன்று விடுங்கள்" என்று கூறியதை நினைவுகூரலாம்."

மறுபுறம், போராட்டம் நடத்தும் தலித்துகளுக்கு எதிராக போலீசின் கடுமையான நடவடிக்கைகள், அவர்களின் பிரதான தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட பலரை சிறையில் அடைத்தது, பாதிக்கப்பட்ட தலித்துகளின் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி என பல விஷயங்களை சொல்லலாம். பீமா கோரேகான் வன்முறை சம்பவத்தில் பல நாட்கள் குற்றவாளியை கைது செய்யாதது போன்ற தலித்துகளின் அச்சத்தை அதிகரிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவது பற்றி அனந்த் குமார் ஹெக்டே ஒரு சந்தர்ப்பத்தில் பேசினால், வேறொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி பேசுகிறார் சி.பி. தாக்கூர். இது போன்றவற்றால் தலித் சமுதாயத்தினரிடையே அச்சம் நிலவுகிறது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள்தொகையில் தலித்துகளின் எண்ணிக்கை சுமார் 20 கோடி ஆகும். அவர்களின் தற்போதைய நிலையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.

பிபிசியின் சிறப்புத் தொடர்

இது போன்ற காரணங்களால் தலித்துகளும் முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஒரு சிறப்புத் தொடரை உங்கள் முன் படைக்கிறது பிபிசி.

எதிர் வரும் நாட்களில், தர்க்க ரீதியான மற்றும் சமநிலையான பகுப்பாய்வை நீங்கள் கேட்கலாம், பார்க்கலாம், படிக்கலாம். பேசப்பட வேண்டிய, ஆனால் தவிர்க்கப்பட்டு வரும் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பிரச்சனை சமூகத்தில் மட்டுமல்ல, நாட்டின் ஊடகங்களிலும் பெரிய அளவில் பேசப்படுவதில்லை. இவர்களின் நிலையை உங்கள் முன் வைப்பதே இந்த சிறப்புத் தொடரின் நோக்கம்.

பிபிசியின் இந்த சிறப்புத் தொடரில், இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்காலம் பற்றி விரிவாக விவாதிக்கப்படும்.

இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள், தலித் அல்லது முஸ்லிம்களாக இருக்கிறார்கள். இவர்களின் பிரச்சனைகளைப் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும், ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரை அது நடக்கவேயில்லை.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் கூற்றை சற்றே நினைவுகூர்வோம், "ஜனநாயகத்தின் அடையாளம் என்பது, அதன் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதே ஆகும்."

மிக முக்கியமாக, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்று இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் எழுதப்பட்ட மூன்று சொற்களின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும் புரிந்துக் கொள்ள விரும்பினாலும் இந்த தொடர் உங்களுக்கானது என்று உறுதியாக சொல்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: