பெண் அரசியல்வாதிக்கு இரு கணவர்கள் இருந்தால்?

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற எச்.டி.குமாரசாமி, தன்னுடைய பெண் குழந்தையுடனும், ராதிகா குமாரசுவாமி ஆகியோருடனும் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN / Getty images

வாட்ஸ்-அப்பில் பரவிவரும் நையாண்டி செய்திகளில் இயற்கை என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த ராதிகாவின் அழகு, காங்கிரஸ் மற்றும் மஜகவை இணைக்கும் பசையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

நையாண்டி, நகைச்சுவை என்ற நினைப்பில் பகிரப்படும், வாசிக்கப்படும் இந்த அபத்தங்கள் 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்ற நினைப்பில் உருவாக்கப்படுகின்றன.

எச்.டி.குமாரசாமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? அல்லது நடிகை குட்டி ராதிகாவுக்கு, குமாரசாமியுடன் 'சட்டவிரோத தொடர்பு' இருந்ததா? அவர்களுக்கு மகள் இருக்கிறாரா? அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்களா? என்ற பல கேள்விகளை எழுப்புகிறது இந்த சமூக ஊடக பகிர்வுகள்.

அண்மை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் எச்.டி.குமாரசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் முதல் மனைவி அனிதாவின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அவர் பொதுதளத்தில் மனைவி என்று ராதிகா குமாரசாமியை ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.

குமாரசாமி மட்டுமல்ல, இந்திய அரசியல்வாதிகளில் பலர் முதல் மனைவி இருக்கும்போதே, வேறொரு பெண்ணுடன் காதல் உறவை உருவாக்கிக் கொண்டுள்ளனர் அல்லது இன்னொரு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தந்தையும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் வாரிசு.

தி.மு.க தலைவர் டி.ஆர். பாலு தன்னுடைய தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனது இரு மனைவிகளின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பல ஆண் அரசியல்வாதிகள் தங்கள் இரண்டாவது மனைவியின் பெயரை தயக்கமில்லாமல் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஆனால் கணவர் இருக்கும்போதே காதல் உறவுகளை வளர்த்துக்கொண்ட ஒரு பெண் அரசியல்வாதியை நமது அரசியல் வட்டாரத்தில் காண முடியாது. கணவரை விவாகரத்து செய்யாமல் வேறொரு ஆணுடன் வசிப்பவர் அல்லது இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கும் ஒரு பெண் அரசியல்வாதி என்று யாரையும் நீங்கள் சுட்டிக்காட்ட முடியாது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிர்ச்சியாக இருக்கிறதா? இந்த கருத்தே விசித்திரமாக இருக்கிறதா? ஆண் அரசியல்வாதிகளின் பெயர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மனதில் தோன்றினாலும், பெண் அரசியல்வாதிகளின் பெயர் நினைவு வரவில்லையா? சரி, ஆண்களைப் போன்றே பெண்களும் உடல், உயிர் உணர்வு கொண்ட மனிதப் பிறவிகள் தானே?

ஆனால் ஆண் அரசியல் தலைவர் பற்றி இதுபோன்ற விஷயங்கள் எந்த கேள்வியும் இல்லாமல், அதிர்ச்சியடையாமல் இயல்பாக நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு சில நாட்களுக்கு சமூக ஊடகங்களில் பரவலாகி, பிறகு காணாமல் போய்விடும். ஆனால், ஒரு பெண் அரசியல்வாதி இவ்வாறு செய்தால், அது இதுபோன்ற கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா?

ஆண் தலைவர்கள் காதல் உறவுகளை உருவாக்கி கொண்டாலும், இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்கின்றனர், அவர்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முதல் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்வது, இந்திய குற்றவியல் சட்டத்தின் 494 பிரிவின்கீழ் சட்டவிரோதமானது.

இருந்தபோதிலும், கருணாநிதி மற்றும் டி.ஆர் பாலு போன்ற பல ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டபோதிலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. (இந்த சட்டம் வருவதற்கு முன்பே தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கனிமொழியின் தாய், ராஜாத்தி அம்மாளுடன் திருமணம் நடந்துவிட்டது.)

இதற்கு காரணம் சட்டம் தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க முடியாது. அதாவது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் அல்லது மனைவி மீது முதல் மனைவியோ அல்லது முதல் கணவனோ வந்து புகார் அளிக்காத வரையில் சட்டம் கைகட்டி காத்திருக்க வேண்டும்.

முஸ்லிம் பெண்களுக்கு பொருந்தும் இந்த சட்டம், முஸ்லிம் ஆண்களுக்கு பொருந்தாது. நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று 'முஸ்லிம் தனிநபர் சட்டம்' முஸ்லிம் ஆண்களுக்கு விலக்கு அளித்துள்ளது.

அவர்கள் ஐந்தாவது திருமணம் செய்துக் கொள்வது சட்டத்திற்கு புறம்பானது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், முதல் மனைவி சம்மதம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இரண்டாவது திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடையாது.

படத்தின் காப்புரிமை Getty Images

கணவரின் பரம்பரை சொத்துக்கு இரண்டாவது மனைவி உரிமை கோர முடியாது. உயிலில் இரண்டாவது மனைவிக்கு சொத்து எதுவும் எழுதி வைக்காவிட்டால் அதிலும் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

கணவருக்கு சேர வேண்டிய பணம், சொத்து, ஓய்வூதியம் போன்ற எதற்கும் இரண்டாவது மனைவி உரிமை கோர முடியாது.

2009ஆம் ஆண்டில், இரண்டாவது திருமணம் தொடர்பாக பரிந்துரை செய்த 'இந்திய சட்ட ஆணையம்' இதை 'குற்றமாக கருதலாம்' என்று கூறியது, இதனால் முதல் மனைவி எதாவது அழுத்தத்தினாலும், கட்டாயத்தினாலும், தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி புகார் செய்யாமல் இருந்தாலும், அந்த நபருக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் இந்த பரிந்துரை இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, இது தவறு என்றோ நினைக்காமல் அரசியல் தலைவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தொடர்கிறது.

நான் இரண்டாவது மனைவியைப் பற்றி இதுவரை சொன்ன அனைத்துமே இரண்டாவது கணவருக்கும் பொருந்தக்கூடியது.

ஆனால், அரசியலில், பல தடைகளை தாண்டி உள்ளே வரும் பெண்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்ள முடியாது.

சமூகம் பெண்களுக்கு ஒருபோதும் அத்தகைய இயல்பு நிலையை வழங்காது. உறவு அல்லது இரண்டாவது திருமணம் பற்றிய எண்ணம் எழுந்தால் அதை அவர்கள் வெளிப்படையாக பேசும் சூழல் இல்லை. அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டாலும் அதை மனதிலேயே புதைத்துக் கொள்ளவேண்டும்.

நீங்களே சொல்லுங்கள், ஒரு பெண் அரசியல் தலைவியின் இத்தகைய உறவை புறக்கணித்து செல்வேன் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: