''அத்துமீறல்களில் காவல்துறையை அரசு காப்பாற்றினால் துப்பாக்கிச்சூடும் படுகொலையும் தொடரும்''

  • அ மார்க்ஸ்
  • மனித உரிமை செயற்பாட்டாளர்

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருடைய சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

தூத்துக்குடி மக்களையும், பெரிய அளவில் அப்பகுதியின் சுற்றுச் சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று துப்பாக்கிச் சூடு, மரணங்கள், கைதுகள் என்கிற நிலையை எதிர் கொண்டுள்ளது.

இந்தக் கட்டுரையை 'டைப்' செய்து கொண்டுள்ளபோது கிடைத்துள்ள செய்திகளின்படி நேற்றைய (மே 22, 2018) துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 12. ஆனால் இன்னும் கூடுதலானோர் இறந்துள்ளனர் என மக்கள் சொல்கின்றனர்.

65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். எராளமான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தினை கொடூரமாக எதிர்கொண்ட பின்னும், நேற்று இரவு முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுள் வெனிஸ்டா என்கிற பள்ளி மாணவி (17), புரட்சிகர இளைஞர் முன்னணி எனும் அமைப்பைச் சேர்ந்த தமிழரசன் (45) முதலானோர் அடக்கம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து தீவைத்தனர் அதனால்தான் துப்பாக்கிச் சூடு நடத்த நேர்ந்தது என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் கேள்விப்படும் தகவல்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. போராட்டக் குழுவினர் போராட்டத்திற்கு முதல் நாள் கூடியபோது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர். அதை ஒட்டி ஊர்வலமாகச் சென்று, எந்த இடத்தில் காவல்துறையினர் தங்களை மறிக்கிறார்களோ அங்கேயே உட்கார்ந்து கைதாவது என்றுதான் முடிவெடுக்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் என்பதை ஒட்டி மிகப் பெரிய அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையைக் குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்துள்ளன. இந்நிலையில் மக்கள் எவ்வாறு உள்ளே நுழைந்து தீ வைத்திருக்க முடியும் என்கிற கேள்விக்குப் பதில் இல்லை. காவல்துறையினரே தீ வைத்தனர் என்பதைப்போல சில காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் ஓடிக் கொண்டுள்ளன.

துத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் இதுவரை எதுவும் கருத்துக்கள் கூறவில்லை. துப்பாக்கிச் சூட்டின்போது அவர் அலுவலத்தின் உள்ளே இருந்தாரா, துப்பாக்கிச் சூட்டிற்கு அவர் உத்தரவு அளித்தாரா, இல்லை காவல்துறை தன்னிச்சையாகச் சுட்டதா என்றெல்லாம் தெரியவில்லை. அதேபோல திரேஸ்புரம் மீனவ மக்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக மக்கள் திரண்டு வந்த இடங்கள் அல்லது அவர்கள் கல்லெறிந்ததாகச் சொல்லப்படுகிற இடங்கள் தவிர மீனவர்கள் அதிகமாக வசிக்கும் திரேஸ்புரம் போன்ற பகுதிகளில் கூடிப் பேசிக் கொண்டிருந்த மக்களையும் அங்கு போய் சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்றிரவும் பெரிய அளவில் அப்பகுதியில் வீடு புகுந்து மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலைமை இப்படி ஆனது பற்றிக் கேட்கும்போது வருவாய்த் துறையினர் காவல்துறையைக் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படியெல்லாம் நடக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்ய உளவுத்துறை தவறிவிட்டது என்கின்றனர். உளவுத் துறையினரோ உள்ளூர்க்காரர்களைக் காட்டிலும் வெளியூரிலிருந்து வந்தவர்களே (outsiders) எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறியுள்ள செய்தி இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்துள்ளது. யார் இந்த வெளி ஆட்கள்? ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் மற்றும் கூடங்குளம் முதலான போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்ட முகங்கள் பல இந்தப் போராட்டத்திலும் இருந்தன என அவர் பதில் சொல்லியுள்ளார்.

அவர் அத்தோடு நிறுத்தவில்லை. அடுத்தகட்டமாக அப்படியான வெளியார்கள் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சொல்லியுள்ளார். ஆக "தீவிரவாதிகள் ஊடுருவல்" எனச் சொல்லி, சுட்டுக் கொல்வது உட்பட நேற்று மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை நியாயப்படுத்துவது என்கிற நிலைக்கு இன்று தமிழக அரசும் அதன் காவல்துறையும் சென்றுள்ளன.

அது மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடல் என்பது எல்லா மக்களையும் பாதிப்பதுதான். ஜல்லிக்கட்டு முதலானவையும் பொதுவான தமிழ்ப் பண்பாடு என்கிற அடிப்படையில் எல்லாத் தமிழர்களும் நடத்தும் போராட்டம்தான். கல்பாக்கத்தில் அணு உலை வெடித்தால் சென்னை நகரமே அழியும். இது போன்ற பிரச்சினைகளில் மக்களை "உள்ளூர் X வெளியூர்" (Outsiders X Insiders) என்றெல்லாம் பிரித்து வெளியார்கள் = தீவிரவாதிகள் (Outsiders = Outlaws) என மேற்கொள்ளப்படும் மொழி விளையாட்டு மிகக் கொடூரமான ஒன்று.

சென்ற ஆண்டில் தெலங்கானாவிலிருந்து சட்டிஸ்கர் சென்ற ஒரு உண்மை அறியும் குழுவினர் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் ஆறு மாதங்கள் வரை சிறையிலிருந்தனர். கூடங்குளம் போராட்டத்தில் அப்படி வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒரு உண்மை அறியும் குழுவினர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாள் போனால் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குப் போவதற்கே 'விசா' வாங்க வேண்டும் எனச் சொல்வார்கள் போல. அதெல்லாம் மேகாலயா போன்ற மாநிலங்களில் இன்று நடைமுறையில் இருப்பதுதானே. ஏதாவது போராட்டம் நடக்கிறதென்றால் அந்த மாவட்டத்துக்குள்ளேயே போகக் கூடாது எனச் சொல்லவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

போராட்டங்களை இப்படி ஒடுக்குவது என்பதைத் தமிழக அரசு சமீப காலமாக ஒரு வழக்கமாக்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் அப்படித்தான் அவர்கள் இறுதி நாளில் கடும் தடியடிப் பிரயோகத்தின் மூலம் ஒடுக்கினார்கள். கூடங்குளம் போராட்டத்தின் இறுதியில் ஆயிரக் கணக்கானோர் மீது வழக்குத் தொடுத்தார்கள். போராட்டக்காரகளுக்குத் தொழில் ரீதியில் விளம்பரப் பலகைகள் எழுதியவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளினார்கள்.

வாய்ப்புக் கிடைத்தால் காவல்துறை மிகக் கொடூரமாக நடந்துகொள்வது என்பது தமிழகத்தில் வழக்கமாகி விட்டது. 1999 ல் தாமிரபரணி ஆற்றில் 17 பேர்களைச் சுட்டுக் கொன்றனர். 2011 ல் பரமக்குடியில் ஆறு பேர்களைச் சுட்டுக் கொன்றார்கள். இன்று தூத்துக்குடியில் அவர்களின் வெறியைக் காட்டியுள்ளனர். இப்படியான எல்லா அத்துமீறல்களிலும் காவல்துறையைக் காப்பாற்றியே தீருவது என்பதை அரசுகள் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும்வரை இப்படியான துப்பாக்கிச் சூடும் படுகொலைகளும் தொடரத்தான் செய்யும். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த சில வாரங்களில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா காவல்துறையினருக்குப் புதிய சலுகைகளை அறிவித்தது நினைவுக்குரியது.

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மக்களின் எதிர்ப்புகளை மீறி 1996 முதல் இயங்கி வருகிறது. தூத்துக்குடி 'சிப்காட்' டில் இயங்கி வரும் அது ஆண்டுக்கு 4 இலட்சம் டன் தாமிரத்தையும், அதோடு பாஸ்பாரிக் மற்றும் கந்தக அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த ஆலையிலிருந்து வரும் கழிவுகள் புற்று நோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் காரணமாக உள்ளன. இதை மூடவேண்டும் என மக்கள் கோரிக் கொண்டுள்ள நிலையில் மேலும் 4 இலட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவில் அது விரிவாக்கம் செய்ய இருப்பதை மக்கள் அச்சத்தோடு எதிர்கொண்டு தீவிரமாகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று முதலமைச்சர் எடப்பாடி அரசு இது குறித்துச் சட்ட ரீதியாகப் போராடி வருவதாகச் சொல்லியுள்ளார். கழிவுத் தொட்டி சரியாக இல்லை என்பதுபோல காரணங்களைக் காட்டித்தான் அரசு அந்த ஆலையை மூட வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்துள்ளது. அப்படியான கோரிக்கைகளையும் கூட நிறைவேற்ற முடியாதென்றுதான் வேதாந்தா நிறுவனம் வழக்கை இழுத்தடிக்கிறது. இந்நிலையில் சட்டபூர்வமாகப் போராடுவோம் என எடப்பாடி சொல்லி வருவது மக்கள் காதில் பூ சுற்றுகிற வேலை.

கமலஹாசன் போன்ற 'புதிய அரசியல்' செய்யக் களம் புகுந்துள்ள நடிகர்கள் இப்படிக் கொடூரமாக மக்கள் போராட்டங்களை அரசு எதிர்கொள்வதைக் கண்டிக்காமல் "இரத்தம் சிந்துகிற மாதிரியான போராட்டம் நடத்துவது தவறு" என மக்களுக்கு அறிவுரைகள் சொல்வது அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுகிறது..

கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆளுக்குப் பத்துலட்சம் தருவதாக அறிவித்துப் புன்னகைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி. "இப்படியான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூடு தவிர்க்க இயலாது" என மீசையை முறுக்குகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

தூத்துக்குடி நகர் முழுவதும் கடைகள் மூடிக் கிடக்கின்றன. திரை அரங்குகளில் இரண்டு நாட்களாகப் படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. 2500 காவல்துறையினர் சூழ நின்று நகரமே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போலக் காட்சி அளிக்கிறது. ஒரு துக்கவீடாக இன்று சோகம் கப்பிக் கிடக்கிறது அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற கடலோர நகரம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: